Friday, May 27, 2011

மா மு க - விழிப்புணர்வு பேரணி !


மாணவ முன்னேற்ற கழகம்- விழிப்புணர்வு பேரணி !

வணக்கத்துக்கும்,மரியாதைக்குமுரிய,அன்பார்ந்த,பேரன்பு கொண்ட, பெருமதிப்பிற்குரிய , இன்னும் எல்லாவற்றுக்கும் உரிய  பெரியோர்களே, தாய்மார்களே , குறிப்பாக பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் தம்பி தங்கச்சிகளை பெற்றெடுத்த முத்துக்களே ! எங்கள் சொத்துக்களே! இன்னும் அவர்களுக்கு உறவுகளாய் - அண்ணன்கலாய், அக்காள்கலாய், அத்தான்களாய் , அத்தாச்சிகளாய் இருக்கின்ற மணிகளே ! உங்கள் முன்னால் எங்கள் கழகம் ஒரு முக்கிய வேண்டுகோளினை வைக்கிறது !

எத்தனையோ இடையூறுகளையும் , இம்சைகளையும் தாண்டி வெற்றிகரமாக தேர்வுகளை துணிச்சலோடும், அஞ்சா நெஞ்சோடும் களமாடி முடிவுக்காக காத்திருக்கும் வீரர்களில் சிலர் வீரப்புண் படுவது போர்க்களத்தில் நிகழ கூடிய ஒன்றுதான் என்பதனை நினைவில் கூறுங்கள் ! ஆகவே மக்களே எங்கள் வாகனத்தின் பின் இணைக்கப்பட்டுள்ள ட்ராக்டர் டிப்பரில் தாங்கள் தயாராய் வைத்திருக்கும் அரிவாள் , கத்தி , கடப்பாரை போன்ற கனரக ஆயுதங்களையும் திட்டுவதற்கு தயாராய் வைத்திருக்கும் வார்த்தைகளை எங்கள் கழக கண்மணிகள் தருகின்ற குளிர்ந்த இதமான மோரோடு சேர்த்து விழுங்கி விடுங்கள் என்பதனை வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறோம் !

அதையும் மீறி , ஆயுதங்களை ஒளித்து வைக்க நினைத்தால் ... இதோ பாருங்கள் இந்த பைலிலே ஊரில் உள்ள எல்லோருடைய பெயிலாப்போன  மதிப்பெண் சான்றிதள்களும் இருக்கின்றன , அவைகளை நோட்டீசு அடித்து சம்மந்தப்பட்டவர் வீட்டு சுவரிலே ஒட்டுவோம். அந்த காலத்திலேயே நான் பர்ஸ்ட் மார்க் என பந்தா அடித்து தம்பி தங்கைகளை நோக அடிப்பவர்கள் உளவு 
படையால் வேவு பார்க்கப்பட்டு , வலுக்கட்டாயமாக வர இருக்கும் ஜூன் 29 ல் 
நடைபெற உள்ள உடனடி தேர்வில் அமர்த்த படுவார்கள். வருங்காலத்தில் புது புது வழிகளையும், புதுமைகளையும் செய்ய போகிற, குறிப்பாக சொந்த புத்தியில் வாழப்போகிற  எங்கள் வீரப்புண் பட்ட வீரர்களும், வீராங்கனைக்களுமே முக்கியம் ! முக்கியம் !

நாங்கள் அதிக மார்க் எடுக்கும் அறிவு ஜீவிகளுக்கு எதிரானவர்கள் அல்ல. அவர்களை வைத்து எங்கள் அதி புத்திசாலிகளை எடை போடுவதைத்தான் வன்மையாக கண்டிக்கிறோம். இருபது , இருப்பத்து ஐந்து ஆண்டுகள் வெறும் பாடப்புத்தகங்களை படித்து விட்டு , பெயருக்கு பின்னால் முழ நீள பட்டங்களை போட்டு பயமுறுத்தினாலும் , இறுதியாக வாழ்கையை கற்க, அதன் ஏற்ற இறக்கங்களில் சறுக்கி விளையாடிட எங்கு வர வேண்டும் தெரியுமா ? இன்றைக்கே விழுவதையும் எழுவதையும் பழகி கொண்ட எங்கள் வீரக் கண்மணிகளிடம் , ஏதோ சில காரணங்களால் இன்றைக்கு  தோற்றுப்போன நாளைய நட்சந்திரங்களுக்கு பின்னால் ஓடத்தான் போகிறீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள் !

