Thursday, April 28, 2011

எண்ணும் எழுத்தும் - கணக்கதிகாரம்

 
(பதிவிறக்கம் செய்ய படத்தை சொடுக்கவும்)


ஓன்று :முப்பத்திரண்டு முழ
பனைமரத்தில் - ஒரு
சாண் ஏறி - நாலு
விரல் சறுக்கி தினம்
விளையாடும் ஓணான்
எந்தநாள் தொடும் உச்சி ?

இரண்டு :இரண்டில் ஒரு
பங்கெடுத்தால்
அரை என்பீர் !
நாலில் ஒரு
பங்கெடுத்தால்
கால் என்பீர் !
முந்நூற்று இருபதில் ஒரு
பங்கெடுக்கும் பின்னதை
என்னவென்று சொல்வீர் ?

மூன்று :அறுத்தெடுக்காமல்
உள்ளிருக்கும்
பலாவின் சுளைகள்
எத்தனை என்று
சொல்வீரோ ?

(சந்தேகம் வேண்டாம் !
நிதானத்தோடுதான்
இருக்கிறேன் !
சோம பானம் - சுறா
பானங்களின்
தேவை எனக்கில்லை
தமிழ் போதை
என் சிந்தையில்
இருக்கும் வரை !
விடைகள் பதிவின்
இறுதியில் ..!)

என்ன "எழுதுவது" என்று
"எண்ணி" கொண்டிருந்தேன் !
தமிழ் என்பது
நெஞ்சம் ! உயிர் !
அன்பு ! இயல்பு !
கணிதம் என்பது
சிந்தை ! உடல் !
புத்தி ! பிழைப்பு !
இயைந்து இவ்விரு
முரண்பாடுகளும்
இயங்குமாயின் - அதன்
பொருள் வாழ்வு !
உடல் இருக்க உயிர்
போயினும் - உயிர்
இருக்க உடல் போயினும்
மரணம் வீழ்த்தும்
வாழ்வதனை !

நிற்க !

பலருக்கு கணக்கு என்றால்
சூத்திரங்கள் ! குறியீடுகள் !
சமன்பாடுகள் ! அளவீடுகள் !
தொல்லை கொடுத்து
மூளையின் - மூலை
முடுக்குகள் எல்லாம்
துருவி எடுக்கும்
சுண்டெலி !

நம் சமூகம் கடைபிடித்த
கணக்கியல் மிக இயல்பானது !
வாழ்வோடு மிக நெருக்கமானது !
அதை தாண்டி சென்றதில்லை !
வாழ்வை விட்டு தூரம் போகிற
எதையும் நாம் தொட்டது இல்லை !
உயர் தமிழால் அருளப்பட்ட
நம் முன்னோர்கள் - நன்றி
மிகுதியோ இல்லை
இனம் புரியாத அன்பு மிகுதியோ
கற்பனை வளம் முழுவதையும்
தமிழுக்கும் கலைகளுக்கும்
அர்ப்பணித்தார்கள் !


வாழ்வியல் கணக்கியல் என்றாலும்
அதையும் செந்தமிழ் பாட்டின் வழி
பாடித்திரிந்த கொறுக்கையூர் 
காரி நாயனாரின் திறத்தை
என்னவென்று சொல்வது மக்களே !
*****************************************************************
அவரது கணக்கதிகாரத்தில் இருந்து
சில பாடல்கள் :
******************************************************************

முப்பத் திரண்டு முழமுளமுட் பனையைத்
தப்பாமலோந்தி தவழ்ந்தேறிச் - செப்பமுடன்
சாணேறிநாலு விரற்கிழியு மென்பரே 
நாணாதொரு நாணகர்ந்து
பனையதனை இரட்டித்துப் பன்னிரண்டால் மாறி 
இருநாலுகீந்து கொள் ( விடை ஒன்று )

ஒரு முழம் = இரண்டு சாண்
ஒரு சாண் = 12 விரற்கடைகள்

32 X 2 = 64; 64 X 12 = 768 ; 768/8 = 96 நாட்கள்

*****************************************************
முந்திரி அரைக்காணி முன்னிரண்டு பின்னிரண்டாய்
வந்ததோர் காணிநான் மாவாக்கி ஒன்றொரு
நாலாக்கிக் காலாக்கி நன்னுதலாய் காலதனை
நாலாக்கி ஒன்றாக நாட்டு (விடை இரண்டு )

முந்திரி = 1 / 320
அரைக்காணி = 2*(1/320) = 1/160
காணி = 2*(1/160) = 1/80
மா = 4* (1/80) = 1/20
கால் = 5*(1/20) = 1/4
ஒன்று = 4*(1/4) = 1
***********************************************************************
பலவின் சுளையறிய வேண்டிதிரேலாங்கு
சிறுமுள்ளுக்காம்பருக்கெண்ணி - யறுகாக
ஆறிற்பெருக்கியே யைந்தினுகீந்திடவே 
வேறென்ன வேண்டாஞ்ச்சுளை (விடை மூன்று)

பலாவின் காம்பை சுற்றி 50 முட்கள்
இருப்பதாக கொள்க.

