Thursday, December 15, 2011

முக்கூடல்






அறம், பொருள் , இன்பம் !


காட்சி, நெருக்கம், வருடல் !
மௌனம் , சொல் , காவியம் !
ஊடல், கூடல், திருமணம் !
பிரிவு, தனிமை, ஏக்கம் !


வீரம், கோபம், யுத்தம் !
ரத்தம் , வலி , கண்ணீர் !
வெற்றி, வாகை, நடனம் !
தோல்வி, சிறை, மரணம் !


நீ, நான் , காதல் !

Tuesday, December 13, 2011

பொன் வண்டு !


என் சிறுவயதில்
குச்சிப் பெட்டிக்குள்
குவிந்திருக்கும்
கோவை இலைகளுக்குள்
விளையாடும்
பொன் வண்டுகள் !

நான் தாலி கட்டிய
அத்தனை
பொன் வண்டுகளும்
அறுத்துக் கொண்டு
ஓடின - கடைசியாய்
தாலி அறுத்தவளின்
கழுத்து இடுக்கு கத்தி
சிக்கிய என் விரலில் குத்தி
உறைத்தது புத்தி !
அதன் பின் சிக்கிய
எல்லா வண்டுகளுக்கும்
'கால் கட்டுகள்' தான் !

அடுத்தவன் பிடித்து
வைத்திருக்கும்
பொன் வண்டுகளை
சுதந்திர வானில்
பறக்க விட்டு ரசிப்பதும்
எனது பொன் வண்டுகளை
பத்திரமாய்
ரசகியப் படுத்துவதும்
ஆரம்ப பள்ளியில்
ஆரம்பத்திலே கற்றுக் கொண்ட
(ஆண்) மனோபாவம் !

கட்டிய நூலினை
இழுத்துக் கொண்டு
நூலிழையில் தப்பிப் போனது
ஒரு பொன் வண்டு !
சுதந்திரத்திற்காக - அது
விட்டுப்போனது
ஒரு கால் துண்டு !

.........

எதிலும் கொஞ்சம்
வித்தியாசமானவள் நீ !
அதிசயங்களை
அலட்சியப் படுத்துபவள் !
அலட்சியங்களை
ஆச்சரிய மூட்டுபவள் !

பூவே  உன்னிடம்
பூவை நீட்டி
பூத்தது காதல் என்றேன் !
நீ "எனக்கும் தான்"
என்றதும் எனக்கு நீ
பொன் வண்டானாய் !

அந்த பொன் வண்டுகள்
போல் என் இம்சைகளுக்கு
பயந்து ஓடி விடாமல்
பதிலுக்கு பதில்
கடித்துக் கொண்டே என்னோடு
பயணிக்கிறாய் !
மயில் கழுத்து நீட்டி
வேண்டும் உன் தாலி என்கிறாய் !
ஊரைக் கூட்டி எப்போது
போடுவாய் 'கால் கட்டு' என்கிறாய் !

இதற்கெல்லாம் நன்றியாய்
நானும் செய்வேன் அந்த
பொன் வண்டுகளுக்கு
செய்யாத ஒன்றை : நிறுத்துவேன்
உன் சுதந்திரத்திற்கு
குறுக்காக கோடுகள் கிழிப்பதை !

உன் பாதையும் என் பாதையும்
நம் பாதை என்றான பின்
உனக்கு முன்னால் ஓடி
உன் வழி மறைப்பது
வேலையத்த வேலையடி
வேறொன்றும் சொல்வதற்கில்லை !

           - இவண்
              பெரமு 

Tuesday, November 15, 2011

எங்கே போனாய் ?

     - என்னுள் மரணிக்கும் கவிதைகள் !!!



எங்கே போனாய் ?
நீயும் நானும்
கல்லூரி காலங்களில்
கைகளை குலுக்கிக்
கொண்டோம் !

முதலாண்டு மாணவர்கள்
எல்லோரும் - உங்களில்
ஒருவரை இழுத்து
வந்து தமிழ் ஆசிரியரிடம்
கொடுத்தே ஆக வேண்டும்
அதிரை கல்லூரியின்
வழக்கம் அது !

உன்னை விட்டு
தப்பிவிடத்தான்
பார்த்தேன் - ஆசானின்
மீசை கொஞ்சம் கோபமாக
முறுங்க - என் கைக்குள்
அகப்பட்டாய் நீயும் !

அந்தோ பரிதாபம் - உன்னை
வீட்டிலே விட்டுவிட்டு
வந்து தொலைத்தேன் !
தொலைந்தேன் என
நொந்து நான் புலம்புகையில்
காடு மேடுகளின்
குறுக்கில் பாய்ந்து
கந்தலாய் வந்து நின்றாய் !
ஆசானின் பைக்குள்
எனக்காக சரணடைந்தாய் !

மொத்த கல்லூரி மாணவர்கள்
பிடித்து வந்த அத்தனை
பேருக்கும் ஒரே பெயர்தான் !
உண்மையில் ஆசான்
சொன்னதும் ஒரே பெயர்தான் !
அன்றுதான் தெரிந்தது
ஒரே பெயரில் இத்தனை பேர்
இருப்பதும் !

திடீரென ஒருநாள்
தமிழ் ஆசான்களின்
பாராட்டு மழை
வகுப்புக்குள் வந்தே
என் தலைக்கு மேல்
கொட்டியது :
"நீ இழுத்து வந்தவன்
பெயருக்கு பொருத்தமாய்
இன்னும் பிற லட்சணங்களோடு
முதலாவதாய் தேறிவிட்டான்"

ஏனோதானோ என்று
இழுத்துவந்த உன்னுள்
ஏகபோகமாய் இருப்பதை
நானறிந்தேன் - உன்
வலிமையையும் சக்தியும்
தானறிந்தேன் - உயிர்
தோழன் ஆனாய் !
போதாக்குறைக்கு என்
காதல் தீயில் நீ
ஆத்ம வேள்வி நடத்திக்
கொண்டாய் !

நீ அழைக்கும் போதெல்லாம்
நான் உடனே தயாராக வேண்டும்
போட்டது போட்டபடி !
நான் அழைத்தால் மட்டும்
உன் விருப்பம் - வந்தால்
வருவாய் !

வறுமையை , நோயை
காணும்போது கண்களின்
சிவப்பாய் கொப்பளிப்பாய் !
அழகில் நான் மயங்கும் போது
காதுகளில் வந்து கிசு கிசுப்பாய் !
அடுத்தநாள் தேர்வுக்கு
படிக்கும் நேரம் ஜன்னலை வந்து
தட்டுவாய் ! - தேர்வின் போது கூட
அறையின் வாசலை இங்கும்
அங்கும் கடந்து போவாய் !
என் ஒவ்வொரு உணர்ச்சிக்கும்
ஏதோவொரு பெயரில்
உன்னை உருமாற்றிக் கொள்வாய் !

பிழைபென்னும் பாதையில்
பயணிக்க நான் தொடங்கியதும்
எப்போதாவது உனக்காக
கதவுகளை திறப்பேன் !
பிற்பாடு நீ கதவை இடிக்கும்
சத்தத்தை கூட
கேட்டுக் கொள்வதில்லை !
நீயோ விடாமல் என்னோடு இருக்கவே
ஆயிரம் முயற்சிகள் எடுத்தாய் !

மழையின் சாரலில்
தொங்கிக் கொண்டு வந்தாய்
குடையை விரித்துக் கொண்டேன் !
காலையிலும் மாலையிலும்
சூரியனின் மேற்புறத்தில்
நடனமாடி பார்த்தாய் !
நானோ காலையில் மேற்கிலும்
மாலையில் கிழக்கிலும்
அமர்பவனாய் ஆகிப் போனேன் !
உப்பிக் கரையும் நிலவில்
குட்டிகரணம் போட்டாய் !
நானோ அமாவாசைகளில்
இரவை அண்ணார்ந்து பார்பவனாய் !
என் மீது மோதும் தென்றலின்
கை பிடித்து வந்து
முத்தமிட்டு போனாய் !
எறும்புக் கடியோ என்று
கன்னத்தை தடவிக் கொண்டேன் !

மெல்ல திறந்திருந்த
ஜன்னலை இன்று நான்
படார் என சாத்தும் நேரம்
பாவி நீ இடுக்கின் வழி
நுழைந்து கொண்டுருப்பதை
அறியாமல் போனேனே !
நீண்ட நாளாய் மறந்துபோன உன்னை
என் மனச் சட்டையில்
தெறித்த உன் இரத்தம்தான்
நினைவூட்ட வேண்டுமா?

இதோ பார் உனக்காக
நான் மீண்டும்
இதயம் திறக்கிறேன் !
எழுதுகோல் எடுக்கிறேன் !
உன் ஆவியை நீயும்
மீண்டும் புகுத்திக் கொள் !

உன் முதல் பெயர்
இன்னும் என் நினைவில்
இருக்கிறது :
"காலனுக்கு கண்ணில்லை"

சந்தித்த திங்கள் :
"குடந்தையில் குழந்தைகளை
கருக்கிப் போட்ட கருப்பு
மாதம்" [ஜூலை 2004]

நீயாக வருகிறாய்
உன்னை நான் வெறுமனே
எழுதிப் படிக்கிறேன் !
உன்னை சிறந்த கவிதை
என்றால் பெருமைதான் !
கூடுதலாய் என்னை கவிஞன் என்றால்
எனக்கே சற்று நகைப்புத்தான் !

                              - நன்றிகளுடன்
                                பெரமு 

Sunday, October 2, 2011

இசை என்னும் இன்ப வெள்ளத்தில் நீந்த ...

"உன் இசை என்ற இன்ப வெள்ளத்தில் நீந்த ஓடோடி வந்த என்னை ஏமாற்றாதே spotify - பாடு " என்று மெச்சும் அளவிற்கு இசை பிரியர்களுக்கு என சுவீடனின் அன்பளிப்பு இந்த சேவை மென்பொருள். உப்சலா பல்கலை கழகத்தோடு நெருங்கிய தொடர்பு இந்த நிறுவனத்திற்கு உண்டு என்பதால் , சில பாடங்களுக்கு விரிவுரை எடுக்க இந்த நிறுவனத்திலிருந்து அவ்வபோது சில வல்லுநர்கள் வருவதுண்டு. அப்படி கிடைத்த அறிமுகம் தான் எனக்கு.

இந்த சேவைக்கு பின் புலத்தில் இருக்கும் சிக்கலான தொழில் நுட்பங்களையும், நடைமுறை சிக்கல்களையும் நேர்த்தியாக விளக்கினார்கள். 



உடனே பதிவிறக்குங்கள் இங்கே.   என்னுடைய கணினியில் இருந்து ஒரு திரை பதிவு 



பதிவிறக்கி சேமித்து வைத்து பாடல் கேட்பது வேலையத்த வேலை என நினைப்பவர்களுக்கு இது ஒரு வரம். யானுறும் இன்பம் பெருக இவ்வையகம் !!! 




Friday, September 9, 2011

பூக்கார அக்கா


யாக்கோ ? மணக்கும்
பூக்களை தொடுக்கும்
உனக்கு - வாழ்க்கை
மணக்கிறதா ? இல்லை
2 ரூபாய்க்காக,
உன்னிடத்தில் வந்து
செருப்பை கழட்டி
போடுபவர்கள் போல
வாழ்க்கையும் - தன்
செருப்பை
உன்னிடத்தில்
கழட்டி போடுகிறதா?

இடம் : மயிலை , சென்னை - ஆண்டு : 2007

Thursday, August 25, 2011

பஞ்ச தந்திரதிலிருந்து ஒரு கதை

இருதலைகள் கொண்ட பறவை



முதலில் பஞ்ச தந்திரம் என்றால் என்ன?