வறுமையை எதிர்த்து போராடி , தேர்விலே வளமாக தேறி , அடக்கமாக இருக்கும் தம்பி தங்கைகள் ஆண்டுதோறும் பெருகி கொண்டு இருப்பது உள்ளத்திற்கு களிப்பு ஊட்டுகின்ற செய்தியாம். அவர்களுக்கு செய்ய முடிந்த எல்லாவித உதவிகளையும் செய்வோம் என்பதனை கூறிக் கொண்டு , , , 

நம்முடைய சுற்றுலா துறையை பெருமைக்குரிய இடத்திற்கு கொண்டு சென்றுள்ள முனைவர் , வெ. இறையன்பு IAS, மக்கள் பணியோடு , இலக்கிய பணியும் செய்கிற , இன்னமும் நிறைய விசயங்களை தேடிக்கொண்டு இருக்கிற அவர்களை பேச அழைக்கிறேன். வெகு ஆண்டுகளுக்கு முன்னரே இவர் எழுதிவிட்ட ஏழாம் அறிவு , ஐ ஏ எஸ் , ஓடும் நதியின் ஓசை போன்ற அய்யாவின் புத்தகங்கள் மாடிக்கடை முச்சந்தியில் அமைக்கப் பட்டுள்ள அரங்கில் கிடைக்கும் என்பதை தெரிவித்து கொள்கிறோம் !

அய்யா அவர்களுக்கு , கட்சியின் இளைஞர் பாசறை தலைவர் திலீபன் அவர்கள் மலர் செண்டும் , செயலர் முருகானந்தம் அவர்கள் பொன்னாடை போர்த்தியும் கவுரவிப்பார்கள் ! (விசிலும் , கைதட்டல்களும் ...)




 (தானாக தொடர்ந்து மூன்று காணொளிகள் தொடரும். இல்லை என்றால்,
 விளிம்புகளில் தெரியும் அம்பு குறியை சொடுக்கவும் )

இந்த புத்தகங்கள் இன்னும் மின் பதிப்பாக வெளிவரவில்லை,வந்தால் இணைப்பு கொடுக்கப்படும். இணைய வர்த்தகத்தில் ஆர்வம் உள்ளவர்கள் படத்தை சொடுக்கவும்!


ஓயாத கழகப் பணியில் ,
பிரேம் சத்யா , ச .ம .உ  


Friday, May 20, 2011

பாட்டி சுட்ட பாட்டுக்கள் - 1 !

(ஔவையார் வேடத்தில் கே.பி . சுந்தராம்பாள் )


தொந்தி கணபதியை தொழுதேத்தி இல்லறம் வெறுத்து வேண்டியழுது , பூச்சூட வேண்டிய தலையில் நரை எழுதி , மூவேந்தர் நிலத்தை சுற்றி திரிந்து அறம் பொதிந்த தேமதுர தமிழ் பாடல்களை இசைத்தவர் இந்த பாட்டி என்று உங்களுக்கே தெரியும் !

மனசு கொஞ்சம் சுணக்கமான பொழுதுகளில் இந்த பாட்டியின் மடியில் தலை சாய்த்து கொள்வதென் வழக்கம். தாலாட்டு பாடி உறங்க வைப்பதற்கு பதிலாக , உணர்ச்சியின் மையத்தில் பாயும் கூர் ஈட்டியாய்   பாட்டுக்கள் பாடி என்னை உசுப்பி விட்டு விடுவார் !

ஏன் வேலைகள் சரிவர முடிவதில்லை. விரும்பி தேர்வு செய்த பாதைதான் எனினும் ஏனோ கற்களும் முட்களும் பாதங்களை பதம் பார்கின்றன ? புலம்பலாய் முறையிட்டேன்.

பிதுங்கி வழியும் தேன் போல, பாட்டியின் இதழ் ஓரத்தில் அனுபவம் பிதுக்கிய 
மெல்லிய புன்னகை துளிர்த்தது , பின் பதிலும் வந்தது !

    அடுத்து முயன்றாலும் ஆகும்நாள் அன்றி 
    எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த 
    உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம் 
    பருவத்தால் அன்றி பழா -- (மூதுரை :5)

பாட்டியிடம் எனக்கு பிடித்தது இந்த உவமைகள் தான். "ராசா நீ என்னதான் முயற்சி பண்ணாலும் என்னைக்கு காரியம் நடக்கணுமோ அன்னைக்குதான் நடக்கும். ஏன்னா,என்னதான் ஒசரமான மரங்களாக இருந்தாலும் பருவம் வந்தாதான் கண்ணு அதன் பழங்கள் பழுக்கும் " என்று என் அப்பத்தாவின் குரலில் எளிமையா விளக்கமும் குடுத்துச்சு அந்த தமிழ் பாட்டி !

