Tuesday, December 17, 2013

வரைவு விழவு முகவோலை !


தோரணம் - ஒத்தாழிசைக் கலிப்பா



தரவு  - ஆசிரியத்தாழிசை
கன்னியவள்    கழுத்துகண்ட மங்கலம்பூண் கனவுஒன்றை
சென்னியவன் கைக்கொண்ட மரகதநாண் தினவுஒன்றுடனே
பொன்னியது வெற்றிலையால் அழைக்கின்றோம் ஒன்றிணைக்க

தாழிசை - குறள் வெண்செந்துறை
வெற்றியென்னும் தமிழ்ப்பொருளி ஜெயந்தி நாதனைப்
பற்றியென்றும் பரந்தருளி அன்புப்பூச் சூடினாள்

சத்தியுடன் பரமனும் சதிராட்டம் புரியவே
சத்திதாச பெரமனோ செயந்தியை புரிந்தனன்

உற்றதோர் உணர்வினை உற்றார் உறவறிந்து
பெற்றோரும் அறிந்துபின் மற்றாரும் அறிந்தனர்

அராகம் - கலிவிருத்தம்
சொல்லதொரு சொல்லிலா பொருத்தம் மகிழக்கேட்டு
இல்லதொரு குறையென இல்லங்கள் மகிழக்கண்டு
நல்லதொரு நாள்கூடி மணவுறுதி குறித்தெழுத
கல்லதொரு கள்ளமில் கற்புடை வாழ்வதுவாம்

அம்போதரங்கம் - அகவல் துள்ளலோசை
கண்ணுக்குள் கணைவிடும் மின்அன்பு வில்லினை
தண்ணுக்குள் விழுந்துலாவும் செந்தழலை
பண்ணுக்குள் பொதிந்த செந்தமிழை
செம்பவனம் மயலவீசு மாலையை
செம்பவளம் பெயலபூசு மாமையை
தளிர் இளங்கொடியை
ஒளிர் இளம்மதியை
வெய்யில் தருநிழலை
மெய்யில் உறைஉயிரை
பலாவுகுக்கும் சுளையினை
எலாமாகிடும் காதலை

தனிச்சொல்
மனம்இனிந்து

சுரிதகம் - நேரிசை ஆசிரியப்பா
மனம்புரி காதலர்  மணம்புரி நாளினை
மன்றினை  அறிந்துவாம் உறவே !
குன்றிணை நட்பே ! சூழ்தாம் அன்பொடே !

----------------------------------------------------------------------------------
இருப்பத்து ஏழெனத் தைத்திங்கள் பொங்க
விருப்பொத்து ஏறுமே நாண்    
 [தை 27 : Feb 9,2014]
---------------------------------------------------------------------------------------------------------------------
                           
இவண் 
பெரமநாதன் சத்யமூர்த்தி

Wednesday, September 25, 2013

உழத்திப்பாட்டு - A Song for Country Girl !




காதல் கண்கள்  மாட்டிய
'உளத்தி' நிந்தன் முகம் - அது 
இரட்டை சண்டிக் காளைகள்
பூட்டி வைத்த ஏர் அடீ !

சேற்று அழுக்கு அப்பியே
நெஞ்ச வயல் கிளறிய
'ஓர் ஏர் உழத்தியே !' - பட்ட
தொட்ட இடமெலாம்
பூத்தது விதைகளே !
விந்தை !  அன்றி வித்தையோ ?

ஒளி தெறித்து கூட்டமாய்
ஓடி வந்த மேகமும் - நின்று
சுற்றி முழங்கவே ! - யார்
மறைந்து விட்டது
நீரில் செய்த கணைகளை ?
கிடந்து வாய் பிளக்கவே
நீர் தவித்த நிலத்தின் மேல்
கடந்துபோகக்கடவது : மேகம்
கருணை செய்தது எப்படி ?

திமிர் ஏறி பயிர் நின்றால்
களை மண்டி தலை தட்டும் !
உயிர் நொந்து பயிர் படுத்தால்
களை வாடி உரமூட்டும் !
ஊடல் களை(லை)கள் ஊடவே
காதல் பயிர் வளர்கவே !

பச்சையாம் பசுமையாம்
உள்ளம் எங்கும் எங்குமே !
செக்கையாம் செம்மையாம்
செய்+அந்தியை நினைக்கவே !



பி.கு: 'ஓர் ஏர் உழத்தி'  என்கிற பயன்பாடு
குறுந்தொகையில் 131  பாடலில் வரும்
'ஓர் ஏர் உழவன்' என்கிற சொல்லில் இருந்து
தூண்டப்பட்டது . அந்த பாடல் :

ஆடு அமை புரையும் வனப்பின் பணைத் தோள்
பேர் அமர்க் கண்ணி இருந்த ஊரே
நெடுஞ் சேண் ஆர் இடையதுவே; நெஞ்சே,
ஈரம் பட்ட செவ்விப் பைம் புனத்து
ஓர் ஏர் உழவன் போல,
பெரு விதுப்பு உற்றன்றால்; நோகோ யானே

பொருள் :

மூங்கிலின் வனப்பில் பருத்த தோள் !
பெரிய கண் ! உடையவள் இருக்கும் ஊரோ..
நெடுந்தூரம் ! அடைதல் எளிதல்லவே ; [என்] நெஞ்சு
'மழை நனைத்து ஏதுவான புனத்தை உடைய 
ஓரே ஒரு ஏரால் [தனித்து விரைந்து] உழும் உழவன் போல' 
மிகுந்த ஆர்வம் கொள்கிறது [அவள்பால்] ! நோகிறேன் நான் !


Friday, July 5, 2013

[இரங்கற்பா ] விழுந்தது விதை ! தொடர்ந்திடும் கதை !





அதர்மம் புரிந்த தர்மபுரி !
ஊருக்கு அவன் வெறும்
இளவரசனாக இருக்கலாம் !
அவனின் அவளுக்கு 
இராசகுமாரன் ..!

கொஞ்சநாள் அவன் செய்தியை
தினசரிகள் குறித்து வைக்கும் !
காதல் வரலாறு இவனை குறித்துக்கொள்ளுமா?
குறைந்தது கண்டு கொள்ளுமா ?
பிணவாசம் வீசும் அதன் பக்கங்களில்
"அம்பிகாபதி - அமராவதி
லைலா - மஜ்னு ... இன்னும் இத்தியாதி
இத்தியாதி இதிகாசப் பிணங்கள்
இன்றும் அழுகி போகாதவை !
இதிலேனும் இந்த மலரை
நாறடித்து விடாமல் இருப்பது நல்லது !

ஒரு இரயில் எங்கேனும்
எப்போதேனும் தடம் புரளலாம் !
இந்த சமூகமும் எங்கேனும்
எப்போதாவது நம்மை மகிழ்ந்து
வாழவிடலாம் ! - அதுவரையில்
இளவரசன்கள் இதுபோல்
தனித்து ! துணிந்து ! எதிர்த்து !
நின்று ! கசந்து ! இழந்து ! - இறுதியில்
அடிபட்டு வீழ ! - நிற்காமல்
தடதடத்து ஓடிக் கொண்டே இருக்கும்
சாதிய சமூகம் எனும் இந்த பழஞ்சரக்கு இரயில் !
- பெரமு

# உன் உயிர் அமைதில் உறங்கட்டும் :(