1.மித்திர பேதம் - நட்பை கெடுத்து பகை உண்டாக்குவது
2.மித்ரலாபம் - தங்களுக்கு இணையானவர்களுடன் கூடி பகை   
                                 இல்லாமல் வாழ்வது
3.சந்தி விக்ரகம் -பகைவரை உறவு கொண்டு வெல்லுதல்
4.லப்தகாணி (artha nasam) -கையில் கிடைத்ததை அழித்தல்
5.அசம்ரெஷிய காரியத்துவம் - எந்த காரியத்தையும் விசாரணை 
                                                                   செய்யாமல் செய்வது.

கி.மு மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த விஷ்ணு சர்மாவால் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட 86 கதைகளின் தொகுப்பே இந்த பஞ்ச தந்திர கதைகள். விலங்குகளை கொண்டு மனிதனுக்கும், ஏன் அரசனுக்கும் அறம் போதிக்கும் கதைகள் இவை. 

எடுத்துக் கொண்ட கதைக்கு வருவோமா.


அழகான ஒரு ஏரியின் கரையில் , அதிசயமான ஒரு பறவை வாழ்ந்து வந்தது, அதற்கு ஒரு உடல், இரண்டு தலைகள். இரண்டு தலைகளும் , ஒற்றுமையாக நேசம் கொண்டு பல நாட்கள் வாழ்ந்து வந்ததன. 

ஒரு நாள் , அமுதம் போன்ற ருசியான ஒரு பழத்தை ஒரு தலை கண்டது. எடுத்து ருசித்ததும், "ஆகா என்ன சுவை" என்றது மற்றொரு தலையிடம். இதைக் கெட்டு மற்றொரு தலை "எனக்கும் கனி தா" என்றது கனிவாய்.

பழத்தின் சுவையில் மயங்கிய அந்த தலையோ, "நம் இருவருக்கும் உடல் ஒன்று தானே, நான் தின்றால் என்ன? நீ தின்றால் என்ன?" என்றது. இது நாள் வரை எல்லாவற்றையும் பகிர்ந்து உண்டுவந்த அந்த தலைகளுக்குள் இப்படி பகை மூண்டது.  

ஏமாந்த தலை பழி வாங்கும் தருணம் பார்த்து காத்து இருந்தது. ஒரு நாள் , விஷக் கனி ஒன்று அதன் கண்ணில் பட்டது. அதை அந்த தலை உண்ணப் போவதைப் பார்த்ததும், பதறிப் போய் கத்தியது மற்றொரு தலை "உண்டு விடாதே , இருவருக்கும் ஆபத்து" என்றது. ஆனால் பழிவாங்கும் உணர்ச்சியில் 
அதைக் கேட்காமல் ஏமாந்த தலை உண்டு விட்டது. அந்த பறவை இரு தலைகளும் தொங்க இறந்து விழுந்தது. 

இந்த கதையிலிருந்து பல கருத்துக்களை புரிந்து கொள்ள முடியும். ஒவ்வொருவரும் தங்கள் புரிந்து கொள்ளல் மற்றும் அனுபவங்களுக்கு ஏற்ப தங்கள் வாழ்வின் பல நிகழ்ச்சிகளுக்கு வேறு வேறு கோணங்களில் பொருத்தி பார்க்க முடியும். "அமுதமே ஆனாலும் அதை பகிர்ந்து உண்ண வேண்டும்" ,"துணை என்பது அவசியம்-ஒருவருக்கு ஒருவர் பகை இல்லாமல் இருத்தலும் அவசியம்"என்பதே இக்கதையின் அடிப்படை கருத்து. 


உங்களுக்கு இப்படி கதை சொல்லி கருத்து கந்தசாமி என்று பெயர் எடுக்கும் ஆசை இல்லை. எனக்கு ஒரு மலையாளப் பாட்டு பிடிச்சு இருந்தது. அதை கேட்கச் சொன்னா ஒண்ணுமே புரியலைன்னு கேட்காம ஓடிருவிங்க, அதுக்குத்தான் இந்த கதை. இந்த பாட்டுல இந்த கதையை அசல் மலையாள நடையில் எவ்வளவு அழகா நெடுமுடி வேணு அவர்கள் பாடுகிறார், கேளுங்கள்.


தாளம் என்ற ஜோப் எனும் இளம் பாடகனின் ஆல்பத்தில் இந்த பாடல் இடம் பெறுகிறது. நம் கமலின் "சுந்தரி நீயும்" குரல் போல லேசாக தோன்றுகிறது. 



உங்கள் மூளைக்கு ஒரு கருத்தும் , இதயத்திற்கு ஒரு நல்ல பாட்டும் கொடுத்து விடை பெறுவது

                                  உங்கள் பெரமு 

Tuesday, August 23, 2011

கண்ணீர் பூவிண்டே கவிலில் தலோடி !



ஒரு காலத்தில் மலையாள பாடல்கள் என்றால் அறுவை என்று இருந்தேன். அது எவ்வளவு பெரிய இழப்பு என்பது இப்போதுதான் தெரிந்து கொண்டேன். தவித்திருக்கும் தனிமை, மரங்கள் நெருங்கி சூழ்ந்த வனப்பு, மழைக் கொட்டி நின்ற ஈரம் வீசும் பொழுதுகள், லேசாக திறந்த சன்னலின் வழி திரண்டு வந்து உடல் சீண்டும் காற்று, இப்படி அடிக்கிக் கொண்டே போகிற மாதிரியான உயிப்பான பாடல்கள் சில கேட்க நேரிட்டது. அழுத்தங்களை ஒதுக்கி வைத்து அந்த பாடல்களுக்குள் மூழ்கிக் கிடந்தது மூர்சையானேன். அதில் ஒன்று இந்த பாடல். தமிழ் நடையும் , சம்ஸ்கிருதம் கலந்த தமிழ் வார்த்தைகளும், மூக்கொலிகளான "ங" மற்றும் "ஞ" இவற்றின் ஓசை நயமும் மனதை வசீகரிப்பவை.


கண்ணீர்  பூவிண்டே  கவிலில் தலோடி
ஈனம்  முழங்கும்  பழம்  பாட்டில்  முங்ஞி 
மறுவாக்கு  கே(ள்)க்கான்  காத்து  நி(ல்)க்காதே ..
பூதும்பி எண்டே  மறஞ்ஞு
எந்தே புல்லோர்க்குடம்  போலே  தேங்ஞி !! (கண்ணீர்  பூவிண்டே )

உன்னிக் கிடாவின்னு   நல்கான்  அம்ம நெஞ்சில்  பாலாழி ஏந்தி
ஆயிரம்  கை நீட்டி  நின்னு  சூர்ய  தாபமாய்  தாதந்தே ஷோகம்
விட  சொல்லவே  நிமிஷங்களில்  ஜலரேககள்   வீணழிஞ்ஞு
கதனங்களில்  துணை ஆகுவான்  வெறுதே ஒருங்குன்ன  மௌனம் ***
தூரே  புல்லோர்க்குடம் கேனுறங்கி .. ( கண்ணீர்  பூவிண்டே)


ஒரு  குஞ்ஞு பாட்டாய் விதும்மீ  மஞ்ஞு  பூஞ்சோலை எந்தோ   திரஞ்ஞு
ஆரேயோ  தேடிப்பிடஞ்ஞு  காட்டும் ஒருபாடு  நாளாய் அலஞ்ஞு 
பூன்தென்னலில் பொன்னோலமாய் ஒரு பாழ்க்கிரீடம் மறஞ்ஞு
கணிவேகுமீ வேண்மேகவும் மழநீர்க் கினாவாய்  மறஞ்ஞு ***
எந்தே புல்லோர்க்குடம்  போலே  விங்கி ( கண்ணீர்  பூவிண்டே)

தமிழில் பல்லவி மட்டும் இப்போது:

கண்ணீர் பூவிட்ட கவியில் நீராடி ..
இதயம் முழுகும் பழம் பாட்டில் ஒழுகி ..
ஒரு வாக்கு கொடுத்தாள்-காற்றில் நில்லாதே
பூந்தும்பி என்றே மறைந்தாள்
எந்தன் உள்ளோர் குடம் சோகம் தேங்க !


இந்த வசீகர பாடகனின் மேலும் சில பாடல்கள் இங்கே :




*** - கிரீடம் மலையாளம் திரைப்படத்தில் இடம்பெற்ற மூலப் பாடலில் 

          இந்த வரிகள் இடம்மாறி வரும்


Tuesday, August 9, 2011

பீகீ பீகீ ராத்தோம் மேன் - லெஸ்லி லூயிஸ்


இந்தி பாட்டெல்லாம் அதிகம் கேட்டது இல்லை. மன்னார்குடியில் எங்க அத்தை வீட்டுல கொஞ்சம் , பின் தேசிய தொழில் நுட்பக் கழகத்தில் படித்த இரண்டு ஆண்டுகளில் கொஞ்சம் , அப்புறம் எப்போவாது கேட்பது வழக்கம். இங்கு சுவீடனில் மெல்ல கோடை காலம் விலகி
       கொண்டு இருக்கிறது.     வந்து ஓராண்டுகள் முடியப் போகிறது. இந்த ஒரு வருடத்தில் ஐந்தாவது இடத்திற்குமாறி இருக்கிறேன். தங்குமிடம் கிடைப்பது இங்கு சுலபம் அல்ல. ஒரு வழியாக ஒரு வருடத்திற்கு தங்க இடம் வாங்கியாச்சு. அருமையான இடம், பச்சை பசேல் என கண்ணைப் பறிக்கும். என் அறைத் தோழனோடு ஒரு சிறு நடை போடலாம் என்று கிளம்பினேன்.அவன் அவனுக்கு தெரிந்த தமிழ் பாடல்களையும் நான் எனக்குத் தெரிந்த இந்தி பாடல்களையும் சொல்லிக் கொண்டே வந்த போது, எங்கோ நினைவின் ஆழத்தில் புதைந்து கிடந்த பீகீ பீகீ ராத்தோம் மேன் - லெஸ்லி லூயிஸ் புது வடிவம் கொடுத்த பழைய இந்தி பாடல் சட்டென்று வெளியில் வந்தது. மழை பெய்து மரங்கள் ஈரம் சொட்டுக் கொண்டிருந்த காட்டுக்குள் மனசு திறக்க , வாய் விட்டு , என் நண்பனின் காது கிழிய பாடினேன். "யுவர் வாய்ஸ் இஸ் வெரி குட் மேன்" என ஒரு போடு போட்டான், என் பன்பலையை சட்டென்று நிறுத்திவிட்டேன். ஆனால் ஸ்ரீநிவாஸ் என்னை சுத்தி அந்த காட்டுக்குள்ள எனக்காக அந்த பாட்டை பாடிகிட்டே இருந்தார். சில நேரத்தில் சில பாடல்கள் என்கிற அனுபவம் எல்லோருக்கும் அப்பப்ப வரும். மறுநாள் நம் தோழர்களிடம் வந்து "அந்த பாட்ட நேத்து ஒரு இருபது தடவ கேட்டுகிட்டே இருந்தேன் டா" அப்படின்னு ஏதோ ஒரு பாட்ட சொல்லிக் கொள்வோம். அது மாதிரி அறைக்கு திரும்பியதும் இந்த பாட்ட இன்னும் கெட்டு கிட்டே இருக்கேன். உங்களுக்கும் புடிச்சா கேளுங்கள். ஒரே ஒரு சினிமா பாட்டாவது எழுதனும் என்று லேசாக ஒரு ஆசை இருப்பதால் இந்த பாட்டுக்கு தமிழ் வரிகள் எழுதி முயற்சியை இப்போதே ஆரம்பிக்கலாம் என்று சரணத்தை தொடங்கி விட்டேன். முழுமையாக முடிக்க முடிந்தால் மற்றொரு பதிவில் எழுதுகிறேன்.

