Sunday, October 31, 2010

ஒப்பனை

பெண்ணே நீ செய்துகொள்ளும் 
ஒப்பனையில் உன்னுடைய 
ஒரு மணி நேரம் தான் 
வீணாவதாய் நினைக்கிறாயா?

நீ வெளியில் புறப்பட்டது முதல் 
வீடு திரும்புகிற வரை - எத்துனை                             
ஆண்களின்  கண்ணில் 
விழுந்தாயோ - அத்துணை 
பேரின் ஒரு மணி நேரமும் தான்..! 

Tuesday, October 26, 2010

என்றோ எழுதி கசங்கியது



ஆதியில் அன்னையை சுற்றி வந்தேன்..!
தந்தையின் தோளில் தொத்தி கொள்வேன் ..!
தாத்தாவை மறக்க முடியுமா ? - அவர்
தலையில் ஏறிக்'கொல்வேன்' ..!
பட்டாம் பூச்சியாய் திரிந்தேன் ..!
ஆம் , வண்ண மலர்கள் கண்களை
மயக்கின--தோழர் கூட்டம்
ஆயிரம் பாடம் புகட்டியது ???


அன்னையின் அன்பை - அவசரகதியில்
பலமுறை கீழே கொட்டி விட்டேன்
தோய்ந்து போன என்
தந்தையின் தோள்களை கவனிக்க
மறந்தேன் ..???
கன்னியின் கடை கண் பார்வைக்காக
காத்து காத்து கிடந்தேன் ..!

கிடைத்தது மின்னல்களும் -அதை
சேமித்து வைக்கும் நுட்பங்களும்
ஒரே காதலை - இருவரும்
அடைகாத்தோம் தனி தனியாக ..!

உறவு சங்கிலியால் பிணைக்கப்பட்டு
அவளும் போனாள் அவள் அத்தானோடு
இதயத்தை கிழிக்காமல் தான் நுழைந்தாள்
போகும் போது அதை செய்து விட்டு போனாள்
திரும்பி பாத்தேன் - என்
அன்னை இன்னும் காதலித்து
கொண்டிருந்தாள் என் முழுமையையும் ...!


தாய் மடியை காட்டிலும் - ஏது உயர்வு ?
இப்போது நான் விடுதியில் ...
எப்போதாவது நான் - விருந்தாளியாய்
வீடு போவேன் ..!

அவளது வேலைகளை இடையுறு செய்து
ஒரு குழந்தையாய் அவள் மடியில்
தலை சாயும் நேரம் ...
ஆகா..! சொல்வதற்கு எந்த மொழியிலும்
வார்த்தை இல்லை ..!

ஈரேழு பிறப்புகள் எடுத்தாலும்
கிடைக்காது எனை பெற்றோர் போல்
ஆடுகின்ற சுதந்திரம் கொடுத்து
ஆட்டுவிக்கும் அதிகாரம் கொடுத்து
ஆனந்தப் படும் அன்பு உள்ளங்கள் ..!
எனக்கடுத்து - எனை சரியாக
புரிந்து கொண்ட ஒரே ஜீவன்கள்..!

என் காதலும் - காதல் பரிசான
கண்ணீரும் அன்னையின் அன்பு
ஓடையில் கலந்திட்ட தருணம்
உணர்வுகளின் உச்சியில்
ஓசைகளின் மௌனத்தில்
திளைத்தேன்..!
வாழ்வு ஓர் இலக்கியம்
இயல்பாய் அமைய வேண்டிய
இலக்கணம் - தெளிந்தேன்

உள்ள துள்ளலோடு தான்
ஒவ்வொரு அடியும் வைக்கின்றேன்
எனினும் வாழ்க்கை பாதையில்
பெருநடை போட்டோர் வழி மறித்து
கேட்டால் ஏனோ திரு திரு வென
விழிக்கின்றேன்-என்
மௌனமும் - பதிலும்
தவறென்று வாதிடுவோர்
முன்னிலையில் என்னதான்
உரைப்பதென்று..!

Monday, October 25, 2010

துபாய் அப்பா

தொலை தூர கானல்
தேசம் நீங்கள் இருப்பது ..!
தொலையாத உம நினைவுகளோடு
எத்துனை நாள் தனித்திருப்பது ...!

அப்பா என்று அடுத்த
வீட்டு பிள்ளை முனகிட
ஓடி வருகிறார் அந்த அப்பா ..!

நானோ அம்மாவுடனான என்
சண்டைகளில் ஓயாமல்
அலறுவேன் 'அப்பா! அப்பா!' என்று ..!

என்ன செய்ய - தொலை பேசி
வழி நீ பேசும் போது
அன்னையின் குறைகளை
அடுக்கதான்
முடிகிறது என்னால்..!

எங்கள் மீது கொண்ட
பிரியத்தில் நீங்கள்
பிரிந்து போனீர்கள் ...!

