Thursday, August 4, 2011

மாதவி சொன்ன எழுத்தெல்லாம் ...


  "மாதவி சொன்ன எழுத்தெல்லாம் கல்லு
                                   சிலேட்டில் எழுதினேன் அன்று"   -   [ இரு விகற்ப குறள் வெண்பா ]




ஊராய்ச்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, சிரமேல்குடி , ஜூன் மாதம், 1991:அன்னையின் முந்தானையை முதன்முதல் விட்டு ,அழுது கொண்டே ஒண்ணாம் வகுப்புக்குள் குழந்தைகள் நுழைந்து கொண்டிருக்க, அன்னையை  இழுத்துக் கொண்டே வந்து தன்னை பள்ளியில் சேர்த்துக் கொண்டது ஒரு பிள்ளை. கணித்து விட்டீர்களா ? ஆமாம் நானேதான். படிப்பின் அருமை விளங்கி கொண்ட அதிசயக் குழந்தையா ? சத்தியமாக இல்லை. அடம் பிடிப்பது எப்படி என்று என்னிடத்தில்தான் கற்க வேண்டும் என்று அம்மா அடிக்கடி எனக்கு நினைவு  படுத்தியிருக்கிறாள் பின்னாளில். அப்படியான அடத்தில் இந்த சேட்டையும் ஒன்று. என் வீடு கடைத் தெருவில் அமைந்திருக்கும். என் வீட்டுக்கு எதிரில்தான் பேருந்து நிறுத்தமும். நான் ஒட்டுத் திண்ணையில் ஓடி ஆடி விளையாடும் போதெல்லாம் , தினமும் பள்ளிக்கு குழந்தைகள் சீருடையில் , தோள் மாட்டி பை ஒரு புறம் தொங்க, பிளாஸ்டிக் வாட்டர் பேக் மறுபுறம் தொங்க ஒய்யாரமாய் நடைபோடக் கண்டு வந்தேன். திடீரென தோள் மாட்டிப் பையும், வாட்டர் பேக்கும் என்னை ஈர்த்தன. எனக்கும் வேண்டும் என்று அடம்பிடித்து கதற ஆரம்பித்து இருக்கிறேன். சமாதானத்திற்காக என் அம்மாவும் "நீ பள்ளிக் கூடத்தில் சேர்ந்ததும் வாங்கித் தருகிறேன்" எனச் சொல்லி இருக்கிறார். இப்ப புரியுதா ஏன் இந்த வாலு அம்மாவை அன்றைக்கு பள்ளிக் கூடத்திற்கு இழுத்து வந்தான் என்று. ஒண்ணாம் வகுப்புக்கே சிலேட் மட்டும் இல்லாம , நோட்டு புத்தகம், ஜாமென்றி பாக்ஸ், பேனா , பென்சில் என சகலத்தோட பட்டிக்காட்டுல யாரு போயிருப்பாங்க சொல்லுங்க.

கன்னி மாதா போல் இன்னொரு அன்னை அங்கே எனக்காக காத்து இருந்தார். அவர்தான் மாதவி டீச்சர். ஆசிரிய பயிற்சி முடித்து அவருக்கும் அன்றுதான் முதல் வகுப்பு. இந்த விவரத்தை மேல் நிலை பள்ளியில் படிக்கும் போது , எங்கள் ஊரிலே வசிக்கும் சரோஜா டீச்சரிடம் தெரிந்து கொண்டேன். ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் வைத்திருக்கும் சகலமும் என்னிடத்தில் இருப்பதை பார்த்து அவர் வியந்திருக்க வேண்டும். இவன் கிட்ட என்னமோ இருக்குன்னு நினைச்சாங்கலோ தெரியாது. இல்ல சின்ன வயசுல கொஞ்சம் அழக்கா இருப்பேன்னு சொன்னா நம்பவா போறீங்க. முதல் நாளே அந்த டீச்சர் என்ன அவமானபடுத்திடாங்க. உயரப்படி நிக்க வைக்கிறேன்னு என்னை முதல நிக்க விட்டாங்க. இது தான் முதல்ல நான் முதல் மாணவனா தேர்வான விஷயம். அப்புறம் படிப்பிலையும் கலக்க ஆரம்பிச்சிட்டோம்ல. ஒரு சில மாதங்களில் அந்த டீச்சர் எனக்கும் சேர்த்து மத்தியான சாப்பாடு எடுத்துட்டு வருவாங்க. எனக்கு ஆசையா மீன் முள்ள எடுத்துட்டு ஊட்டி விடுவாங்க. எங்க ஊருக்கே இரண்டு முக்கிய பேருந்து நிறுத்தங்கள். ஒன்று என் வீட்டுக்கு எதிரே , மற்றொன்று தெருவின் மறுமுனையில் இருக்கும் எங்கள் டீ கடைக்கு எதிரே. பள்ளிக்கு செல்ல வேண்டுமானால் கடைக்கு எதிரேதான் இறங்க வேண்டும். மாதவி டீச்சர் தன் பணியின் இறுதி நாட்களில் எங்க வீட்டுகிட்ட இறங்கி என்னை தூக்கிட்டே பள்ளிக் கூடத்துக்கு போவாங்க. எங்கம்மா என்கிட்டே சொன்னப்ப கொஞ்சம் டச்சிங்கா இருந்துச்சு.

அந்த ஓராண்டு அன்பில் எனக்கு நினைவில் இருப்பது மிக மிக கொஞ்ச விசயங்கள்தான். கணக்கில் நூறு மதிப்பெண்கள் எடுத்து இருப்பதை மாணவர்களிடம் சொல்லி கைதட்ட வைத்துவிட்டு என்னை தமிழில் எடுத்த 99 மதிப்பெண்ணை வாசிக்க சொன்னார். ஏனோ தெரியவில்லை,திணறி நின்றேன்.
அவர் திட்ட ஆரம்பித்த பின்னரே சரியாக சொன்னேன் !