இந்தி வரிகள் தமிழில்:

பதிவிறக்கம் செய்ய (Right-Click+Save Link As)


கிஷோர்: பீகீ  பீகீ ராத்தோன் மேன், மீட்டி மீட்டி  பாத்தோன் மேன் 
ஐசே  பர் சாத்தோன் மேன் கேசா லகுதா  ஹேய்?

லதா:ஐசா லகுதா  ஹேய் தும் பன்கே  பாதல் ,
மேரே  பதன்   கோ  பீகோகே  முஜ்ஜே  ச்சேந்த்  ரஹே  ஹோ (ஹோ  ஒ )
ச்சேந்த்  ரஹே  ஹோ  (2)

லதா: அம்பர்  க்கேலே  ஹோலி ஊய் மா
பீகி  மோரி  சோலி  ஹம்ஜோலி  ஹம்ஜோலி  (2)
ஒ  பாணி  கே  இஸ் ரேலே  மேன்  சாவன்  கே இஸ்  மேலே  மேன் 
ச்சட்  பே  அகேலே  மேன் 
கேசா லகுதா  ஹேய்

கிஷோர் : ஐசா லகுதா  ஹேய் தும்  பன்கே  கட்டா
அப்னே  சஜன்  கோ  பீகோகே  க்கேல்  க்கேல்  ரஹீ  ஹோ  ஒ 
க்கேல்  ரஹீ  ஹோ 

லதா : ஐசா லகுதா  ஹேய் தும் பன்கே  பாதல் ,
மேரே  பதன்   கோ  பீகோகே  முஜ்ஜே  ச்சேந்த்  ரஹே  ஹோ (ஹோ  ஒ) 
ச்சேந்த்  ரஹே  ஹோ

கிஷோர் : பர்க்ஹா  சே  பச்சாலுன் துஜே 
சீனே  சே  லகா  லூன் 
ஆ  ச்சுபாலுன் ஆ ச்சுபாலுன் (2)
ஒ ! தில் நே  புக்காரா தேக்ஹோ  ருத்  கா  இஷாரா  தேக்ஹோ 
உஃப்  ஏ  நசாரா தேக்ஹோ 
கேசா லகுதா  ஹேய், போலோ ?

லதா: ஐசா  லகுதா  ஹேய் குச்ச் ஹோ  ஜா(யா)யேகா
மஸ்த் பவன்  கே  ஏ  ஜ்ஜோகே சையான் தேக் ரஹே  ஹோ  ஒ 
தேக் ரஹே  ஹோ  ஒ 
ஐசா லகுதா  ஹேய் தும் பன்கே  பாதல் ,
மேரே  பதன்   கோ  பீகோகே  முஜ்ஜே  ச்சேந்த்  ரஹே  ஹோ  ஹோ  ஒ 
ச்சேந்த்  ரஹே  ஹோ ... 

Thursday, August 4, 2011

மாதவி சொன்ன எழுத்தெல்லாம் ...


  "மாதவி சொன்ன எழுத்தெல்லாம் கல்லு
                                   சிலேட்டில் எழுதினேன் அன்று"   -   [ இரு விகற்ப குறள் வெண்பா ]




ஊராய்ச்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, சிரமேல்குடி , ஜூன் மாதம், 1991:அன்னையின் முந்தானையை முதன்முதல் விட்டு ,அழுது கொண்டே ஒண்ணாம் வகுப்புக்குள் குழந்தைகள் நுழைந்து கொண்டிருக்க, அன்னையை  இழுத்துக் கொண்டே வந்து தன்னை பள்ளியில் சேர்த்துக் கொண்டது ஒரு பிள்ளை. கணித்து விட்டீர்களா ? ஆமாம் நானேதான். படிப்பின் அருமை விளங்கி கொண்ட அதிசயக் குழந்தையா ? சத்தியமாக இல்லை. அடம் பிடிப்பது எப்படி என்று என்னிடத்தில்தான் கற்க வேண்டும் என்று அம்மா அடிக்கடி எனக்கு நினைவு  படுத்தியிருக்கிறாள் பின்னாளில். அப்படியான அடத்தில் இந்த சேட்டையும் ஒன்று. என் வீடு கடைத் தெருவில் அமைந்திருக்கும். என் வீட்டுக்கு எதிரில்தான் பேருந்து நிறுத்தமும். நான் ஒட்டுத் திண்ணையில் ஓடி ஆடி விளையாடும் போதெல்லாம் , தினமும் பள்ளிக்கு குழந்தைகள் சீருடையில் , தோள் மாட்டி பை ஒரு புறம் தொங்க, பிளாஸ்டிக் வாட்டர் பேக் மறுபுறம் தொங்க ஒய்யாரமாய் நடைபோடக் கண்டு வந்தேன். திடீரென தோள் மாட்டிப் பையும், வாட்டர் பேக்கும் என்னை ஈர்த்தன. எனக்கும் வேண்டும் என்று அடம்பிடித்து கதற ஆரம்பித்து இருக்கிறேன். சமாதானத்திற்காக என் அம்மாவும் "நீ பள்ளிக் கூடத்தில் சேர்ந்ததும் வாங்கித் தருகிறேன்" எனச் சொல்லி இருக்கிறார். இப்ப புரியுதா ஏன் இந்த வாலு அம்மாவை அன்றைக்கு பள்ளிக் கூடத்திற்கு இழுத்து வந்தான் என்று. ஒண்ணாம் வகுப்புக்கே சிலேட் மட்டும் இல்லாம , நோட்டு புத்தகம், ஜாமென்றி பாக்ஸ், பேனா , பென்சில் என சகலத்தோட பட்டிக்காட்டுல யாரு போயிருப்பாங்க சொல்லுங்க.

கன்னி மாதா போல் இன்னொரு அன்னை அங்கே எனக்காக காத்து இருந்தார். அவர்தான் மாதவி டீச்சர். ஆசிரிய பயிற்சி முடித்து அவருக்கும் அன்றுதான் முதல் வகுப்பு. இந்த விவரத்தை மேல் நிலை பள்ளியில் படிக்கும் போது , எங்கள் ஊரிலே வசிக்கும் சரோஜா டீச்சரிடம் தெரிந்து கொண்டேன். ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் வைத்திருக்கும் சகலமும் என்னிடத்தில் இருப்பதை பார்த்து அவர் வியந்திருக்க வேண்டும். இவன் கிட்ட என்னமோ இருக்குன்னு நினைச்சாங்கலோ தெரியாது. இல்ல சின்ன வயசுல கொஞ்சம் அழக்கா இருப்பேன்னு சொன்னா நம்பவா போறீங்க. முதல் நாளே அந்த டீச்சர் என்ன அவமானபடுத்திடாங்க. உயரப்படி நிக்க வைக்கிறேன்னு என்னை முதல நிக்க விட்டாங்க. இது தான் முதல்ல நான் முதல் மாணவனா தேர்வான விஷயம். அப்புறம் படிப்பிலையும் கலக்க ஆரம்பிச்சிட்டோம்ல. ஒரு சில மாதங்களில் அந்த டீச்சர் எனக்கும் சேர்த்து மத்தியான சாப்பாடு எடுத்துட்டு வருவாங்க. எனக்கு ஆசையா மீன் முள்ள எடுத்துட்டு ஊட்டி விடுவாங்க. எங்க ஊருக்கே இரண்டு முக்கிய பேருந்து நிறுத்தங்கள். ஒன்று என் வீட்டுக்கு எதிரே , மற்றொன்று தெருவின் மறுமுனையில் இருக்கும் எங்கள் டீ கடைக்கு எதிரே. பள்ளிக்கு செல்ல வேண்டுமானால் கடைக்கு எதிரேதான் இறங்க வேண்டும். மாதவி டீச்சர் தன் பணியின் இறுதி நாட்களில் எங்க வீட்டுகிட்ட இறங்கி என்னை தூக்கிட்டே பள்ளிக் கூடத்துக்கு போவாங்க. எங்கம்மா என்கிட்டே சொன்னப்ப கொஞ்சம் டச்சிங்கா இருந்துச்சு.

அந்த ஓராண்டு அன்பில் எனக்கு நினைவில் இருப்பது மிக மிக கொஞ்ச விசயங்கள்தான். கணக்கில் நூறு மதிப்பெண்கள் எடுத்து இருப்பதை மாணவர்களிடம் சொல்லி கைதட்ட வைத்துவிட்டு என்னை தமிழில் எடுத்த 99 மதிப்பெண்ணை வாசிக்க சொன்னார். ஏனோ தெரியவில்லை,திணறி நின்றேன்.
அவர் திட்ட ஆரம்பித்த பின்னரே சரியாக சொன்னேன் !

அத்தை மீது கொண்ட பிரியத்தில் , அவர் காலில் அடிபட்டு மருத்துவமனையில்  இருந்தபோது , அரையாண்டு தேர்வை விட்டுவிட்டு குடும்பத்தோடு அத்தையை பார்க்கச் சென்று விட்டேன். என்னை கட்டாயம் பெயில் ஆக்கப் போவதாக என் தந்தையிடம் தலைமை ஆசிரியர் சொல்லிக் கொண்டிருந்தார், மாதவி டீச்சர் குறுக்கிட்டு மன்னிப்பு வாங்கிக் கொடுத்தார். "உனக்கு பரீட்சை , பள்ளிக் கூடம்தான் முதல்ல அப்புறம்தான் மத்ததெல்லாம் " எனச் சொன்னவரிடம் சமத்தாய் தலையாட்டியது நன்றாக நிழல் ஆடுகிறது.


பாசம், அன்பு எல்லாம் புரியாத வயசு, லீவு முடிஞ்சு ரெண்டாப்பு வந்தா டீச்சர் இல்ல. ஏன் இல்லனு தெரியவும் இல்ல. யாருகிட்டயும் கேட்கணும்னு தோணல. ஆனா அவங்க என் கிட்ட கேட்டுக்கிட்டத ஒண்ணு விடாம செஞ்சேன். ஆமாங்க அதுக்கப்புறம் படிப்புல அந்த பள்ளிக் கூடத்தையே கலக்கி எடுத்தோம்ல. விடாக் கொண்டன் போல, யாரையும் முதல் மதிப்பெண் எடுக்க விட்டதே இல்லை. இது என் கல்லூரி இளங்கலை வரைத் தொடர்ந்தது. எட்டாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு அரசு நடத்தும் திறனாய்வு தேர்வில் , கல்வி மாவட்ட அளவில் தேர்வான மாணவர்களில் நானும் தேர்வானதும் பள்ளியே என்னை தலையில் வைத்து கொண்டாடியது. அந்த பள்ளியின் வரலாற்றில் அதுதான் முதல் முறை. அருகிலேயே இருக்கும் தொடக்கப் பள்ளிக்கு என் பழைய ஆசிரியர்களை பார்த்து , மிட்டாயோடு இந்த இனிப்பான செய்தியை சொல்வதற்காக சென்றேன். மிட்டாயை எடுத்துக் கொண்ட சரோஜா டீச்சர், மாதவி டீச்சர் இதை கேள்வி பட்டா ரொம்ப சந்தோஷ படுவாங்க என்றதும் அத்துனை நாள் மறந்து இருந்த அவரின் நினைவு மீண்டும் வந்தது.