விடுமுறையில்
வரும் போது
சாக்லேட் , பொம்மைகளோடு
உங்கள் விழி ஓரத்தில்
நீங்கள் எடுத்து வரும்
கண்ணீருக்கு எதப்பா விலை ?

நலமோடு வாருங்கள் - எங்களுக்கு
நலம் கொண்டு வாருங்கள் ...!

- பிரியமுடன் உங்கள் பிள்ளை

காதல் எனும் தேவதை

தினமும் - என் கனவில்
சிறகுகள் மூடி
உறங்க வைக்கிற
தேவதை நீ

அறிவிப்பே இல்லாத
ஒருநாள் - இசைவாய்
நீ பறந்து வந்த நேரம்

மூடி கிடந்த - என்
ஜன்னலில்
மோதிக் கொண்டாய் ...!

கோபத்தின் உச்சிக்கு
மட்டுமல்ல - வானின்
உச்சிக்கும் போய்
வெண்ணிலவில் வாசம்
கொண்டாய் ...!

அன்றிலிருந்து - திறந்தே
கிடக்கிறது
ஜன்னலும் - என்
விழிகளும் ...!
(உன் வருகைக்காக)

Wednesday, October 6, 2010

சுவீடன் தேசத்து வாழ்வியல்

என் அருமை அன்னையை விட்டு
ஈராயிரம் மைல் கடந்து வந்தேன் !
பருவம் தாண்டி வந்து
காதல் தூண்டி விட்ட - கள்ளியை விட்டு
(வட) துருவம் தேடி வந்தேன் !
என்னவென்று தெரியாத உயிர் என்று
தோழர்காள் ! உங்களை சொல்லி வந்தேன் !
நீங்கள் எனக்காக பட்ட பாடெல்லாம்
பார்த்த பின்னர் - உங்களுக்கு நிகர்
ஆகுமோ என்னுயிர் ?
ஐயத்தோடு எண்ணுகின்றேன் !

தாய் நாடு விட்டு - தாய் மொழி
விழுங்கி , ஆங்கிலம் ஒழுக
நாட்கள் நகர்த்துகின்றேன் - இந்த
"சுவீட் (+) அன்"ன நாட்டினிலே ...!

புதிதாய் வந்த எவருக்கும்
சவால்களே வரவேற்பு செண்டுகள் !
தனித்து விடப்பட்டாலும்
தைரியமாய் திரியலாம் - பசுமை
கொழிக்கும் வீதி எங்கும் !
முகம் சுழிக்காத உதவிகள் !
முழு மூச்சான புன்னகைகள் !
எவருக்கும் இதயம் லேசாகி போகும் !

இவனுக்கென ஏற்பாடுகள்
செய்து வைக்க - வறுமையில் உழன்ற
இப்படி ஓர் இந்தியன் - இங்கு
வருவான் என்று யாருக்கு தெரியும் ?!
தாவர எரிவாயுவில் ஓடும்
பேருந்துகள் - தொடர்ந்து பயணித்தால்
எரிபொருளினும் வேகமாய்
எரிந்துவிடும் - என்
பெட்டகத்து பணம், பொருள் !

வெகு சீக்கிரம் தொடங்கி விடுகிற
வகுப்புகளால் தவறி போகும்
விரதம் முறிக்கும் (Break fast)
காலை சிற்றுண்டி ...! - கவலை இல்லை !
பசி மோசமாய் கிள்ளினால் - பாதை
ஓரத்து ஆப்பிள் மரங்களிடம்
மன்னிப்பு கேட்டு கொண்டு - முற்றிய
கனிகளை கிள்ளிக் கொள்வேன் !

கல்லூரி வரை போகும் "கால்நடைக்கான"
குறுக்குப் பாதை "காட்டு வழி" ! - வந்த
நாளே அதற்கு வரைபடம்
வழங்கிட்ட இந்நாட்டரசு வாழிய நீடுழி !
நீண்ட நாள் புதைந்து கிடந்த
ஆனந்த பொக்கிசத்தை - அகழ்ந்து
வெளியில் எடுத்தன - அழகை
அப்பிக்கொண்ட கானகத்து
வனப்புகள் !

கார்பன் திணறடிக்கும் ரோட்டை விட்டு
பிராணன் நிரம்பி கிடக்கும்
காட்டு வழியில் - தொலை பேசியின்
பாடல் குவியல்கள் - செவி
உணவூட்ட - தினமும்
நோகாமல் பத்து காதை பயணம் !
"இந்த தேசத்தில் வீணாய்
எதற்காக பூக்கிறாய் ? - என்னோடு வா
என் தேசம் போகலாம் " என்றேன்
வழி நெடுகும் குலுங்கும் பூங்கூட்டத்திடம் !
"எதற்காக ?" என்றன பூக்கள்.
" வெறும் சாகும் சாபம் வாங்கி வந்து
இங்கு முளைத்தீர்கள் ! - நளினம்
தோய்ந்த தெய்வ மகளிர்
கையில் சாகும் வரம் வேண்டாமா ?" என்றேன் !!!


