பழந்தமிழ்

சிலேடை



குளத்தில் இறங்கிவிட்டால்
அவள் "தாமரை" ! - நெற்
களத்தில் ஆட்டம் போட்டால்
அவள் "தா மரை" !

தாமரை - பூ

தா மரை - தாவுகின்ற மான் !


தமிழுக்கு இது ஒரு சிறப்பு. மிக அதிகமான சொற்களை கொண்டுள்ளதாலும் , ஒரே சொல் வேறு வேறு பொருளை தருவதாலும் , "சிலேடை" (இரண்டு பொருள் தருவது) பாடல்கள் இயற்றப்பட்டன.

உம்(பிரிமொழிச் சிலேடை):

தள்ளா விடத்தேர் தடந்தா மரையடைய
எள்ளா அரிமா னிடர்மிகுப்ப - உள்வாழ்தேம்
சிந்தும் தகைமைத்தே எங்கோன் திருவுள்ளம்
நந்தும் தொழில்புரிந்தார் நாடு

இந்த ஒரே பாடல் பிரித்து படிக்கும் விதத்தில் சோழனோடு நட்பு கொண்ட நாடு எப்படி இருக்கும் என்பதையும், பகை கொண்ட நாடு எப்படி இருக்கும் என்பதைக் காட்டுகிறது.

தள்ளா விடத்தேர் - அசையாத முள்மரம் (கள்ளிச் செடி போன்று)
தள்ளா இடத்து ஏர் - அழகான விளைநிலத்தில் உழும் எருது/காளை

தா மரை , தாமரை

தடம் - மலை, தடம் - பெரிய

அரி மான் இடர் மிகப்ப - ஆண் சிங்கங்கள் தருகின்ற துன்பம் மிகுதியாக
அரி மானிடர் மிகப்ப - நெற்கதிர்களை(அரி) குவிக்கும் உழவர்கள் மிகுதியாக

உள் வாழ் தேம் சிந்தும் - நல்லோர் உள்ளங்களில் வாழும் நாடுகள் அழியும் (சோழனிடம் கொண்ட பகையால்)
உள்வாழ்தேம் சிந்தும் - மலர்களில் தேன் பொழியும்

"நந்தும்" தொழில்புரிந்தார் - "வேறுபடும் / விரும்பும்" படி நடந்து கொள்பவர்கள்.

சுட்டிகள்