எங்கள் ஊரில் மேல்நிலை பள்ளி இல்லை. நாட்டுசாலையில்-நம்ம நடிகர் விஜய குமார் ஊருதான்- பேருந்தில் சென்று படித்தேன். சுத்து பட்டு பதினெட்டு பட்டிலேயும் என் பெயர் பெரமநாதன் னு சொன்ன இப்படி எல்லாம் பேரு இருக்கான்னு கேட்பாங்க. அந்த ஊருல ஒரு பய கூட கேட்கல. அப்புறம்தான் தெருஞ்சுது என் பேர்ல நிறைய கிழவனுங்களே இருக்காங்க. அது அந்த ஊரு அய்யனார் பெயராம். அந்த ஊரு நர்சுதான் இந்த பேரை வச்சு, பிறந்த முதல் நாளே ஆபரேசன் தியேட்டருக்குள் பத்திரமாக எடுத்து போனாராம். என் அதிர்ஷ்டத்தை பாருங்கள், அந்த ஊரில் ரெண்டு வருஷம் தெரு தெருவா விளையாடிவிட்டு , கடைசியா போகப் போறப்பதான் தெரிய வந்தது, அந்த ஊருதான் மாதவி டீச்சர் ஊருன்னு, அதுவும் எங்க ஊரு சத்துணவு சமைக்கிற அம்மா ஒருத்தங்க சொன்னாங்க.

அதுக்குள்ள அவங்க எத்தனையோ ஊருக்கு மாறிவிட்டார்கள், இந்நேரம் எங்கே இருக்காங்களோ? கண்டிப்பா அவங்கள கண்டுபிடிச்சு மானசீகமா காலில் விழ வேண்டும் என்று தோன்றுகிறது. முக்கியமே இல்லாதவங்கன்னு நாம ஒதுக்குற எத்தனையோ தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் பசுமரமாய் இருக்கும் நம் உள்ளத்தில் நல்ல விதைகளை அமைதியாக தூவி விட்டு நகர்ந்து விடுகிறார்கள். கண்டிப்பா தொடக்கப் பள்ளிகளுக்கு இந்த மாதிரியான பொறுமை மிக்க, அன்பு மிக்க பெண்களே சிறந்தவர்கள். பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் டீச்சர் ட்ரெயினிங் அரசின் இலவச சீட்டு அல்வா போல் கிடைத்தும் நான் போக மனமில்லாது இருந்தது, என் வருங்கால மாணவன் ஒருவனுக்கு கிடைக்கப்போகும் மாதவியை தடுத்து விடக்கூடாது என்பதால் தான்.

வாழ்க ஒண்ணாப்பு டீச்சர்ஸ் !


Wednesday, July 27, 2011

திடீர் மொழி



தேங்கி கிடக்கும் மழைநீரை
அள்ளி அடித்துப் போகும்
காரைப் போல - சந்தோசத்தை
அள்ளி அடித்துப் போனது
தாயின் கையை பிடித்து
நடந்து வந்த ஒரு குழந்தை !

ஈரம் குத்தி உடைந்த
நீர் பலூனாய் - என்
மண்டையின் உச்சியில்
ஆனந்த நீர் வீழ்ச்சி !

கடந்து வந்து - கால்கள்
நாலு எட்டு வைத்திருக்கும்
முன்னே பார்த்து
கொண்டிருந்த விழிகள்
மெல்ல திருப்பியது
முகத்தை - கூவிக்
கூப்பிட்டது போல் 
கச்சிதமாய் அந்த 
குழந்தையும்  திரும்பி
பூத்தது புன்னகையை !

வழிப்போக்கில் - இதுபோல்
சப்தம் இல்லாமல்
நொடிகளில் கற்றுக் கொள்ளும்
மொழியும்தான் யாதோ ?
அதனுள்ளே
பட்டனை தட்டியது போல்
சட்டென திரும்ப வைக்கும்
மந்திரத்தை திணித்ததும் யாரோ ?

காதுக்குள் நுழையும்
ஒலி அலைகளா ?
கண்ணில் தெறிக்கும்
ஒளி அலைகளா ?
எதில் ஏறி வந்து
பேசுகின்றது
எப்போதாவது வாய்க்கும்
இந்த அதிசய மொழி  !

Monday, July 25, 2011

பனங்காடு சிரமேல்குடி ஆனது யாராலே?

    - முதல் நிலை தேடல் ...


ஐந்து ஆண்டுகளுக்கு முன் நான் தீட்டிய பென்சில் ஓவியம் 
பிசாசா மென்பொருள் மூலம் அடிப்படை டச் அப் செய்துள்ளேன் 

எங்க ஊருக்கு எப்படி சிரமேல்குடி என்று பெயர் வந்தது என்று ஒரு கேள்வி எழுந்தது என்னுள். மறவக்காடு, காரப்பன்காடு, கோவில்காடு, இளங்காடு என்ற ஊர்கள் சூழ பனங்காடு என்ற பெயரோடு விளங்கிவந்த என்னூர் எப்போது சிரமேல்குடி ஆனது. பெருந்தலைவர் காமராஜர் எங்க ஊருக்கு பள்ளிக் கூடம் கட்டித் தருவதற்கு முன்னால் அந்த இடம் ஒரே பனை மரக் காடாகத் தான் இருந்தது என்று என் பள்ளி ஆசிரியை கூறியதாய் கூட ஞாபகம்.

சிரமேல்குடியை இன்னும் எளிமையான தமிழில் 'தலை+மேல்+குடி' என்று சொல்லலாம். யார் தலை மேலே ?

ஊரிலே இப்படி ஒரு நம்பிக்கை உண்டு, ஊர் பெரியவர்கள் சொல்லி கேள்விப் பட்டது. எந்த ஊருக்குள் வெள்ளம் புகுந்தாலும் , நம்ம ஊருக்குள்ள ஒரு சொட்டு தண்ணி வராது. வடக்கே திருவாசல் குளத்தில் காவல் இருக்கும் பிடாரி அம்மன் கோவிலைத் தாண்டி , கிழக்கே வயல் வெளி பகுதியான கோட்டகம் எல்லை சாமி கோவிலைத் தாண்டி இதுவரையில் வெள்ளம் வந்ததும் இல்லை. சேதம் விளைவிக்கும் காவிரியின் கிளை ஆறு பாமினி ஊருக்கு கிழக்கே ஓடுகிறது. பெரும் வெள்ளங்களில் விளை நிலங்கள் சேதமாகும் ஆனால் ஊருக்குள் வெள்ளம் வராது. மாறாக அதன் கிழக்குக் கரை கிராமங்கள் தண்ணீரில் தத்தளிக்கும்.

எங்க ஊர் முழுக வேண்டும் என்றால் , திருவுசாத்தானம் எனும் பழம்பெருமை மிக்க கோவிலூர் மந்திரபுரீஸ்வரர் கோவிலின் கோபுரம் முழுக வேண்டும் என்பார்கள். எங்க ஊரிலிருந்து பாமினி ஆற்றை கடந்தால் ஆறு கிலோ மீட்டர் தூரம்தான் அந்த கோவில்.

ஆக இந்த சிரமேல்குடி அவ்வளவு பெரிய மேட்டு நிலம். நாங்கள் அந்த சிவனின் தலைக்கு மேல் உயரமான இடத்தில் குடி இருக்கிறோம். அதனால் இந்த பெயர் பொருத்தமாகத் தெரிகிறது. மேலும் அந்த காலத்தில் ஊர்களின் பெயர்கள் கோவில்களையும் , புராணங்களையும் , வாழ்ந்த நல்ல மனிதர்களையும் சார்ந்தே இருந்து இருக்கிறது. அந்த கோவிலூர் கோவிலுக்கு பதிகம் பாடியவர்
திருஞானசம்பந்தர்

நீருடைத் துயின்றவன் தம்பிநீள் சாம்புவான் 
போருடைச் சுக்கிரீவன் அநுமன் தொழக்
காருடை நஞ்சுண்டு காத்தருள் செய்தவெம்
சீருடைச் சேடர்வாழ் திருவுசாத் தானமே

சீதையை மீட்க பாலம் கட்டுவதற்கு ராமன் (நீருடைத் துயின்றவன்), இலக்குவன்(தம்பி) , சாம்புவான்,சுக்ரீவன், அனுமன் ஆகியோர் தேடி வந்து தொழுது மந்திர ஆலோசனை பெற்ற கோவில் இது.

இந்த சாம்புவான் தான் இன்று நாம் வழக்கமாக சில பெரிய மனிதர்களை பார்த்து சொல்வோமே , அவர் பெரிய ஜாம்பவான் என்று,அந்த அடைமொழிக்கு சொந்தக்காரர்.

அந்த கோவிலூருக்கு மிக அருகில் ஜாம்பவான் ஓடை என்ற ஊர் கூட இருக்கிறது !

அடுத்தமுறை ஊருக்கு போகும் போது என் ஊருக்கான என் கணிப்பு சரியா என்று தேட வேண்டும். எங்க ஊரு அய்யனார் அந்த மந்திரபுரீஸ்வரரை விட உயரமான இடத்தில் இருக்கிறார் போல.

பாமர மக்களின் சாமி உயரமான இடத்தில் இருப்பது மிகப் பெரிய கௌரவம்தான்.

                                                                      சிவன் தலைக்கு மேல் வசிக்கும்,
                                                                      பெரமநாதன். 

Wednesday, July 20, 2011

வேண்டும் புதுப் புது அறிவியல்கள் !

இந்தியா பொருளாதாரத்துல வல்லரசு ஆகணுமுன்னா விவசாயம் உள்ளிட்ட தொழில்கள் பெரும் வளர்ச்சி அடையணும் ! தொழிலாளிகள் அவர்களுக்கு தேவையான  கருவிகளை அவர்களே உருவாகிக் கொள்ளும் திறனையும் , அறிவையும் நாமதான் கொடுக்கணும் ! அவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கணும் ! இந்த மாதிரி ஆரோக்கியமான விசயங்கள் தான் இன்றைய தேவை ! 
சாதாரண மக்களின் திறனை வெளிக் கொணர்ந்து அவர்களுக்கும் அறிவியல் வசப்படும் என்பதை காட்டிய "அணில் குப்தா"
அவர்களுக்கு தலை வணக்குகிறேன் !


            (*அணில் குப்தாவின் உரை நிகழ்ச்சி இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது )


பொன்னியின் செல்வன்
அமெரிக்கா போய் வந்தானா
பெரிய கோயில் கட்ட ?
ஓலை சுவட்டிலே - குறிப்பெழுதி
வைக்காமல் போனானே
மடத்தனமா நாமெல்லாம்
திண்டாட - கட்டட பொறியியல்
எனும் கன்னித் தமிழ் நூல்
காணாமல் போச்சு அவனால !


தமிழுக்கு அறிவியல்
சொல்லும் திறன்
இல்லையாம் - அது
கூழுக்கும் கீழான
பழங் கஞ்சியாம் !


தேன் என்றும் - தீம்
பழம் என்றும் - தமிழ்
பேசும் கூட்டம்
கோமாளிகலாம் !
அரை குறை ஆங்கிலம்
பேசும் எல்லோரும்
அறிவாளிகளாம் !                                             [தமிழுக்கு அறிவியல்..]


ஆங்கிலம் தெரியாத
சீனாக்காரனை பார்த்து
நாமெல்லாம் சிரிப்போம்  !
அவன் ஆண்டுக்கு - பத்தாயிரம்
கண்டுபிடிப்புகளுக்கு
காப்புரிமை வாங்கிவிட்டு
பதிலுக்கு சிரிப்பான் !


அரசமைப்பு சட்டத்தில்
ஆயிரந்தான் ஓட்டைகள் !
அரசியல்வாதி வீட்டுக்குள்ளே
கோடிகோடி பண மூட்டைகள் !             