50 X 6 = 300 ; 300 / 5 = 60 சுளைகள்
************************************************************
இவண்,
பெரமு 

Friday, April 22, 2011

Changing Seasons by ARR




ராவணன் படத்திற்காக இசை அமைக்கப்பட்ட 
பாடல் changing seasons என்ற  ஆல்பமாக
ஜனவரி 2011 ல்  வெளிவந்தது!

ரகுமான் தனது தனித்தன்மையை அழகாக 
பதிவு செய்து இருக்கிறார் ! ரகுமானுக்கு 
எதுகை மோனை , கவிதை நயமான வரிகள் 
என்று எதுவுமே தேவை இல்லை ! எதை 
எழுதி கொடுத்தாலும் இசை அமைத்து விடுவார் !
மிக இயல்பான , மிகைப்படுத்த படாத 
கவியரசுவின் வரிகள் இசையோடு குழைந்து
செவிகளை வருடுகின்றன  !

ரகுமான் பின்புல இசை மிக
நுணுக்கமாக இருக்கும்!
பாடலை முழுதாய் அனுபவிக்க
தரமான ear phone ஐ 
பயன் படுத்தவும் !

பாடல் வரிகள் :

மீண்டும்  வருவேன் 
உன்னை  நான்  தொடர்வேன்
உயிரால்  தொடுவேன் !



ஒரு  பிள்ளை  எழுதும் 
கிறுக்கல்தான்   வாழ்கையா ?
அதில்  அர்த்தம்  தேடி 

அலைவதே  வேட்கையா..
அர்த்தம்  புரியும்  போது 

வாழ்வு  மாறுது
வாழ்வு  மாறும்  போது  

அர்த்தம்  மாறுது !


ஒரு  கனவு  காற்றில்  மிதக்குதே ..
அது  மிதந்து கொண்டு சிரிக்குதே ..


நான் வருவேனே 
மீண்டும் வருவேனே
உன்னை  நான்  தொடர்வேனே
உயிரால்  தொடுவேனே !

Thursday, April 21, 2011

அவனும் அவளும் 2












அவள் : என்னோடு உனக்கு நேர்ந்த 
காதல் எப்படி ?


அவன் : ஆசீர்வதிக்கப்பட்ட 
மழை நாளில் - கூட்டமில்லாத 
பேருந்தின் ஜன்னல் வழி 
ஈரமாய் வந்து  உரசும்
மெல்லிய தூறலில் 
மொத்தமாய் லயித்து 
கிடைக்கையில்....
செவிப்பறையில் - வெறுமனே 
பட்டு தெறிக்காமல் 
இரகசியமாய் - உயிருக்குள் 
இறங்கி - தேங்கி கிடந்த 
பரவசம் அள்ளி வெளியில் 
எறிந்து விட்டு
அமர்ந்து கொள்ளும்,
ஓட்டுநர் தட்டிவிட்ட 
எதிர்பாராத இளையராஜாவின் 
பாடலாய் ---
உன்மீதான காதல் !
என்றோ "நான்"  
அசந்து இருக்கையில் 
நுழைந்து கொண்டது !

அவள் : போடா ! ஒண்ணுமே 
புரியல !


















அவன் : சரி ! உன்னை எப்படி 
என் காதல் சாய்த்தது ?

அவள் : உன்னோட talent,
நல்லா படிக்கிற, அப்பறம் 
Drawing, இன்னும் நிறைய !

அவன் : ஓகோ !
ஒருவேளை - நீ
வரிசை கட்டி அடுக்கிய 
யாவும் ஒன்று விடாமல் 
ஓடிவிட்டால் ...