அத்தை மீது கொண்ட பிரியத்தில் , அவர் காலில் அடிபட்டு மருத்துவமனையில்  இருந்தபோது , அரையாண்டு தேர்வை விட்டுவிட்டு குடும்பத்தோடு அத்தையை பார்க்கச் சென்று விட்டேன். என்னை கட்டாயம் பெயில் ஆக்கப் போவதாக என் தந்தையிடம் தலைமை ஆசிரியர் சொல்லிக் கொண்டிருந்தார், மாதவி டீச்சர் குறுக்கிட்டு மன்னிப்பு வாங்கிக் கொடுத்தார். "உனக்கு பரீட்சை , பள்ளிக் கூடம்தான் முதல்ல அப்புறம்தான் மத்ததெல்லாம் " எனச் சொன்னவரிடம் சமத்தாய் தலையாட்டியது நன்றாக நிழல் ஆடுகிறது.


பாசம், அன்பு எல்லாம் புரியாத வயசு, லீவு முடிஞ்சு ரெண்டாப்பு வந்தா டீச்சர் இல்ல. ஏன் இல்லனு தெரியவும் இல்ல. யாருகிட்டயும் கேட்கணும்னு தோணல. ஆனா அவங்க என் கிட்ட கேட்டுக்கிட்டத ஒண்ணு விடாம செஞ்சேன். ஆமாங்க அதுக்கப்புறம் படிப்புல அந்த பள்ளிக் கூடத்தையே கலக்கி எடுத்தோம்ல. விடாக் கொண்டன் போல, யாரையும் முதல் மதிப்பெண் எடுக்க விட்டதே இல்லை. இது என் கல்லூரி இளங்கலை வரைத் தொடர்ந்தது. எட்டாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு அரசு நடத்தும் திறனாய்வு தேர்வில் , கல்வி மாவட்ட அளவில் தேர்வான மாணவர்களில் நானும் தேர்வானதும் பள்ளியே என்னை தலையில் வைத்து கொண்டாடியது. அந்த பள்ளியின் வரலாற்றில் அதுதான் முதல் முறை. அருகிலேயே இருக்கும் தொடக்கப் பள்ளிக்கு என் பழைய ஆசிரியர்களை பார்த்து , மிட்டாயோடு இந்த இனிப்பான செய்தியை சொல்வதற்காக சென்றேன். மிட்டாயை எடுத்துக் கொண்ட சரோஜா டீச்சர், மாதவி டீச்சர் இதை கேள்வி பட்டா ரொம்ப சந்தோஷ படுவாங்க என்றதும் அத்துனை நாள் மறந்து இருந்த அவரின் நினைவு மீண்டும் வந்தது.

எங்கள் ஊரில் மேல்நிலை பள்ளி இல்லை. நாட்டுசாலையில்-நம்ம நடிகர் விஜய குமார் ஊருதான்- பேருந்தில் சென்று படித்தேன். சுத்து பட்டு பதினெட்டு பட்டிலேயும் என் பெயர் பெரமநாதன் னு சொன்ன இப்படி எல்லாம் பேரு இருக்கான்னு கேட்பாங்க. அந்த ஊருல ஒரு பய கூட கேட்கல. அப்புறம்தான் தெருஞ்சுது என் பேர்ல நிறைய கிழவனுங்களே இருக்காங்க. அது அந்த ஊரு அய்யனார் பெயராம். அந்த ஊரு நர்சுதான் இந்த பேரை வச்சு, பிறந்த முதல் நாளே ஆபரேசன் தியேட்டருக்குள் பத்திரமாக எடுத்து போனாராம். என் அதிர்ஷ்டத்தை பாருங்கள், அந்த ஊரில் ரெண்டு வருஷம் தெரு தெருவா விளையாடிவிட்டு , கடைசியா போகப் போறப்பதான் தெரிய வந்தது, அந்த ஊருதான் மாதவி டீச்சர் ஊருன்னு, அதுவும் எங்க ஊரு சத்துணவு சமைக்கிற அம்மா ஒருத்தங்க சொன்னாங்க.

அதுக்குள்ள அவங்க எத்தனையோ ஊருக்கு மாறிவிட்டார்கள், இந்நேரம் எங்கே இருக்காங்களோ? கண்டிப்பா அவங்கள கண்டுபிடிச்சு மானசீகமா காலில் விழ வேண்டும் என்று தோன்றுகிறது. முக்கியமே இல்லாதவங்கன்னு நாம ஒதுக்குற எத்தனையோ தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் பசுமரமாய் இருக்கும் நம் உள்ளத்தில் நல்ல விதைகளை அமைதியாக தூவி விட்டு நகர்ந்து விடுகிறார்கள். கண்டிப்பா தொடக்கப் பள்ளிகளுக்கு இந்த மாதிரியான பொறுமை மிக்க, அன்பு மிக்க பெண்களே சிறந்தவர்கள். பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் டீச்சர் ட்ரெயினிங் அரசின் இலவச சீட்டு அல்வா போல் கிடைத்தும் நான் போக மனமில்லாது இருந்தது, என் வருங்கால மாணவன் ஒருவனுக்கு கிடைக்கப்போகும் மாதவியை தடுத்து விடக்கூடாது என்பதால் தான்.

வாழ்க ஒண்ணாப்பு டீச்சர்ஸ் !


1 comment:

Jinnu Panilet said...

Wow Prem! Simply Superb!