அமெரிக்கா குளுமை அயிரோப்பா
நம் அறிவு சுரண்டி - பொன்முடி
கொடுக்கும் பெரு வள்ளல்கள் !
இனிய மெட்டெடுத்து - அவர்கள்
துதி பாடும் பாணர்கள்
கதியடைந்தோம் நம்மவர்கள் !               [தமிழுக்கு அறிவியல்..]


உழவன் ! ஆடை நெசவன் !
கிழவன் ! பானை குயவன் !
முழவன் !சிகை திருத்தன் !
எல்லோரும் - வேகமாய்
தமிழ் படிக்கவேணும் சாமி !
நல்ல கருத்தாய் - தமிழ்
எழுதவேணும் சாமி !
நீ இருக்கியோ
இல்லையோ சாமி !
இருந்தா இந்த நல்ல வழி காமி !                    [தமிழுக்கு அறிவியல்..]


"அதிகாலை வேளையிலே
 நண்டு வளைக்குள்ளே
 நரி வாலாட்டும் - அந்தி
 சாயையிலே எலி பிடித்து
 பாம்பு வாய் விழுங்கும்
 இருட்டி வீடு திரும்பையிலே
 பனை அமர்ந்து - ஆந்தை
 அரட்டும் ..." - மெல்ல
தொடங்கட்டும் இப்படி
விவசாய அறிவியல் குறிப்புகள் !


பட்டுக்கு ஜரிகையும் - மல்லு
வேட்டிக்கு கரையும் போடும்
தொழில் நுட்பம் எழுதட்டும்
நெசவாளனும் !                                                            [தமிழுக்கு அறிவியல்..]


கட்ட பஞ்சாயத்து - ஆல
மரத்தில் கூட்டுவோம்
கிராம அறிவியல் மாநாடு !
ஆடு மாடு மேய்ப்பவன்
ஐந்தாறு மாடு வைத்து
ஊருக்கே பால் கறப்பான் !
காணி நிலத்தில் - விவசாயி
எல்லோருக்கும் நெல் அறுப்பான் !
பருத்தியும் , பட்டும் கலந்து
நெசவாளி புது நூல் திரிப்பான் !


உலகம் சுற்றும் அவர் பிள்ளைகள்
உதவிட வேணும் - தொழிலாளி
சிந்தைக்குள்ளும் ஆராய்ச்சி
விளங்கிட வேணும் - நம்ம
அரசாங்கம் பணம் கொடுத்து
ஊக்கப்படுத்திட வேணும் !
கப்பலேறிப் போன நம்ம
ஊரு மானத்தை இவங்கதான்
இனி கரை சேர்க்க வேணும் !


கள்ளு கடையை சாத்தி புட்டு
பிராந்தி கடை திறந்து வைக்கும்
அரசாங்கம் திருந்துமா ?
முழுக்க குடிச்சுப் புட்டு
குட்டிச் சுவத்துல
முட்டி விழும் ஊருகார பயலுகளா
நான் சொல்லுறது என்னான்னு
உங்களுக்கு விளங்குமா ?

இந்த காணொளியை பாருங்கள் !
முடியும் என்று நம்புங்கள் !



எதிர்பார்ப்புகளுடன்,
பிரேம் சத்யா



***********-- ------------- **********************------------------ ***************
*நன்றி : அணில் குப்தாவின் காணொளியை பகிர்ந்து கொண்ட 
Dr.N.Ganesan அவர்களுக்கு !



உரையின் தமிழாக்கம் :