(இன்னும் .. பிறவும்
மௌன வெளியில் வார்த்தைகள் தேடி
போயின - திரும்பி வரட்டும் !)

** ஏக போக வாழ்க்கை ஈதில்லை
எனினும் இயற்கையோடு
இயைந்த வாழ்விது!
போக "போக" புளித்திடும் பால்
வேண்டாம் எனக்கு !
ஒரு மிடறு தான் எனினும்
ஊற ஊற இனித்திடும் தேன்
வேண்டும் எந்நாளும்!

என் இதயத்தின் வருகை பதிவேடு


என் இதயத்தின் வருகை பதிவேடு



2161070 01 - "தமிழ் தெரசா"
காட்டிய கருணை மழையில்
'கணக்கு - வழக்கு' இல்லாது
நனைதோம் [she was our accountant]

2161070 02 - "அகமது" குளிர - ஆயிரம்
விசயங்கள் பகிர்ந்து
 குலாவினோம்...!


216107 03 - "தேவி மகாலெட்சுமி" யின்
அருள் குடை நிழலில்
எப்போதும் அமர்ந்து
இளைப்பாறினோம்..!


2161070 04 - "சாலி" கிராமத்தில் வாழும்
தமிழ் திரை நடிகர்கள் போல்
வேடிக்கை செய்து
விளையாடி களித்தோம்...! [Dump-Sharath]


2161070 05 - "சுந்தர" தெலுங்கோடு
சுகந்த தமிழ் கலந்து
பரிமாறிக் கொண்டோம்...!


2161070 06 - "மாதவி" பொன் மயிலாள்
போதித்த கற்பு நெறிதனை
நட்பின் மீது எழுதி
ஒட்டிக்கொண்டோம் ..!


2161070 07 - "புஷ்பா" 'அபிசேகத்தில்'
கூடுகின்ற புண்ணியம்
யாவும் - யாவரும்
கிடைக்கப் பெற்றோம் ..! [She is famous for cracking and teasing everyone]

2161070 08 - "விஜய பிரியா" வின்
கரகர பிரியா "அரங்கேற்ற "
நாளில் - நம்முள் நிகழ்ந்த
நட்பின் விஜயம் - என்றும்
பிரியா எனக் கண்டோம் ...! [She tried to impress the seniors in the intro session with her song]


2161070 10 - "ஷாலினி" பேபி எனும்
குழந்தை நட்சத்திரம்
நம்மோடு தவழ்ந்து
"வி(ள்)ளையாட" கண்டோம் ..! [Her voice still like a baby]


2161070 11 - "கார்த்தி(க்)"கை மாதத்து
 பின்னிரவு மழை பாடும்
"தாலாட்டில்" - இன்ப
"நித்திரை" கொண்டோம் ...!
{நம் மூவைந்து தோழர்களில் பேசும் பொது நாவை அதிகமாய் சுழற்றுவது
கார்த்திக் என்று எத்துனை பேருக்கு நினைவு இருக்கிறது ..! }

2161070 12 - "ஜெயந்தீ" மூட்டி - அதில்
கோபம் கொட்டி எரித்து
 மூண்ட அன்பு
தணலில் - கோர்த்து
கைகள் நீட்டினோம் ...!


2161070 13 - "பெரமநாத" அய்யன்
எல்லையில் முறுக்கி
நின்று செய்கின்ற - ஊர்
"காவல் பணியதனை "
உங்களுக்காய் செய்திட்ட
ஒரு ஜீவன் கண்டிட்டோம்..! [Class Representative , Placement Representative]

2161070 14 - "பத்மா" படர்ந்த
குளத்தில் - துள்ளி
குதித்தாடும் மீன்கள் போல்
வாழ்ந்த நாம் - சிறுநனி
ஏனோ "பட்டும் படாமல் "
இருந்து கொண்டோம் ..!


2161070 15 - "சுகுணா" சிக்கன் - மணக்கும்
மதிய சாப்பாட்டு பெட்டியில்
முழு கோழி பிடிக்கும்
பந்தயம் நிகழ்த்தினோம் ..! [She brings best home made food]


2161070 16 - "கல்பனா" என்றதும்
 சாவ்லா எனும் நாக்கு,
 மெச்சும் அறிவோடு
 படித்திட்ட - மென்மையான
மேதையினை கண்டு - பெரும்
சவால்  என சொல்லக் கண்டோம் ..! [Gold medalist of our batch]


ஓரைந்து நாட்கள் போல்
    இமைபோதில் ஓடிவிட்ட
ஈரைந்து மாதம் சுமக்கின்ற
    வயிற்றை போல் வலிக்கின்ற
மூவைந்து தோழர்கள்
    ஒன்று கூடி வாழ்ந்திட்ட
நாலைந்து மாதத்து - இன்ப
    வாழ்வு தொலைந்தது காண்.!

நினைவுகளுடன் ,
--பெரமநாதன் சத்யமூர்த்தி.