"தன்நம்பிக்கையும் 
மண் மீதான பிடிமானமும் 
முன் பாயும் துணிச்சலும் 
நெஞ்சில் பச்சை ஏறியவர்களுக்கு
புயல் என்பது வேர்களை
பிடுங்கி போடுவதற்கல்ல !
உதிர்த்து போட்ட சருகுகளை 
அள்ளி எடுத்து போகவே ! 
பெரு மழையும் வெள்ளமும் 
மூழ்கடிக்கவோ ? 
இல்லவே  இல்லை - கட்டமைத்த 
பாய்மரங்களை ஓட்டிப்  பழகவே !" 

என்று நானும் என்னை உசுப்பி கொண்டு பாட்டியை வணங்கினேன். பாட்டியும் என்னை ஆசிர்வதித்தாள். பிறகு என்ன தாமதம் ?அடுச்சு நொறுக்குங்க ! எல்லாம் நல்லா நடக்க வேண்டிய நேரத்துல நல்லா நடக்கும் !

(இன்னைக்கு தென் மேற்கு பருவக் காற்று படத்திற்காக தேசிய விருது வாங்குன , நடிகை சரண்யா அவர்கள் களவாணி படத்துல சொல்ற வசனம் கூடவே நினைவுக்கும் வந்தது:  "ஆனி போயி ,ஆடி போயி ஆவணி வந்தா அவன் டாப் பா வருவான் "
ஆவணி வரட்டும் !  பொறுமையா உங்க வேலைய பாத்துகிட்டே இருங்க !)



Monday, May 16, 2011

அவனும் அவளும் 4




அவள் :  இன்று உனக்கு 
ஒரு Test. சங்க பாடல்களில் 
செம்மண்ணோடு 
சேர்ந்த நீர் என்கிற உவமை 
மிக பிரபலம் ! 
அதை ஒரு ஏழை பெண் 
ஒருத்தியிடம் அவன் 
கணவன் எப்படி சொல்வான் ?

அவன் : ..........
நான் பாலில் 
நழுவி விழுந்த
பழம் அல்ல
நினைத்தால்
பிரிந்து போவதற்கு ! 
உன்னோடு 
திடமாய் சாயம்
ஏறிய தேநீர் ..!

அவள் : அடப்பாவி கொலை
பண்ணிட்ட எழுதுனவரு இப்ப
இருந்தா உன்ன
கொலை பண்ணிடுவாரு !
சரி ! ஒரு தலை காதலன் 
எப்படி சொல்லி இருப்பான்?

அவன் :  ஊ .ம்
உன் வெட்கத்தின் 
நிழலில் உலர்ந்த
மருதாணி கழுவப்பட்ட 
குவளை நீராய் என்
காதல் நெஞ்சம் !
அந்த மகிழ்ச்சியை 
அரை நாழி விட்டாயா?
வெயில் தெறிக்கும்
உன் கொல்லைபுறத்தில்
கொட்டிவிட்டாயே !

அவள் : இன்னும் சற்று நேரத்தில் 
காதலில் விழப் போகிறவர்களுக்கு
விழுந்து கொண்டு இருப்பவர்களுக்கு
எப்படி சொல்வாய் ? 

அவன் : (விட மாட்டாயோ )
நல்ல கணவன் வேண்டி 
அரச மரத்தடி பிள்ளையார் 
முன் நீ நின்றிருக்க - உன் 
நெற்றி குங்குமத்திற்காக 
இதுவரையில் - இலையின்
நுனியில் தொங்கி கிடந்த
ஒற்றை துளியாய் என் நெஞ்சம் !

என் காதல் துளி விழுந்ததும் 
துடைத்து விட்டு போவதும்
மீண்டும் குங்குமம் எடுத்து 
கலந்து கொள்வதும் - உன் 
கையில்தான் என் கண்ணே !

அவள் : கொஞ்சம் பெருசா இருக்கு !
இருதாலும் நல்ல கற்பனை !
இப்ப , முதல் காதல் பிரிந்து
மறு காதல் செய்பவர்களுக்கு ?
கொஞ்சம் கிராமிய நடையில் ...