நாட்டின் நிலப்பகுதியில் கிராமங்களில் குடிசை பகுதிகளில், எந்தவொரு வெளிப்புற உதவியில்லாமல், தத்தம் நுண்ணறிவினால்அவர்களது பிரச்சினைகளை தீர்த்து கொள்ளும் பல்லாயிரக் கணக்கான மக்களிடம் இருந்து ஒரு செய்தியை கொண்டு வந்துள்ளேன். சில வாரங்களுக்கு முன்னால், எங்களது உள்துறை அமைச்சர்,சுமார் 200 ஆட்சி செலுத்த இயலாதமாவட்டங்களை சுட்டி காட்டி, மூன்றில் ஒரு பங்கு இந்தியாவின் மேல் போர் அறிவிக்கும் பொழுது, நாங்கள் 21 வருடங்களாய் அழுத்திகூறி வந்த முக்கிய கருத்தை, அவர் விட்டு விட்டார் மக்கள் பொருளாதார அடிப்படையில் வறுமையால் வாடலாம்,ஆனால் அவர்கள் புத்தி வறுமையால் வாடவில்லை என்ற கருத்து. அதாவது,எளியவர்களின் புத்தியை குறைவாக மதிப்பிட முடியாது. அந்த செய்தியை தான்நாங்கள் 31 வருடங்களுக்கு முன்னாள் துவங்கினோம். மற்றும், அது என்ன தொடங்கியது?
விரிவாக, என்னை இக்கணம் வரை கொண்டு வந்த எனது பயணத்தை இங்கு நான் பகிர்ந்து கொள்கிறேன். 85 to 86, நான் பங்களாதேசத்தில், அங்குள்ள அரசாங்கத்திற்கும் ஆராய்ச்சி கூடத்திற்கும்,எப்படி விஞ்ஞானிகள் ஏழைகளின் நிலங்களில் உழைக்கலாம் என்பது பற்றியும், எப்படி மக்களின் அறிவு சார்ந்த தொழில்நுட்ப அறிவியலை வளர்க்கலாம் என்பது சம்பந்தமாகவும் அறிவுரை கூறி கொண்டிருந்தேன். நான் 86'ல் திரும்பினேன்.60 சதவிதம் நிலமில்லாத அந்த நாட்டின் அறிவையும், கற்பனை திறனையும் கண்டதில், நான் மிகவும் உற்சாகமுடன் இருந்தேன். ஆனால் வியக்கத்தக்க கற்பனைத்திறன். நான் என்னுடைய வேலைகளை கூர்ந்து நோக்கினேன்.ஏறக்குறைய ஒவ்வொரு முறையும், கடந்த 10 வருடங்களில் நான் செய்த வேலைகளில்,மக்கள் என்னிடம் பகிர்ந்து கொண்டஅறிவின் பதிவுகள் இருந்தன.
இப்பொழுது, ஆலோசனை சொல்பவராய், நான் டாலர்களில் சம்பாதித்து கொண்டிருந்தேன், மற்றும் வருமான வரி சான்றிதழை கவனித்து பார்த்தேன். மற்றும், நானே என்னை கேட்டு கொள்ள முயற்சித்தேன் : எனது சான்றிதழில் அறிவை பகர்ந்து எனது வேலைகளை முடிக்க உதவியவர்களுக்கு எனது வருமானத்தில் எவ்வளவு போகின்றது என்பதை காண்பிக்கிறதா? நான் திறமை வாய்ந்தவன் என்பதால், இந்த பாராட்டுகள் எனக்கு கிடைக்கிறதா? இல்லை நான் நன்றாக எழுதுவேன் என்பதாலா? இல்லை நான் நன்றாக பேசுவேன் என்பதாலா?இல்லை நான் செய்திகளை நன்றாக ஆராய்வேன் என்பதாலா? இல்லை நான் ஒரு பேராசிரியர், எனவே, இந்த பாராட்டுகள் எனக்கு கொடுக்கப்பட வேண்டுமா? நான் என்னையே சமாதானப்படுத்திக் கொண்டேன் - " இல்லை, இல்லை, நான் திட்ட மாற்றங்களுக்கு வாக்களிப்பேன்.மக்களுக்கான திட்டங்கள் ஏழைகளின் தேவைகளை மேலும் அறிந்து பூர்த்தி செய்யும். எனவே அது சரி என்று நினைக்கிறேன்." ஆனால் எவ்வளவு வருஷங்களாக, நான் சுரண்டல்களிலேயேவேலைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.நிலவுரிமையாளரின் சுரண்டல், கடன் கொடுப்பவர்கள் மற்றும் வியாபாரிகளின் சுரண்டல், அது நானும் ஒரு சுயநலவாதியாக இருந்தேன் என்று எனக்கு புரிய வைத்தது.ஏனெனில், என்னை பொறுப்பானவனாக நம்பி அவர்களது அறிவை என்னுடன் பகிர்ந்த அந்த மக்களின் திறமையினால், நான் திரட்டிய வருமானம், என்னுடைய வருமான வரி சான்றிதழில் காட்டப்படவில்லை. மேலும் அவர்களுக்கு ஒன்றும் போய் சேரவில்லை. அது எந்த அளவிற்கு என்றால், நான் பணியாற்றியபெரும்பான்மையான ஆராய்ச்சிகள் ஆங்கிலத்திலேயே இருந்தது.
நான் கற்றுக் கொண்ட அந்த மக்களில் பெரும்பான்மையானவர்களுக்கு ஆங்கிலமே தெரியாது. அப்படியானால், எந்த மாதிரியான பங்கேற்ப்பாளி நான்? நான் சமூக நியாயத்தை பற்றி பேசி கொண்டிருந்தேன், இங்கு நான் ஒரு தொழிலாளியாக மிக பெரிய அநியாயம் செய்துக் கொண்டிருந்தேன், மக்களின் அறிவை எடுத்துக் கொண்டு, அவர்களின் பெயரை மறைத்து, மற்றவர்களுக்கு பகிர்ந்து, ஆலோசகம் செய்து, ஆராய்ச்சி கட்டுரை எழுதி, அந்த அறிவின் மூலம் உயர்வு பெற்று, அந்த கட்டுரைகளை பிரசுரித்து, மாநாடுகளுக்கு அழைக்கப்பெற்று, ஆலோசகம் மூலம் மேலும் வருமானம் பெற்று கொண்டிருக்கிறேன். அப்பொழுது, எனது மனதில் ஒரு குழப்பம் வந்தது, நானும் சுரண்டுபவனாக இருந்தால், இது சேரி அல்ல;வாழ்க்கை எப்படியே போய் கொண்டிருக்க முடியாது. மேலும் அந்த நொடி நேரம் மிகவும் வலியுடையதாக இருந்ததுஏனெனில் என்னால் அந்த சிந்தனையுடன் வாழ முடியவில்லை. எனவே, நான் படித்த, எழுதிய 100 கட்டுரைகளை மறுபறுசீலனை செய்தேன். ஆராய்ச்சி செய்தேன் என்று நினைக்கறேன். நான் ஒரு முடிவிற்கு வந்தேன். இந்த குழப்பம் தனித்துவமாக இருந்தாலும், அதற்க்கான பதில் தனித்துவமாக இருக்க வேண்டும்.
ஒரு நாள் - என்ன நடந்தது என்று தெரியவில்லை - பணியில் இருந்து வீடு திரும்பும் பொழுது, தேனீ ஒன்றை பார்த்தேன் என்று நினைக்கிறேன், அல்லது, இந்த தேனீ போல் இருந்தால் வாழ்கை அற்புதமாய் இருக்கும் என்று எனக்கு தோன்றியது. தேனீ என்ன செய்கிறது? அது மகரந்த சேர்க்கை ஏற்படுத்துகிறது, ஒரு மலரில் இருந்து தேன் எடுத்து, மற்ற மலருடன் மகரந்த சேர்கை ஏற்படுத்தும். அப்படி தேன் எடுக்க படும் பொழுது, மலர்கள் ஏமாற்றமடைவது கிடையாது. உண்மை என்னவென்றால், தனது வண்ணங்கள் மூலம் தேனீக்களை மலர்கள் அழைக்கிறது. மற்றும், தேனீக்கள் அனைத்து தேனையும் அவையே வைத்து கொள்வதில்லை. இவைத்தான் இந்த தேனீக்கள் வலைப்பின்னலின் முன்று வழிகாட்டும் கொள்கைகள் - அதாவது, எப்பொழுதெல்லாம் நாம் மக்களிடம் இருந்து கற்று கொள்கிறோமோ, அதனை அந்த மக்களின் மொழியில் நாம் பகிர்ந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு அங்கீகாரம் இல்லாமல் இருக்க கூடாது.
20 வருடங்களுக்கு பிறகும், இந்த தொழில்முறை கலையில் ஒரு சதவீத மாற்றம் கூட நான் செய்யவில்லை என்று நான் உங்களிடம் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அந்த சோக சங்கதியை நான் இன்னமும் மனதில் சுமக்கிறேன், மேலும், இங்குள்ள அனைவரும் எந்த சிந்தனையை சுமந்து செல்வீர்கள். அதாவது இந்த தொழில், ஒருவருக்கு அங்கீகாரம் அளிக்காமல், அவரின் பெயரினை குறிப்பிடாமல், அவரின் அறிவை சட்டப்படிபிரசுரிக்க அனுமதி அளிக்கிறது.அமெரிக்காவின் தேசிய அறிவியல் கலைக்கழகம் அல்லது ஐக்கிய ராச்சியமின் ஆராய்ச்சி ஆலோசனை சபை அல்லது இந்திய அறிவியல் ஆராய்ச்சி ஆலோசனை சபைகளின் ஆராய்ச்சி வழிகாட்டி, நாம் யாரிடம் கற்றுக்கொள்கிறோமோ அவர்களுக்கு அதை பகிர்ந்தளிக்க வேண்டும் என்று சொல்லுவதில்லை. நாம் ஒரு பொறுப்புடைய சமூகத்தை பற்றி பேசுகிறோம், நேரிய, நியாயமான சமூகம்.நாம் அறிவு சார்ந்த தொழிலிலேயே நேர்மையாக இருக்கவில்லை. மேலும் இந்திய அறிவு சமூகமாய் மாற விரும்புகிறது. எப்படி அது அறிவு சமூகமாய் ஆகா முடியும்? எனவே, தெளிவாக, நீங்கள் இரட்டை நியாங்களுடன் இருக்க முடியாது,உங்களுக்கு ஒன்றும், அடுத்தவர்களுக்கு ஒன்றும். அது ஒன்றாக இருக்க வேண்டும்.பாரபட்சமாய் இருக்க கூடாது. நீங்களே மதிக்கும் நீதிகள் சாராத உங்களின் நீதிகளுக்கு நீங்கள் பாரபட்சம் பார்க்க கூடாது. நியாயங்களை ஒவ்வொருவருக்கும்வகுக்க முடியாது.
இந்த புகைப்படத்தை பாருங்கள். இது எங்கே எடுக்கப்பட்டது என்று யாரவது கூற முடியுமா? மற்றும் எதற்காக எடுக்கப்பட்டது என்று தெரியுமா? யாராவது? நான் ஒரு பேராசிரியர். நான் உங்களை கேள்வி கேட்க வேண்டும். உங்களில் யாரவாது யூகிக்க முடிகிறதா? மன்னிக்கவும்? (அவையில் ஒருவர்: ராஜஸ்தானம்) அணில் குப்தா: ஆனால் இது எதற்காக உபயோகப் படுத்தப்படுகிறது? எதற்காக உபயோகப் படுத்தப்பட்டது? (முணுமுணுக்கிறார்கள்)மன்னிக்கவும்? உங்களுக்கு தெரியுமா? நீங்கள் மிக செரியாக சொன்னீர்கள். நாம் அவருக்கு கைத்தட்ட வேண்டும். ஏனெனில் இந்த மனிதருக்கு நமது அரசு எவ்வளவு உணர்ச்சியற்று இருக்கிறது என்று தெரியும்.இதனை பாருங்கள். இது இந்திய அரசின் வலைத்தளம். இது சுற்றுலா பயணிகளைநமது நாட்டின் அவமானத்தை காண அழைக்கிறது. எப்படி சொல்வதற்கு நான் மிகவும் வருந்துகிறேன். இது ஒரு அழகான புகைப்படம் - அல்லது இது ஒரு கோரமான புகைப்படமா? அது நீங்கள் மக்களின் வாழ்கையை எப்படி பார்க்கிறீர்கள் என்பதை பொறுத்தது. இந்த பெண்மணி பல மைல்கள் தூரம் தண்ணீரை தலையில் சுமந்து செல்கிறார் என்றால், அதனை நீங்கள் கொண்டாட முடியாது. நாம் அதற்காக ஏதாவது செய்தாக வேண்டும். மேலும், நான் என்ன கூற விரும்புகிறேன் என்றால் - அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உங்கள் கை அசைவில் இருக்கும் பொழுதும்,பல்லாயிரம் பெண்மணிகள் தலையில் தண்ணீர் சுமந்து செல்கின்றனர். மேலும் நாம் இந்த கேள்வியை கேட்பது இல்லை.
நீங்கள் காலையில் தேநீர் பருகி இருப்பீர்கள்.ஒரு நிமிடம் யோசித்து பாருங்கள். தேநீர் இலைகள் புதர்களில் இருந்து பறிக்கப்படுகிறது. அதற்க்கு என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா? இது தான். பெண்மணி இலைகளை பறித்து, பின்னால் இருக்கும் கூடையில் போடுவார்.பத்து முறை செய்து பாருங்கள்; நீங்கள் இந்த தோள்ப்பட்டையில் எவ்வளவு வலிக்கும் என்பதை அறிவீர்கள். அவர் பல ஆயிரம் முறை அந்த செய்கையை செய்கிறார்,தினமும். நீங்கள் மதிய உணவிற்கு உட்கொண்ட , தினமும் உட்கொள்ள போகும் அரிசியை, அசௌகரியமான குனிந்த நிலையில் பல்லாயிரம் பெண்களால் நாற்று நடப்படுகிறது, ஒவ்வொரு பருவ நிலையிலும், தண்ணீரில் கால்களை ஊன்றி,அவர்கள் நாற்று நாடுகிறார்கள். மேலும் அதனால் அவர்களின் பாதம் நோய் கிருமிகளால் புண்ணாகிப் போகும். அந்த புண்ணான இடம் மேலும் வலிக்கும்,ஏனெனில் அங்கு மற்ற பூச்சிகளும் கடிக்கும்.ஒவ்வொரு வருடமும், 99.9 சதவீத நெல் கைகளாலேயே நாற்று நடப்படுகிறது. எந்த ஒரு எந்திரமும் உண்டாக்கப்படவில்லை.
