Sunday, July 12, 2020

நீலநீளப்பரவை(கடல்)





சின்னஞ் சிறுகல் மெல்ல விழுந்தன்ன
சிற்றலைகள் அட அந்த கடலின்
நுனிப்புறத்தே! - இம்மாபெரும்
நீலக் கண்ணாடியை யாரோ
இப்படிக் கிடத்தியது என ஐயுற்று
வட்டமடிக்கும் கடற்பறவைகள்!
பொன்னொளிக் கீற்றுகள் 
சால இறங்கி கடலடியை
முத்தமிடும் திகழ்ந்த நற்காட்சி!
விண்மீன்கள் போல ஒளிரும்
கண்மீன்கள் கொண்டவளே!
கடற்கன்னியாய் உள்குதித்துப் பாரேன்!
ஆங்கே வண்ணமயமான
உள்ளம் கிளரும் பவழப் பாறைகள்!
அதற்குள் உன் வரவுக்காய்
காத்திருக்கும் சிறுமீனாய்
அழகுற உடல் அசைத்து நீந்திக் கிடப்பேனே!             

                           — பெரமு

Saturday, June 6, 2020

அவள் சூழ் உலகு

மதி அவள் வெளிவரக் கண்டு
வெய்யோன் நடுங்கி குளிருதே!
தன் விழித்தடம் காட்டி ‘அகப்படுத்த
என் வழித்தடம் நோக்கி
மானொன்று ‘புறப்பட்டு’ வருகுதே!

திரும்பி நான் பார்க்கும் முன்னே!
அலைகளைப் போல் அழகாய் நாடிவரும் 
அவள் நிழலே ஆயிரம் கற்பனை கிளருதே!

ஏழாயிரவண்ண வானவில்
கொஞ்சமும் கலையாத கார்முகில்!
மாமழை பெய்யென பெய்யும் சிறுகுடில்!
பிள்ளைத்தமிழ் ஆடும் மழலை நாநவில்!
உயிர் நரம்பு மீட்டும் மரகத யாழ்!
மெல்ல முழங்கும் வன்பறை
இப்படி நீளும் என் கற்பனையை...
பொற்பைந்தொடி கொலுசின் ஓசை
இதயத்துடிப்போடு சேர்த்து நிறுத்துதே!

நெருங்கி பக்கம் வந்து
காதலின் ஒட்டுமொத்தமும் எடுத்து
கடைவிழியால் ஒரு மின்னல் வெட்டு!
தொலைந்தேன்கரைந்தேன்!
கிட்டத்தட்ட உயிர்போன நிலையில்
இமைகள் மூடி மறுபிறவி கொடுத்தாள்!
மண்ணில் உதித்த இறை அணங்கே!
உன்னழகை கண்ணாறாக் காண சக்தி கொடு!

                     - அன்பன் பெரமு

Sunday, May 10, 2020

சுரும்பூ



சின்னஞ்சிறு சுரும்பின்
இறகுகளின் விசிறலில்
தாங்கியிருந்த பனித்துளிகள்
காற்றில் தெறிக்க
தானும் படபடத்தன
பூவின் இதழ்கள்! - இப்படி
அழகு சிறையணிந்த - அந்தச் சுரும்பும்
இழகு சிறைக்கொண்டு
காம்பிடை மாட்டிய பூவுக்கு
பறக்கும் ஆவல் மூட்டிக் கொண்டிருந்தது !