Tuesday, November 9, 2010

வாழ்வின் முதல் பனி மழை



குழந்தையாய் - தூறலில்
நனைத்த சந்தோசங்கள்
காலத்ததின் படிவுகளால் 
தோண்டி எடுக்க வேண்டிய 
ஊற்று நீராய் - நேற்று வரை 

இன்றென்ன நிகழ்ந்து விட்டது 
அதிசயமாய் - கிடைத்தது 
பனி மழை அபிஷேகம்
எல்லா நிறங்களும் 
தங்கள் வேறுபாடுகளை 
விட்டு விடவோ - இப்படி 
வெள்ளை போர்வை போர்த்தி 
கொண்டாடுகின்றன ..!

மேக கூட்டங்களை 
மேலிருந்து ஊதித்  தள்ளியது 
யாரோ? - ஆடை 
போர்த்தப்பட்ட உடல் 
ஆசிர்வதிக்க படவில்லை 
என்றாலும் - காட்சியுற்ற 
கண்களும் , மென் பனி 
தீண்ட பட்ட முகத்தின் 
பாகங்களும் மோட்சத்திற்கு 
போவதற்கு முன் அனுமதி 
பெற்று விட்டன ..!

இயல்பு வாழ்க்கை 
பாதிக்கப் பட்டதாய்
அறிவிக்கப் பட்டது..!
என் இயல்பே வேரோடு 
பாதிக்கப் பட்டதை 
 யாரிடம் அறிவிப்பது ..! 

தோழர்கள் நாங்கள் 
மீண்டும் எங்களை 
குழந்தையாய் 
பிரசவித்து கொண்டோம்..!
கையில் திரண்ட 
பனி உருண்டைகள் 
அள்ளி ஒருவர் மீது 
ஒருவர் வீசி கொண்டோம்..!

ஆதி முதல் இந்த 
உலகம் வண்ணமாய் 
இருந்தாலும் - நாம் 
படித்த வரலாறுகள் 
கருப்பு வெள்ளை தானே..!
வரலாற்று ஓவியமாய் 
இந்த இருண்ட வானமும் 
வெண் பனி மூடிய வழிகளும்..!

உறைந்து விழுகின்ற 
மழையோ ? - அது 
என்னை உருக வைத்தது 
பிழையோ ? - ஏதோ அறுபட்டு  
விழுந்ததே - எனை 
பொம்மையென கட்டியிருந்த 
இழையோ ?

இந்த சின்ன சின்ன 
பனிக் கட்டிகள் 
மோதி - இப்படி 
சின்னா பின்னமாய் 
சிதறினேனே..!
யாரேனும் அள்ளி 
எடுத்துத்  தாருங்கள் 
அடுத்த மழையில் 
நான் சிதற வேண்டும் ..!

Friday, November 5, 2010

தீபாவளி

Diwali Graphics

சிறு உரசல் போதும்
தீக்குச்சி பற்றிக்கொள்ளும் ..!
கையளவு நெய் போதும்
மணிக்கணக்கில் - திரிகள்
சுடர் விடும் ..!
அழகு மணி விளக்குகள்
கோர்த்து வைத்தால்
வீடே ஒளி கொள்ளும் ..!

வாழ்வும் இது போலத்தான்
இன்று கூட நீ தோய்ந்து
கிடக்கலாம் - என்றேனும்
நிச்சயம் உரச படுவாய்..!
உன் இதயத்தில் - குழி
விழுந்த இடங்களில்
நம்பிக்கை ஊற்றி வை
ஆயத்தமாய் ..!
இந்த சின்ன அகத் தீயில்
குளிர் காய கற்று கொண்டால்
அணையாத உயிர் சுடர்
தேடும் தாகம் கொள்வாய் ..!

தீமைகளை தீர்த்து
விட்டதாய் - இருளை
கொளுத்தி  கொண்டாடும்
வெற்றி திருநாள்
இந்த தீபத் திருநாள் ..!

வரட்டும் திரு நாள்
வருடம் ஒருநாள் ! - நீ
ஒரே ஒரு முறை
அவதாரம் எடு - உனக்குள்
வெளிச்சம் விழுங்கி
கிடக்கும் சூரர்களை
வேட்டையாடு ..!
எல்லா நாளும்
திருநாள் இனி
உனைக்  கண்டால்
ஓடிடும் சனி ..!

Monday, November 1, 2010

என் வலைப்பூ




ஆயிர கணக்கான வலைபூக்கள் 

இணையம் எங்கும் கொட்டி கிடக்க 
எதற்காக இந்த வலைப்பூ ..?!

தத்துவங்களுக்காக இல்லை 
பொய்களை சொல்லி இதயங்களை 
கொள்ளையடிக்கவும்  இல்லை
எனை பறைசாற்றி கொள்ளவும் இல்லை 

கடந்த காலம் ஏற்றி வைத்த 
கனங்களை நிகழ்காலத்தில் 
சுமத்தி வருங்காலம் எனும் 
கனவு கோட்டைக்கு இத்துனை நாள்
வழி அனுப்பி வந்தேன் - நெற்றி 
கண் திறந்ததோ ? ஞான கண் 
திறந்ததோ ? தெரியாது !
இல்லாத கோட்டைக்கு - சுமை 
தூக்கி வருவதாய் ஓலை ஒன்று 
வந்தது ...................!
இனி என்ன செய்ய !
ஏற்றி வைத்த சுமைகளை 
இறக்கி வைப்பதன்றி !
இறக்கி வைப்பதன் சுகத்தை 
உங்களுக்கும் நான் 
உணர்த்திவிட்டால் - அன்று 
கிடைக்கும் எனக்கோர் 
உண்மை வெற்றி ...!
 
(எனவே ,,,,, இந்த வலைப்பூ)
சில நேரம் கொஞ்சம் எனக்காகவும் 
நிறைய என் தோழர்களுக்காவும் 
சில நேரம் நிறைய எனக்காகவும் 
கொஞ்சம் பிறருக்காகவும் 

எத்தனையோ வண்ண 
வலைப்பூஞ்சோலைகள் 
வேடந்தாங்கலாய் ...!
என் தொட்டதுக்கான வேலையோ   
இப்போதுதான் ஆரம்பம்..!

பிறகு,
என் கிறுக்குத்தனங்களை 
கிறுக்கல்களை ரசிக்கின்ற 
நண்பர்கள் இருக்கின்ற 
நம்பிக்கையில் - உள்ளத்துள் 
ஒழியாமல் வெளிவர 
துடிக்கின்ற மகிழ்ச்சியின் 
தூண்டுதலில் - நானும் 
தனிமையும் சந்திக்கின்ற 
வேளைகளில் - கணிணி
விசை பொத்தான்களின் வழி 
வலைப்பூச்செடிகள் நடுகிறேன்..!

இதய மேகங்கள் - இணைய 
வெளியினில் விதைகள் தூவ 
நிலம் , நீர் காற்றின்றி - உணர்வு 
கொண்ட நெஞ்சங்களில் நிகழ்ந்திடும்
அதிசய வேளாண்மை இது ..! 
பூத்துக்குலுங்கும் நாள் வரும் ..!

நான்கு சகோதரர்கள்