ஆகையால், விஞ்ஞானிகள், தொழில் நுட்ப வல்லுனர்கள், பொது நல செயல் திட்டமிடுபவர்கள், மாறுதலின் கர்த்தாஆகியோரின் மௌனம் எங்களின் கவனத்தை ஈர்த்தது - இது இப்படி இருக்க கூடாது. சமூகம் இப்படி இயங்க கூடாது. இது நமது நாடாளுமன்றத்தின் வேளை அல்ல, உங்களுக்கும் தெரியும். நம்மிடம் வேளை வாய்ப்புகளுக்கு ஒரு செயல் திட்டம் உள்ளது. இந்த அருமையான நாட்டில், 10, 25 கோடி மக்களுக்கு 100 நாட்களுக்கு வேளை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். எதற்காக? கல் உடைப்பதற்கும், பூமியை குடைவதர்க்கும். ஆகையால் நாடாளுமன்றத்தில் நாங்கள் கேள்வி ஒன்றை எழுப்பினோம், ஏழைகளுக்கு தலை இருக்கிறதா? ஏழைகளுக்கு கைக்கால்கள் வாய் தவிர தலை இல்லையா?
ஆகையால் தேனிக்கள் வலைபின்னல் ஏழைகளின் இந்த வளமையான செல்வத்தை கொண்டு வளர்கிறது. ஆதலால் என்ன நடந்தது? பெயரில்லாத முகமில்லாத நபர்கள் எங்களது வலைப்பின்னலை தொடர்பு கொண்டு ஓர் அடையாளத்தை பெற்றனர். இது தான் தேனிக்கள் வலைபின்னல். இதனை பலர் முன்வந்து வளர்த்தனர், மற்றும் வளர்த்து கொண்டிருக்கின்றனர். இந்தியில் மற்றும் உலகின் வெவ்வேறு நாடுகளில் உள்ளகற்பனைதிறனுள்ள புத்தியுடைய பல ஆயிரம் நபர்களை அடையாளம் காண முனைகிறோம். அவர்கள் கல்வி மூலம் கற்பனையுடையவர்களாக இருந்திருக்கலாம்; அல்லது பண்பாட்டின் மூலம் கற்பனையுடையவர்களாக இருந்திருக்கலாம்; அல்லது சங்கங்களின் மூலம் கற்பனையுடையவர்களாக இருந்திருக்கலாம், ஆனால் பெரும்பான்மையான எங்களது உழைப்பு தொழில்நுட்ப அறிவியல் சார்ந்த கற்பனை சம்பந்தமானது: சம காலத்து புதுமைகள்அல்லது மரபு சார்ந்த அறிவு சம்பந்தப்பட்டது. மற்றும் இது அனைத்தும் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் தொடங்கும். இது அனைத்தும் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் தொடங்கும்.
இந்த நபர் - இவரை வலைதளத்திலும் நீங்கள் காணலாம் - சொஷிடோடோ அர்சி, ஒரு பழங்குடி இனத்தை சார்ந்தவர்.அவருக்கு ஓர் ஆசை. மற்றும் அவர் கூறியது - "எனது ஆசை பூர்த்தியானால் - யாரோ ஒருவர் குணமில்லாமல் இருக்க, இவர் அவரை பார்த்து கொள்ள வேண்டும் -"கடவுளே - இவரை குணமாக்குங்கள். அப்படி குனமாக்கினால், நான் எனது சுவரை சாயம் அடித்து கொள்கிறேன்." இது தான் அவர் சாயம் அடித்து கொண்டது. நேற்று ஒருவர் மாஸ்லோவின் தேவை படியமைப்பு பற்றி பேசினார். மாஸ்லோவின் தேவை படியமைப்புப் போல தவறான ஒன்றுவேறோன்றும் இருக்க முடியாது. ஏனெனில் இந்த நாட்டின் ஏழை மக்களுக்கு மோட்சம் கிடைக்கும். கல்வி, ரஹீம் மற்றும் பலர் மிக சிறந்த சுபி அருட் தொண்டர்கள், அவர்கள் அனைவரும் வறுமையில் வாடினர், மற்றும் அவர்களுக்கு நல்ல பொது அறிவு இருந்தது.தயவு கூர்ந்து சரீரம் சார்ந்த தேவைகள் மற்றும் இதர தேவைகள் பூர்த்தியானால் தான் ஆத்மார்த்தம் சார்ந்த தேவைகள் பற்றியோசிப்பீர்கள் என்று நம்பாதீர்கள். எந்த ஒரு நிலையிலும் எந்த ஒரு மனிதரும், என்னால் ஏதாவது சாதிக்க முடியும் என்ற உறுதி மூலம், அந்த ஆத்மார்த்த நிலையைஅடைந்து விட முடியும்.
இதனை பாருங்கள். நாங்கள் இதனை பார்த்திருக்கிறோம். ஆறு மாதத்திற்கு ஒரு முறை, நாங்கள் நாட்டின் பல்வேறு இடங்களில் நடந்திருக்கிறோம். நான் கடந்த 12 வருடங்களில் 4000 km நடந்திருக்கிறேன்.வரும் வழியில், சாண வரட்டிகள் எரிபொருளாக உபயோகப்படுத்துவதை நாங்கள் கண்டோம். அந்த பெண்மணி வரட்டி காயவைக்கும் அந்த சுவரில் சித்திரம் தீட்டி இருந்தார். அவரது கற்பனை திறனை அவர் அங்கு மட்டும் தான் வெளிபடுத்த முடியும்.மற்றும் அவர் மிகவும் சிறப்பாக செய்திருந்தார். இந்த பெண்மணி ராம் திமரி தேவியை காணுங்கள், சம்பரனில் இருக்கும் நெல் கொட்டி வைக்கும் தொட்டி மீது.பங்குராவில் உள்ள புருலியாவில் இண்டிகோ செடியை வளர்க்கும் பாபி மகாடோ அவர்களின் துயரத்தை கேட்க காந்திஜி சென்ற இடத்திற்கு நாங்கள் சென்று கொண்டிருந்தோம். அவர் செய்ததை பாருங்கள். சுவர் முழுவதும் அவரது இரட்டு. அவர் துடைபத்துடன் கீழே உட்கார்ந்து கொண்டிருக்கிறார். இவர் தொழில் நிபுணரா அல்லது ஓவியரா? தெளிவாக அவர் ஒரு ஓவியரே; அவர் கற்பனை திறன் உடையவர்.இவர்கள் விற்பதற்கு நாம் ஒரு மார்க்கத்தை உண்டு பண்ணினால், அவர்களை நாம் பூமியை தோண்டுவதற்கும், கல் உடைப்பதற்கும் உபயோக படுத்த தேவை இல்லை. அவர்கள் எது சுமாராக செய்கிறார்களோ அதை விடுத்து, சரியாக செய்கிறார்களோ அதற்கு சம்பளம் வாங்குவார்கள். (கைதட்டல்)
ரோஜாதீன் என்ன செய்துள்ளார் என்று பாருங்கள். சம்பரனில் மொடிஹரியில்,நிறைய மக்கள் குடிசையில் தேனீர் விற்பார்கள் தெளிவாக, தேனிருக்கு வரையறுக்கப்பட்ட எண்களில் தான் வாங்குபவர்கள் இருப்பார்கள், ஒவ்வொரு காலையும் நீங்கள் காபி மற்றும் தேனீர் அருந்துவீர்கள். ஆகவே நான் ஏன் ஒரு சுட்டடுப்பை காபி தயாரிக்கும் இயந்திரமாய் மாற்ற கூடாது என்று அவர் எண்ணினார்.ஆகையால் இதோ காபி தயாரிக்கும் இயந்திரம். இதற்கு சில நூறு ரூபாய்களே ஆகும். மக்கள் அவர்களின் சுட்டடுப்பை கொண்டு வந்தால், இவர் நீராவி குழாயையும் ஒருபோக்கியும் பொருத்தி, எச்ப்ரச்சோ காபியை கொடுப்பார். இது மிக மலிவான வாயுவினால் ஆன காபி வடிகட்டி.(கைதட்டல்) ஷேக் ஜகாங்கீர் என்ன செய்துள்ளார் என்று பாருங்கள். நிறைய ஏழை மக்களுக்கு விவசாயம் செய்யபோதுமான நெல் இல்லை. ஆகையால் இந்த மனிதர் மாவு அரைக்கும் இயந்திரத்தை இரு சக்கர வாகனத்தில் கொண்டு வருகிறார்.உங்களிடம் ஒரு கிலோ அல்லது அரை கிலோ இருந்தால், இவர் அரைத்து தருவார்; மாவு அரைப்பவர் அவ்வளவு சிறிய அளவை அரைத்து தர மாட்டார்.
தயவு கூர்ந்து ஏழை மக்களின் சிக்கல்களை புரிந்து கொள்ளுங்கள். அவர்களின் தேவைகள் திறமையான முறையில் சக்தி, விலை மற்றும் தரத்தை கருத்தில் கொண்டு பூர்த்தி செய்ய பட வேண்டும். அவர்களுக்கு இரண்டாம் பட்சமான தரமில்லா வெளியீடு தேவை இல்லை. ஆனால் தரமுள்ள வெளியீடு தருவதற்கு, தொழில்நுட்பத்தை சார்ந்து அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். அதை தான் ஷேக் ஜகாங்கீர் செய்தார். அவர் செய்தது அது மட்டுமல்ல. இதனை பாருங்கள். உங்களிடம் துணிமணி இருந்தால், மற்றும் உங்களிக்கு அதனை துவைக்க அளவான நேரம் இல்லையானால், அவர் துணி துவைக்கும் பொறியை, இரு சக்கர வாகனத்தில், உங்கள் வாசப்படிக்கு கொண்டு வந்தார். இதோ இரு சக்கர துணி துவைக்கும் பொறியின் முன்மாதிரி. அவர் உங்களின் துணிமணிகளை உங்கள் வாசப்படியிலேயே துவைத்து காய வைக்கிறார். (கைதட்டல்)நீங்கள் உங்களின் தண்ணீரையும், உங்கள் சவுக்காரத்தையும் கொண்டு வாருங்கள்.நான் உங்களுக்கு 50 பைசா அல்லது ஒரு ரூபாய்க்கு ஓர் அளவு துணிகளை தவித்து தருகிறேன். ஒரு புது வியாபார முன்மாதிரி வெளிப்படலாம். இப்பொழுது நமது தேவை என்னவென்றால், இதனை வளர்க்க மக்கள் தேவை படுகிறார்கள்.
இதனை பாருங்கள். இது ஒரு அழகான புகைப்படம் போல இருக்கிறது. ஆனால் இது என்ன தெரியுமா? யாரவது யூகிக்க முடிகிறதா? ஐயத்திற்கிடமின்றி இந்தியர்களுக்கு இதனை அறிவார்கள். இது தவா. இது களிமண்ணால் ஆன சூடேற்றும் தட்டு. ஆனால், இதில் என்ன பெரிய அழகு இருக்கிறது? ஒரு ஒட்டா தவாவை எடுத்து கொண்டால், அது சுமார் 250 ரூபாய் அல்லது ஐந்து ஆறு டாலர்கள் விலையில் விற்கபடுகிறது. இதன் விலை ஒரு டாலருக்கு குறைவானதே. மேலும் இது ஒட்டாது. இது உணவு தர பொருளால் மேல் பூச்சு போடப்பட்டது. மிக சிறந்த பகுதி என்னவென்றால், அந்த விலையுயர்ந்த தவாவை உபயோக படுத்தும் போது, நீங்கள் டெப்லான் அல்லது டெப்லான் போன்றபொருளையும் நீங்கள் உண்ணுகிறீர்கள்.ஏனெனில், சில காலத்திற்கு பிறகு, அது மறைந்து விடுகிறது, அது எங்கே சென்றது?அது உங்களின் வயிற்றிற்குள் சென்றுள்ளது. ஆனால் அது அதற்காக செய்யப்பட்டது அல்ல. ஆனால், நீங்கள் அறிவீர்கள், இந்த களிமண்ணால் ஆன சூடேற்றும் தட்டில்,அது உங்களின் வயிற்றிற்குள் போகாது,ஆகவே இது மேலானது; பாதுகாப்பானது;விலை மலிவானது; ஆற்றலளிப்பது; வேறு விதமாய் கூற வேண்டுமானால், ஏழைகளின் விடைகள் தரகுறைவானதாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இடைப்பட்ட ஏற்பாடாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
அவை மேலானதாக இருக்க வேண்டும். ஆற்ற மிக்கதாக இருக்க வேண்டும். எளிதாக வாங்கி உபயோக படுத்தும் அளவில் இருக்க வேண்டும். இதை தான் மனசுக் பாய் பிரஜாபதி செய்துள்ளார். அவர் இந்த தட்டை கைபிடியுடன் வடிவமைத்துள்ளார்.இப்பொழுது ஒரு டாலரில், நீங்கள் சந்தையில் உள்ளதை விட மேலான ஒரு பொருளை வாங்கி உபயோக படுத்த முடியும். இந்த பெண்மணி ஒரு வன்சரக்கு பூச்சு கொள்ளி சூத்திரத்தை கண்டு பிடித்துள்ளார். நாங்கள் அவருக்காகக காப்புரிமை பெற்றுள்ளோம் தேசிய கண்டுபிடிப்பு நிறுவனம். மற்றும், யார் அறிவார், யாராவது இந்த தொழில்நுட்பத்திற்கு உரிமம் பெற்று,இதனை விளம்பர படுத்தினால், இவருக்கு வருமானம் கிடைக்கும். இப்பொழுது நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். நமக்கு பன்மையம் முன்மாதிரியுள்ள முன்னேற்றம் தேவை என்று நினைக்கிறேன், அங்கே உலகின், நாட்டின் பல்வேறு இடங்களில் நடக்கும் முனைப்புகள் வட்டார தேவைகளைதிறமையான பொருத்தமான முறையில்பூர்த்தி செய்ய முடியும். எவ்வளவுக்கு எவ்வளவு வட்டாரத்திற்கு பொருந்துகிறதோ,அவ்வளவுக்கு அவ்வளவு அதனை வளர்ப்பது எளிது.