அவன்: (சிக்கலான தலைப்பு !)
சனி மூலை கருக்கையில
மாரியாய் அந்த மவ
பிச்சு கிட்டு இறங்குவான்னு
பக்குவமா ஏ நிலத்த
கொத்தி வச்சேன் - தண்ணி
இரைச்சி உழுதும் வச்சேன் !
பொறுக்காத பெருங்காத்து
அவள வெறு பக்கம்
இழுத்து போச்சு !
சோறு  தண்ணி இல்லாம
"நா" வறண்டு கிடக்கையில
அழுது புரண்டு விட்ட கண்ணீரு
 சேறு குழச்ச சேதியெல்லாம்
 ஊர் கூடி சிரிக்க போகும் வேளையில
அடை மழையாய் வந்தவளே !
நெஞ்சை பிளந்துகிட்டு 
ஓடும் குருதிக்குள்ள 
கலந்தவளே ! - என்னை 
மறு முறை பெத்தவளே !

அவள் : யப்பா ! முடிச்சுட்டியா ?
போதும் தலைவா ! 
(அவனது ஒவ்வொரு பதிலுக்கும் 
 சரி வர புகழாத அவள் - அதை 
 ஆனந்தமாய் திரட்டி கண்களால் 
 அவளுக்கே தெரியாமல் அள்ளி 
 வீசி கொண்டிருந்தாள் . . !
 அந்த அர்ச்சனையில் அவனும் 
 ஆசீர்வதிக்க பட்டான் ..!)

Tuesday, May 3, 2011

அவனும் அவளும் 3



அவள் : நீ ஏன் இப்படி 
எழுதுகிறாய் ? நிறைய 
விசயங்கள் எல்லோருக்கும் 
பலநேரத்தில் 
புரிவதே இல்லை !
எளிமையாக புரிகிற 
வார்த்தைகளில் 
எழுதலாமே !

அவன்: நீ அழகாய் மடித்து
அடுக்கி நிரப்பிய - துணிமணி
பெட்டிக்குள் - உன் விரலுக்கு
அழகு சேர்த்த மோதிரம்
ஒன்று நழுவி விழுந்துவிட்டால்
என்ன செய்வாயோ
அதைத்தான் 
செய்கிறேன் நானும் !


யோசிக்க கூட மாட்டாய்
துணிகளை களைத்து
எறிந்துவிட்டு - மோதிரத்தை
மீட்டு எடுப்பாய் !


நானும் மந்திர பொழுதுகளில்
தவறி விழுந்த விட்ட "என்னை"
தேடி எடுக்கப்போய் - களைத்து
போட்டவைகள் தான் என்
எழுத்துக்களும் !


பொறுமை கொஞ்சம்
தேங்கினால் - நீ
களைத்து போட்டு
துணிமணிகள் கொண்டு  
தீட்டிய ஓவியத்தை
ரசிப்பேன் ! - அவசரம் 
சுழன்றடித்தால் சீக்கிரம் 
அவற்றை திருப்பி எடுத்து 
 மடித்து வைக்க சொல்வேன் !

என் எழுத்துக்கும் 
இதே கதிதான் ! 
நன்கறிவேன் நானும் !

அவள்: சில நேரத்தில் 
அழகான கவிதைகளும் 
எழுதுகிறாயே ! அது மட்டும் 
எப்படி ?

அவன் : அதுவோ !?
தூக்கத்தில் நீ உளறுவது போல 
என்னை மறந்து  
உளறியவைகள் அவை !
ராகம் திருடி - இனிய 
இசைக்குள் சேர்ந்து கொள்ளும் 
சூட்சுமம் தெரிந்த 
இயல்பான மொழி(பு)கள் அவை !
வினோத வெள்ளை 
வான் வெளியில் - வண்ணமாய் 
தெறிக்கும் விண்மீன்கள் அவை !
சிந்தை களவாடி - இதயத்தின் 
கன்னங்களை செல்லமாய் 
கிள்ளும் மென்மையான 
விரல்கள் அவை !

அவள் : நல்லா சமாளிக்கிற !
.............
("மாலை" சூழ 
சூரிய பொழுது 
நிலா பொழுதின் 
மடியில் சாய்ந்தது !
மௌனம் சூழ
அவனும் , அவள் 
மடியில் சாய்ந்தான் !

இங்கீதத்தை சங்கீதமாய் 
படித்தவன் என்கிற முறையில் 
நான் அங்கிருந்து நகர வேண்டி 
இருந்ததது !)