Wednesday, March 9, 2011

என்றென்றும் நீ வாழி !


ஓவியங்கள் : பெரமநாதன் சத்யமூர்த்தி 
மெருகேற்றி: பிகாஸா மென் பொருள் 


சிறு வயதில் பொம்மைகளை 
உடைத்து போடுபவள் நீ !
நடு நிசியில் அலறி 
எல்லோர் உறக்கத்தையும் 
கெடுப்பவள் நீ ! - பார் ! அன்றே நீ 
ஆண்களோடு போட்டி போட 
தொடங்கி விட்டாய் !

உன்னையே சுற்றும் உலகம் இது !
இதில் விந்தை என்ன ?
நீ படைத்த உலகம்தான்  இது !

படைப்பாகவே 
படைக்க பட்டவள் நீ !
முயற்சிகள் 
தேவை இல்லை உனக்கு 
இயல்பாய் இரு 
படைத்து கொண்டே இருப்பாய் !

விடைகளை மறைத்து 
கொண்ட மர்மம் நீ !
தயவு செய்து அந்த 
மர்ம முடிச்சுகளை தேட 
துணியாதே ! - உலகம் 
அன்றும் , இன்றும் போல் 
என்றும் உன்னிடம் 
ஏதாவது தேடிக்கொண்டே 
இருக்கட்டும் !

எல்லா கலைகளிலும்
கருப்பொருள் நீ ! வாழ்வு 
தூவும் விதைகளால்
வளரும்  உள்ளத்து 
கருவை கலைத்து விடாதே 
நீ பிரசவிக்கிற 
எதுவும் உலகிற்கே
உய்வு தரும் !

குழவிக்கும் கிழவிக்கும் 
இடைப்பட்டு நீ 
வனப்பாய் இளமை 
கொண்டு வாழ்வது 
கொஞ்சமென நினைப்பாயோ ?
அந்த உன் கொஞ்ச கால 
இளமை உலா பற்றி 
காலம் காலமாய் வந்து விட்ட 
காப்பியங்கள் , காவியங்களை 
படித்து முடிக்க ஏரேழு
பிறவிகள் போதுமோ ?

அதிகாரத்தில் சிறு பங்குதான்
கேட்கிறாய் - நீ ரகசியமாய்
எங்கும்  ஆட்சி புரிவதை மறந்து விட்டு !
ஒன்று புரிந்து கொள் ! - உன் 
அடிமை தனத்திலும் - முழு 
சுதந்திரத்திலும் ஆண்கள் குளிர் 
காயும் தந்திரம் அறிந்தவர்கள் ! 

ஆண் ஆயிரமாயிரம் புதுமைகள் 
படைபதெல்லாம் - உனக்கென  
அருளப்பட்ட - உயிர் 
செய்யும் கலை அதனை  
வேன்றிடவோ ?
இல்லை வென்றுதான் விட்டானோ ?
பார் ! உயிர் குழவி செய்யும் நீ 
குழந்தை தூக்கி 
கொஞ்சி கொண்டிருக்கிறாய் !
ஏதோ - நூறு பக்க 
உயிரோட்டமான புத்தகம் 
கிறுக்கி விட்டான் என - உன் 
கணவன் விருது வாங்கி 
கொண்டிருக்கிறான் !

இன்று நீ - முன்னேறி விட்டதாய்
ஆணுக்கு நிகராய் ஆகிவிட்டதாய் 
முழக்கங்கள் கேட்கிறேன் !
சொல் ! என்று நீ அவனக்கு 
நிகர் இல்லை என்று !
"சக்தி நீ இல்லை என்றால் 
சிவன் இவன் இல்லை" !
என்றோ சொல்லி விட்டான்
அந்த கயிலாயத்தான் !

நீ புரட்சி என்ற பெயரில்  
ஆண் தோல் போர்த்தி 
கொண்டிருக்கிறாய் - அவனை 
வெல்லும் முயற்சியில் 
ஆரம்பத்திலேயே 
தோற்று விட்டாயே ! - உன் 
புத்தியில் உரைக்கும் வரை 
விடாதே - அவனை போல் நீயும் 
ஆயிரம் வழிகளை 
தேடிக் கொண்டே இரு !
உன் சித்தம் விளங்க வைக்க 
காத்திருக்கிறது தாய்மை 
எனும் பெரும் பேறு !

சாமியோ - இல்லை சாத்தானோ 
யார் வந்து விதைத்தது 
அந்நியம் எனும் உணர்வு !
ஆணின் மனதில் அந்நியம் 
எழுந்ததும் முதலில் 
வீழ்த்தப்பட்டவள் நீ !
நல்லவன் எவனோ காவலுக்கு 
வந்தான் - அன்று முதல் நீ 
அவனக்கு பின் ஒளிந்து 
கொள்ள தொடங்கி விட்டாய் !