ஒன்றை வளர்க்கும் பொழுது, இடஞ்சார்ந்த தேவைகளை நீங்கள் அணுவளவில் பூர்த்தி செய்யும் பொழுது உள்ளார்ந்த பற்றாக்குறை ஏற்படும். அப்பொழுது ஏன் மக்கள் அந்த பொருத்தமில்லாமையை சகித்து கொள்கிறார்கள்? சில விஷயங்கள் வளரலாம். மற்றும் அவை வளர்ந்து விட்டது.உதரணத்திற்கு, கைபேசிகள்: 40 கோடி கைபேசிகள் இந்த நாட்டில் உள்ளன.இப்பொழுது, ஒரு கைபேசியில் இரண்டே பொத்தான்களை, மூன்றே விருப்பங்களை மட்டும் உபயோக படுத்துவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆனால் 300 விருப்பங்கள் உள்ளது. 300 க்கு நான் பணம் செலுத்துகிறேன். நான் முன்று மட்டுமே உபயோக படுத்துகிறேன்.ஆனால் 300 விருப்பங்கள் உள்ளது. 300 க்கு நான் பணம் செலுத்துகிறேன். நான் முன்று மட்டுமே உபயோக படுத்துகிறேன். ஆனால், எனக்கு மிக பொருத்தமாய் வேண்டுமானால்,தெளிவாக, எனக்கு வேறு வடிவமைப்புள்ள கைபேசி வேண்டும். நாங்கள் என்ன சொல்ல வருகிறோம் என்றால், வளர்வதுவாழ்வாதாரத்திற்கு பகைவனை இருக்க கூடாது. நிதியளிக்க கூடிய இடஞ்சார்ந்த தீர்வுகளுக்கு இந்த உலகில் ஒரு இடம் இருக்க வேண்டும்.
நாங்கள் பயின்றதில் மிகவும் மேலானது என்னவென்றால் பலமுறை முதலீட்டார்கள் கேட்பது என்னவென்றால் - எது அதிகரிக்க கூடிய முன்மாதிரி? கால நேர அளவு கோல் உள்ள சமூகத்தில் உள்ள தேவை மற்றும் அங்கே இடஞ்சார்ந்த தேவைகள், அவற்றை இலவசமாக பெறுவதற்கு எந்த சட்டப்பூர்வமான உரிமையும் இல்லை.ஏனெனில் அவர்கள் பெரிய சமூக சந்தையின் அங்கமல்ல. ஆகையால், நீங்கள் உங்களது தேவையை அந்த பெரிய சமூகத்தின் தேவைகளுக்கு ஏற்ப மாற்றி கொள்ளுங்கள். அல்லது, தனியாய் இருங்கள். இப்பொழுது, பிரபலமான முன்மாதிரி, நீள-வால் சொல்வது என்னவென்றால் நிறைய புத்தகங்களின் குறைவான விற்பனை கூட லாபகரமான முன்மாதிரியாக இருக்க முடியும். மக்கள் பங்களித்து நிதியளிப்பதற்கு, நாம் முதலீடு செய்வதற்கு ஏதுவாய் ஒரு வழிமுறையை நாம் காண வேண்டும்; அங்கே வெவ்வேறு புதிய கண்டுபிடிப்புகள் குறைந்த எண்ணிக்கையினால் ஆன அப்பகுதி மக்களை சென்றடையும். எனினும் அந்த முன்மாதிரி சாத்தியமாகும்.
சையதுள்ள சாஹிப்: நான் படகிற்காக காத்திருக்க முடியவில்லை. நான் என்னுடைய காதலியை சந்திக்க வேண்டும்.எனது இக்கட்டான சூழ்நிலை என்னை படைப்பாளியாகியது. காதலுக்கு கூட தொழில் நுட்ப உதவி தேவை படுகிறது.நூதனம் எனது துணைவி நூர் அவர்களின் உரிமை. புதிய கண்டுபிடிப்புகள் எனது வாழ்கையின் அதீத விருப்பம். எனது தொழில் நுட்பம்.
அ.கு.: சையதுள்ள சாஹிப் அவர்களும் மொடிஹரியில் சம்பரனில் உள்ளார்.அருமையான மனிதர், ஆனால் இந்த வயதிலும், அவரது மிதிவண்டியில் தேன் விற்று அவரது வாழ்க்கையை நடத்துகிறார்.ஏனெனில் எங்களால் தண்ணீர் விளையாட்டு பூங்கவினர் மற்றும் ஏரி மக்களை சம்மதிக்க வைக்க முடியவில்லை. மேலும், சில வருடங்களுக்கு முன் வெள்ளம் புகுந்து மக்கள் 20 கிலோமீட்டர் வர நடந்த மும்பைதீயணைப்பு படையினரை இந்தமிதிவண்டியை உபயோக படுத்த எங்களால் சம்மதிக்க வைக்க முடியவில்லை,ஏனெனில் இதனை கொண்டு, பேரூந்து செல்ல முடியாத சந்துகளில் கூட செல்ல முடியும். ஆகவே, நாங்கள் அதனை மீட்பு வாகனமாய் கிடைக்ககூடிய சிக்கலில் இருந்து, கிழக்கு இந்தியாவில் பல்வேறு தீவுகளுக்கு வெள்ள நேரங்களில் பல்வேறு இடம் செல்ல கூடிய ஊர்தியாய் கிடைக்க செய்ய வேண்டும். ஆனால் அந்த யோசைனைக்கு மதிப்பு உள்ளது.
அ.கு.: உங்களில் பலர் நம்ப மாட்டீர்கள்.நாங்கள் இந்த பொருளை உலகம் முழுவதும் விற்கிறோம் - இதனை நான் ஜி2ஜி முன்மாதிரி என்று அழைக்கிறேன்உள்ளூரில் இறந்து உலகம் வரை. ஒரு மச்சசுசெத்ஸ் பல்கலைகழக விலங்கியல் பேராசிரியர் இந்த கருவியை வாங்கினார்,ஏனெனில் அவருக்கு மரங்களின்விதானத்தில் பூச்சிகளின் வேற்றுமையை படிப்பதற்கு. இந்த கருவி சில பனை மரங்கள்விடுத்து பல்வேறு பனையில் இருந்து மாதிரிகள் எடுக்க உதவுகிறது. ஏனெனில் இக்கருவி இல்லாமல் அவர் ஒரு மரத்தில்இருந்து இறங்கி, அடுத்த மரத்திற்கு ஏற வேண்டும். (தெளிவாக இல்லை) எனவே, இந்த முறையாவது, நாம் அறிவியலின் எல்லையில் நிற்கிறோம்.
ரேம்யா ஜோஸ் கண்டுபிடித்தது - நீங்கள் யுட்யூபில் இந்திய கண்டுபிடிக்கிறது என்ற தலைப்பில் தேடினால், நீங்கள் இந்த நிகழ்படத்தினை காண முடியும். அவர் பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது இந்த கண்டுபிடிப்பு நிகழ்ந்தது: துணி துவைக்கும் உடற்பயிற்சி கருவி. திரு காரை ஒரு மாற்று திறனாளி. ஒன்றரை அடி உயரம் உள்ளவரே.ஆனால் தன்னியக்கம், சுதந்திரம் மற்றும் இளக்கத்திற்காக தனது இரண்டு சக்கர வாகனத்தை மாற்றியமைத்துள்ளார். இந்த கண்டுபிடிப்பு ரியோ குடிசை பகுதியில் இருந்து வந்தது. நாம் பேசிகொண்டிருக்கும் இந்த மனிதர் உபிரஜரா, பிரேசிலில் இருந்து எனது நண்பர், இந்த முன்மாதிரியை பிரேசிலுக்கும் சீனாவிற்கும் இப்படி எடுத்து செல்வது என்பதை பற்றி பெசிகொண்டிருக்கிறோம். மற்றும் எங்களுக்கு முக்கியமாக சீனாவில் மிக ஆர்வமிக்க பிணையம் உள்ளது, பிரேசில் மற்றும் உலகில் பல்வேறு இடங்களிலும் வளர்ந்து கொண்டிருக்கிறது.முன்சக்கரத்தின் மேல் உள்ள இந்த நிறுத்தம் வேறு எந்த மிதிவண்டியிலும் நீங்கள் பார்த்திருக்க முடியாது. இந்திய மற்றும் சீனாவில் தான் நிறைய மிதிவண்டிகள் உள்ளது. ஆனால் இந்த கண்டுபிடிப்பு பிரேசிலில் நிகழ்ந்தது.
நான் சொல்ல வருவது என்னவென்றால், நாம் குறுகிய மனதுடன் இருக்க கூடாது,எல்லா எண்ணங்களும் நமது நாட்டில் இருந்தே வரும் என்று நம்மில் யாரும் தேசியவாதத்துடன் என்ன கூடாது. எந்த நாட்டில் இருந்தாலும், பொருளாதாரத்தில் பின் தங்கி இருக்கும் மக்களின் அறிவில் இருந்து கற்று கொள்வதற்கு நம்மிடம் அடக்கம் தேவை. மற்றும் இந்த மிதிவண்டி சார்ந்த கண்டுபிடிப்புகளின் தொகுப்பை பாருங்கள்: மருந்து தெளிக்கும் மிதிவண்டி; நிலா அதிர்வில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் மிதிவண்டி. சாலைகளை என்னால் சேரி செய்ய முடியாது; எனது மிதிவண்டியை வேகமாக செல்ல வைக்க முடியும். இது தான் செய்ய பட்டிருக்கிறது. (தெளிவில்லை) மற்றும், தென் ஆப்ரிக்காவில், நமது படைப்பாளிகளையும் அழைத்து சென்றோம், அவர்கள் தங்களது தென் ஆப்ரிக்க சகாக்களுடன் எவ்வாறுபுதுமைகள் மக்களின் அடிமைத்தனத்தில்இருந்து விமோசனம் தரும் என்பதை பகிர்ந்து கொண்டனர். இது தான் மாற்றி வடிவமைத்த கழுதை வண்டி. அங்கு 30,40 கிலோவில் அச்சாணி ஒன்றுஉபயோகமில்லாமல் இருந்தது. அதனை எடுத்து விட்டால் இந்த வண்டிக்கு ஒரு கழுதை குறைவாக தேவைப்படும்.
இது சீனாவில் நடந்தது. இந்த சிறுமிக்கு சுவாசிக்கும் கருவி தேவைப்பட்டது.கிராமத்தில் உள்ள இந்த முன்று பேர் உட்கார்ந்து "எவ்வாறு அந்த சிறுமியின் வாழ்நாளை அதிகிரிப்பது?" என்று யோசித்தனர். அவர்களுக்கும் அந்த சிரிமிக்கும் எந்த சொந்தமும் இல்லை, இருப்பினும் ஆவர்கள் முயற்சித்தனர்.துவைக்கும் இயந்திர குழாயயை இப்படி உபயோகிக்க முடியும், அவர்கள் மிதிவண்டியை உபயோகித்து, சுவாசிக்கும் கருவியை தயாரித்தனர். இந்த சுவாசிக்கும் கருவி கொண்டு அந்த சிறுமியை காப்பாற்றினர். அவள் மகிழ்ச்சியாய் இருக்கிறாள்.
பல்வேறு வகையான புதுமைகள் நம்மிடம் இருக்கிறது. ஆறு பைசாவில் ஒரு கிலோமீட்டர் செல்லும், அழுத்த காற்று மூலம் இயங்கும் தானூந்து. அசாம், கனக் கோகாய். இந்த தானூந்து அமெரிக்காவிலோ ஐரோப்பாவிலோ இல்லை. ஆனால் இந்தியாவில் உள்ளது. இந்த பெண்மணி பொச்சம்பள்ளி புடைவை நெய்ய நூல் சுற்ற வேண்டும். இரண்டு புடைவை தயாரிக்க ஒரு நாளில் 18000 முறை இவ்வாறு சுற்ற வேண்டும். ஏழு வருட கடுமையான உழைப்பிற்கு பிறகு, இதனை அவரது மகன் தயாரித்துள்ளார். "உனது தொழிலை மாற்றி கொள்" என்று அவர் சொன்னார். அவர் சொன்னார் - " என்னால் முடியாது. இது ஒன்று தான் எனக்கு தெரியும். ஆனால் என்னால் உங்கள் பிரச்சினையை தீர்க்கும் ஒரு கருவியை கண்டு பிடிக்க முடியும்." இது தான் அவர் கண்டுபிடித்தார். ஓர் தையல் இயந்திரம், உத்திர பிரதேசத்தில். ஆகையால், இதை தான் சிருஷ்டி கூறுகிறார் - "எனக்கு நிற்க இடம் தாருங்கள். இந்த உலகையே நான் நகர்த்துகிறேன்."
மற்றும் நாங்கள் குழந்தைகளிடம் கற்பனை திறனுக்காக ஒரு போட்டி நடத்துகிறோம்.நாங்கள் எதியோபியாவில் துவங்கி துருக்கி முதல் அமெரிக்க வரை உலகம் முழுவதும் விற்றுள்ளோம். சில பொருட்கள் வியாபார சந்தையையும் அடைந்துள்ளது. இந்த மக்களின் அறிவினால் தான் படை நோய்க்குமூலிகை களிம்பு கண்டுபிடிக்க முடிந்தது.இந்த மூலிகை சூத்திரத்தை உபயோக படுத்தும் நிறுவனம் அந்த படைப்பாளியின் புகைப்படம் பொட்டணத்தில் இருப்பதால், ஒவ்வொரு முறையும் நுகர்வோர் அந்த பொருளை பயன்படுத்தும் பொழுதும்,"நீங்களும் படைப்பாளி ஆகலாம்.உங்களிடம் யோசனை இருந்தால், எங்களிடம் அனுப்புங்கள்" என்று அவரை கேட்கும். ஆகவே, கற்பனை திறன் முக்கியமானது; பயன்பாட்டு அறிவுபொருட்டில் கொள்ள வேண்டும்; புதுமைகள் உருமாற்றும்; ஊக்குவிப்பு ஊக்கமூட்டும்.ஊக்குவிப்பு, பொருள் சார்ந்தது மட்டுமல்ல, பொருள் சாரா ஊக்குவிப்பும் தான்.