ஓவியங்கள்



காற்றில் கைகளால்
ஆதி மனிதன்
முதலில் வரைந்தான்
சைகை ஓவியம் !

கற்குகைகளில் செதுக்கி
விட்டுப்போனான் - தன்
வரலாற்று காவியம் !

என் தூரிகையை நீவி விட்டதும், ஊக்குவித்ததும் என் அத்தான் திரு.வெங்கட்ராமன் அவர்கள். அப்போது நான் இரண்டாம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன். அத்தான் ஆறாம் வகுப்பு படித்து கொண்டிருந்தார். அது ஒரு விடுமுறை நாள். யாரோ கற்றுக் கொடுத்த மிக்கி மௌஸ் படத்தை வரைந்து காண்பித்தார். நான் அதன் அருகே அதே போல் மிக இலகுவாக வரைவதை கண்டு ஆச்சரியபட்டார். அதோடு நில்லாமல், ஒரு பெரிய நோட்டு புத்தகம் ஒன்று வாங்கி கொடுத்து , அடுத்த விடுமுறைக்கு திரும்ப வருவதற்குள் என்னை நிறைய வரைய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அன்று பழக ஆரம்பித்ததுதான் இந்த சித்திரப் பழக்கம்.  இடையில் பல காரணங்களால் நிறுத்திக் கொண்டேன். பிறகு பனிரெண்டாம் வகுப்பு விடுமுறையில் ஆனந்த விகடன் தனது பவள விழா சிறப்பிதழில் 75 முத்திரை ஓவியங்களை வெளியிட்டது. எத்தனையோ ஆயில் பெயிண்டிங், வண்ணப் படங்களுக்கு நடுவே, என் கண்களை கவ்விக் கொண்டது, திரு.பத்மாவாசன் அவர்களின் "அன்னை ஓர் ஆலயம்" என்ற கோட்டு ஓவியம். 
அன்னை தெரசாவையும், நம் தஞ்சை பெரிய கோவிலையும் இணைத்து பென்சிலின் நுணுக்கமான கொடுகளை கொண்டே வரையப்பட்ட ஓவியம். ஏதோ ஒரு துணிச்சலில் A4 அளவு காகிதத்திற்குள் தஞ்சை பெரிய கோவிலை இரண்டு நாட்களில் கட்டி முடித்தேன். பழைய ஆனந்த விகடனின் காகித அளவு சிறியதாக இருக்கும். ஓவியங்கள் அழகாய் இருந்த அதே வேளை, விவரமாக இல்லை. எனினும் வரைந்தே ஆக வேண்டும் என்ற ஆசை எனக்குள் புதிய புதிய வழிகளை , நுணுக்கங்களை கண்டு எடுத்தது. பிறகு ஆண்டுக்கு ஒரு படம் வரைந்தேன். இறுதியில் அத்தனை ஓவியங்களையும் மூட்டை கட்டி வைத்திருந்த பையினை ,சுவீடனுக்கு புறப்படும் அவசரகதியில் என்னை வழி அனுப்ப வந்த என் அன்பு சகோதரன் , கும்பகோணம் பேருந்து நிலையத்தில் தொலைத்துவிட்டான். 
என்னிடம் மிஞ்சி இருப்பது அதை அரைகுறையாய் நான் மொபைலில் எடுத்து வைத்து இருந்த புகைப்படங்கள் மட்டுமே. கவலை இல்லை. இதை விட பெரிதாய் , நுணுக்கமாய் வரைவேன். ஒரு குருவின் வழிகாட்டலும், ஓவியதிற்கான சாதங்களை கையாளும் திறமையும் வாய்த்தால் அடுத்த கட்டத்திற்கு நகர்தல் என்பது எளிதாகும். 
அந்த ஓவியங்களில் சிலவற்றை மென்பொருள் உதவியால் வண்ண பூசி எப்படி இருக்கும் என்று பார்த்தேன். மிக சிலிர்பாய் இருந்தது. இவற்றின் உண்மையான பென்சில் ஓவியங்களை கீழே இணைத்துள்ளேன். ஓவியம் உள்ளதை உள்ளபடி எழுத முடிந்த ஒரு அற்புதமான கலை.