ஆணுக்கு ஓரே ஒரு கவலை:
 நீ உன் சுய ரூபம் அறிந்தால் 
அவனை தூக்கி எறிந்து
விடுவாயோ என ! - தன் சுயம் தேடி 
யோகம் , யாகம் , தவம் என 
கடும் முயற்சியில் - கடைசியில் உன் 
தாய்மை நிலை அடைகிறான் !
ஐயோ ! பாவம் - வெட்கி 
அதை ஞானம் என விளிக்கிறான் ! 
அனுபவத்தில் , அழ்ந்த ரசனையில் 
கரை கண்டவள் நீ !
சூழ்ச்சிகளால் திருகப்பட்ட 
உன் மூளை அது திருந்தி 
கொண்டால் - விஞ்ஞானம் என்ன 
மெய்ஞானம் என்ன 
வீழ்ந்து விடும் உன் காலடியில் !

துணைவனுக்கு பக்தியாய் 
கருணையாய் - துரத்துபவனுக்கு 
பத்திர காளியாய் கோயில்களில் 
மட்டும் அமர்ந்தது போதும் !

உன் அழகும் , அன்பும் - சேர்ந்த  
நல் அறிவும் தன்னை 
உச்சத்தில் கொண்டு போய்
நிறுத்தவே என புரிந்த  ஆணும் ,,,,,
சந்தை பிழைப்பிற்கு -அவன்
 பழகி கொண்ட  வீரமும் , அறிவும் 
உன்னிடத்தில் காட்டுகின்ற 
சில முட்டாள் தனங்களும் 
மெல்லிய சில முரட்டு தனங்களும் 
உன் தாய்மை உள்ளத்திற்கு 
கொடுக்கப்படும் விருந்தென 
ருசிக்கின்ற நீயும் 
காலத்தின் தேவை ! 

போதும் ! போதும் ! பேதை 
பெதும்பை , மங்கை 
மடந்தை , அரிவை
தெரிவை , பெரிளம்பெண்டீரே !
நீங்கள் திட்டி தீர்க்கும் முன்னே 
நிறுத்தி விடுகிறேன் என் புத்தி 
புகட்டல்களை !
உண்மையில் உங்களை 
உங்களுக்கு காட்டும் கண்ணாடி என 
இருந்தேன் இதுவரையில் ..!

இந்த நுண் உணர்வெல்லாம் 
அன்னை , சகோதரி ,
கூட்டாஞ்சோறு  சமைத்த
சிறு வயது தோழிகள், பதிலுக்கு 
பதில் பார்வை மட்டும்
பகிர்ந்து கொண்ட 
முகவரி தெரியாத தாவணிகள்,
அன்பான தோழிகள், 
என்னவள் - என எல்லோரும் 
தந்தவை !

(எப்படி எல்லாம் தப்பிக்க வேண்டி இருக்கு !)

கடைசியா ஒரு கவிதை :

" நீ மர்மங்கள் அப்பிக்  கொண்டு 
ரசனைகளின் ஒட்டு மொத்த 
சாறெடுத்து இதயம் நிரப்பி
மெய் மறந்து - இளமையின் 
சில தனிமைகளில் லயித்து 
பொங்கும் ஆனந்தத்தை 
உதடுகளின் ஓரங்களில்
 நறுமுகையாய் கசியவிட்டு   


ஆண்களை தேய்க்கும் பிறை 
நுதலில் அளவு திலகம் இட்டு
ஊஞ்சலாடும் தோடுகள் தரித்து 
எல்லை இல்லா பிரபஞ்சத்தை 
விழுங்கும் - விழிகளுக்கு 
கரு"மை" எல்லைகள் வரைந்து 
தேவதை உனக்கென பூத்திடும் 
பூக்கள் சூடி - கலைந்த கூந்தலை 
சரி செய்யும் போதெல்லாம் 
குறும் பாடல்கள் இசைக்கும் 
வளையல்கள் மாட்டி 
வீதியில் உன் பாதம் 
பட்டு விட்டதென - ஊருக்கே 
ஒலி பரப்பும் கொலுசுகள் அணிந்து  
பட்டுப்  புடவை உடுத்தி
தங்க ஜரிகை மின்னும் 
முந்தானை சுற்றி எடுத்து
கோயில் போய் சிலைகளுக்கு 
தெய்வீகம் ஊட்டி
கையில் சுமக்கும் அர்ச்சனை 
கூடையில் கிடக்கின்ற 
தேங்காய் போல் மனதை 
உடைய விட்டு   
 நீ பவனி வந்த  மாட வீதிகளை 
இன்று வெறிச்சோட விட்டாயே ! "


நன்றி : உதிர்ந்து போன பென்சில் துகள்களுக்கும்  
மெருகேற்றி தந்த பிக்காச மென் பொருளுக்கும் !
மேலும் இந்த ஓவியங்கள் ஆனந்த விகடனலில்
வெளிவந்த 75 முத்திரை ஓவியங்களில் இடம்
பெற்றவை (இரண்டாவது  ஓவியத்தை தவிர ). அந்த 
ஓவியங்களால் உந்த பட்டு எனக்கு பிடித்த சில
ஓவியங்களை என் பென்சிலுக்கு சொந்தமாக்கி 
கொண்டேன்