Tuesday, June 28, 2011

மேயாத மான் .. மேயாத மான் ..!


நாடகங்களில் வள்ளி திருமண நாடகத்திற்கு தனிப் புகழ் உண்டு.இன்னும் எத்தனையோ திருவிழாக்களில் இந்த நாடகம் ஒரு சடங்காகவே ஆழ்ந்து விட்டது. பக்கத்துக்கு ஊர்ல தவறாம இந்த நாடகம் போடுவாங்க. பார்க்க போனதே இல்ல. அப்ப கொஞ்சம் விவரம் தெரியாம போச்சு !

தொலைக்காட்சியில் "மேயாத மான்..மேயாத மான்" என்று டி.ஆர்.மகாலிங்கம்  இழுத்துகிட்டே போறத எங்கப்பா ரசிச்சு பார்க்கும் போது , எரிச்சல்தான் வரும். இப்பத்தான் அதுக்குள்ள இருக்கிற சங்கதி எல்லாம் தெரியுது. நம்ம ஆளுங்க காதல்  ரசனை மிக்கவர்கள்   என்பதற்கு இந்த நாடகமும் ஒரு சான்று. அதுவும் எப்படின்னுதான் பாருங்களேன். 


பின் புலம் :

குறவர் பணித்த காவல் பணியதனை
குறத்தி வள்ளி செய்திருக்க - மயிலேறி
குமரன் வந்தான் அவளை சிறை எடுக்க !


வேடன் வேடமிட்டு - "தொலைத்தேன்
வேட்டையாடி மான் ஒன்றை" என்றான்
வேட்டுவ குலத்தி வள்ளியும் திகைக்கவே !


"என் விழி போட்ட வேலிக்குள் அயல் மான்
எதுவும் நுழைந்திடக் காண்கிலையே "
என்றாளே விரிகண் குறத்தியும் !


விடுவானோ குமரன் ! அடுத்ததடுத்து 
விடுத்தான் வினாக்'கள்' கணைகளை
விடைகள் இல்லாமல் அவளும் தவித்திடவே !

[சலித்துப் போன வள்ளி ]
"சரி ! சொல்லிடு மான் அதன் அடையாளம்" 
சந்தமெடுத்து அவளழகை அழகன்  பாட
சரியாய் கேட்டுவிட்டாள் அறியாது !

[இந்த இடத்தில்தான் "மேயாத மான் .." என்ற இரு பொருள்
  பாடலை குமரன் பாடுகிறான்]

தப்பி ஓடிவிட்ட மானென்று
தன்னிடம் அகப்பட்டு நின்ற மானை
தமிழ் தேன் எடுத்து பாடி முடித்தான் அவனும் !


மரத்தன்ன மண்டையோடு இருந்ததை
மடந்தை அவள் உணர்ந்து கொண்டாள்
மன்னவன் வந்த சேதி புரிந்து கொண்டாள் !


வேலனை நினைந்துருகும் நெஞ்சமிது - இந்த
வேடனை மணப்பதில்லை "அறிவாய்"
வேறு பெண் பார்த்து வழி போவாய் ! [என்றாள்]


அண்ணன் ஆனை முகன் யானையாய்
அவளை துரத்த - கிழவனாய் தோன்றி காத்து
அணங்கவளை மணந்து காட்டினான் திரு உருவம் !

சினிமா பாட்டு :




காயாத கானகத்தே நின்றுலாவும் நற்காரிகையே 

மேயாத மான் ....... !                                                     [1 நிமிடம்  40 வினாடிகள்  ]
புள்ளி மேவாத மான் !
மேவும் கான(க)மடைந்து நறு சந்தனமும் 
புனுகும் கமழும் களபங்கள் அணிந்து 
சுணங்கு படர்ந்து - புல் மேயாத மான் !
கானக் குறவ  கண்மணி என வளர் 
கானக் குயிலின் நிகர் குரல் உடையது !
மேயாத மான் !
தேனும் பாகும் தினை மாவும் 
தின்பதல்லால் - புல் ஒரு போதும் 
மேயாத மான் !                                                              [கற்பை புகழ்கின்றான்  ]

சாயாத கொம்பு ரெண்டு இருந்தாலும் 
அது தலை நிமிர்ந்து 
பாயாத மான் !                                                                 [18+]


மான் வரக் கண்டதுண்டோ?- ஒரு 
மான் வரக் கண்டதுண்டோ ?
பசும் புல் போலே நல் மேனி சுணங்கிட
*நவில் தமிழ் போல் அழகிய 
மான் வரக் கண்டதுண்டோ ?
                            
                                                         - தொலைந்த மானைத் தேடும் 
                                                            பிரேம் சத்யா 


<<--=== XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX===-->>


*நவில் - இது சரியானது என்று என்னால் உறுதி செய்ய முடியவில்லை . நானும் ஐந்தாறு முறை 
கேட்டுப் பார்த்தேன். கூகிளும் பாடல் வரிகளை எனக்கு தேடிக் கொடுக்கவில்லை. மற்ற வரிகளை 
இரண்டு மூன்று முறை கேட்டே எழுதிவிட்டேன் !


4 comments:

Jai said...

very nice prem

நா. கணேசன் said...

தொலைத்த மான் கிடைக்கும்!


வினை ஓடவிடும் கதிர்வேல் மறவேன்
மனையோடு தியங்கி மயங்கிடவோ
சுனையோடு அருவித் துறையோடு பசுந்
தினையோடு இதணோடு திரிந்தவனே

’களபங்கள்’ என்று திருத்துக.

Peram said...

திருத்தி விட்டேன் அய்யா ! சிறு சந்தேகம் திடீரென உதித்தது- பாடலில் ஏற்கனவே நறு சந்தனமும் என்று வரும் போது ஏன் கவிஞர் மறுமுறை களபங்கள் என்ற சந்தனத்தின் மற்றொரு பெயரை பயன் படுத்துகிறார். சந்தனமும் புனுகும்
சேர்ந்து குழைத்து உடலில் பூசிக் கொள்ளும் அந்த பட்டைக்கு ஆகு பெயராய் இருக்குமோ?

Peram said...

> Good question.
>
> களபம் என்றால் கலவை என்ற பொருளும் உண்டு.
> நறுஞ்சந்தனமும், புனுகும் கலந்த கலவை.
>
> யானைக் கன்றுக்கும் களபம் எனப் பெயர்.
> அதையும் இதையும் கீழே இழுத்து விளையாடுவதால்.
>
> இம்பர்வான் எல்லை இராமனையே பாடி
>   என்கொணர்ந்தாய் பாணா நீ என்றாள் பாணி
> வம்பதாம் களபம் என்றேன் ''பூசும்'' என்றாள்
>   மாதங்கம் என்றேன் ''யாம் வாழ்ந்தோம்'' என்றாள்
> பம்புசீர் வேழம் என்றேன் ''தின்னும்'' என்றாள்
>   பகடு என்றேன் ''உழும்'' என்றாள் பழனந்தன்னை
> கம்பமா என்றேன் ''நல் களியாம்'' என்றாள்
>   கைம்மா என்றேன் சும்மா கலங்கினாளே.
>
> ஈழத்துக்கும், உங்கள் உப்பசாலாவுக்கும்
> நிறைய தொடர்புண்டு. பின்னர் எழுதுவேன்.

Dr.N.Ganesan - http://nganesan.blogspot.com/2008/12/yaazh-flag-sangili-mannan-jaffna.html