அவள் : ஊம் .. ம் ... 
அப்பவும் பிடிக்கும் ! 
ஹேய் ! Now I got your point !
நானும் களவு போன வீடுதான் 
கள்வனாய் நீ - என்றோ 
நான் நிம்மதியாய் 
உறங்கி கிடந்த வேளையில் 
இரகசியமாய் என் மனதை 
கொள்ளை அடித்த பிறகு ..!
ஹே.. எனக்கும் கவிதை 
வருதே ..!

பிரேம் சத்யா : போதும் பா !
இடத்த காலி பண்ணுங்க !
இந்த பதிவை முடிக்கணும் !


Sunday, April 17, 2011

தூரிகை சொல்ல மறந்த சிறுகதைகள் 1




சீப்பிற்கு 
பல் வலியாம்
உன் நீண்ட 
கூந்தலில் 
பயணித்ததில் ..!

உன் முகம் காட்டும் 
போதெல்லாம் 
பரவசப் பட்டு 
ஒளி கொள்ளும் 
கண்ணாடியை விட
நீ முகம் பார்த்து
என்ன மகிழ்ச்சி 
அடைந்து விடபோகிறாய் !

அறையெங்கும் 
வெளிச்சம் !
எனக்கோ ஒரு 
மயக்கம்  !
அந்த மரகத  
வெளிச்சம் 
ஜன்னலின் வழி 
கசிகிறதா ? இல்லை 
மஞ்சள் பூசி கொண்ட
நிலவு உன் முகத்தில் 
இருந்து வீசுகிறதா?

பட்டு பூச்சிகளை
இம்சித்து நெய்த 
புடவைகளை 
மடித்து வைத்து விட்டு 
வெடித்த பருத்தி 
இலவம் கொண்டு 
நெய்த புடவை உடுத்தி 
நிற்கிறாய் !
எளிமை , அஹிம்சை 
என்றெல்லாம்
சொல்வார்களே 
இது தானோ அது !

உன் அழகில்
கொஞ்சத்தை - கழுவி 
எடுத்து கொண்ட
குவளை நீரும் 
ஒற்றி எடுத்து கொண்ட
துண்டும் எனக்குள் 
பொறாமை தீ மூட்டி 
இளிகின்றன !

ஓவிய குறிப்பு : இது ரவி வர்மாவின் ஓவியம்.
பின் புலம் : மதராச பட்டினதிற்கு முதல் முறையாக
பட்டாம் பூச்சிகளை கட்டிக்கொண்டு , இளங்கலை
கல்லூரியின் ஒரு விடுமுறையில் சென்று இருந்தேன்.
சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் விற்பனைக்கு
இருந்த ரவி வர்மாவின் மனம் கவர்ந்த சில ஓவியங்கள்
பதிக்க பட்ட வாழ்த்து அட்டைகளை வாங்கி கொண்டேன்.
அதி வீர ராம பட்டினத்து கல்லூரி காலங்களில் 
காட்சிகளையும், உணர்சிகளையும் உருட்டி திரட்டி 
நான் எதை கிறுக்கினாலும் , தேடி வந்து பாராட்டும்
மாண்புடை தமிழ் பேராசிரியர்கள் எனக்கு 
அருளப்பட்ட வரம். அப்படிபட்ட தூண்டுதலில் 
அர்வ கோளாறுகளுடன் கிறுக்கியவைகளில்
இதுவும் ஒன்று. ஒவ்வொரு ஓவியத்திற்கு பின்புறமும் 
ஓவியம் தொடர்புடைய கவிதைகளை எழுதி கொள்வேன்.
இணையத்தில் மங்கலான படம் தான் கிடைத்தது. 

Tuesday, April 5, 2011

அவனும் அவளும்














அவள்  : தினமும் Meditation பண்ணு 
                  மனசு Relaxa இருக்கும்.
                 Magazine la ஒரு Article la  படிச்சேன். 

அவன் : கண்கள் மூடி - புருவ 
                மத்தியில் - நெற்றி 
                பொட்டில் கவனம் 
                குவித்து தியானித்து 
                நேரத்தை வீணாக்க 
                வேண்டுமா ?
                எப்படியும் கண்களை 
                மூடினால் நீதான் 
                வரப்போகிறாய் !
                பேசாமல் எதிரில் 
                வந்து உட்கார்ந்து கொள் !
                உன் நெற்றி பொட்டில் 
                கவனம் குவித்து 
                கண்களை திறந்து கொண்டே 
                எவ்வளவு நேரம்
                செய்கிறேன் பார் தியானம் !

Monday, April 4, 2011

எழுதப்படாத பதிவுகள்




இது என்னோடு நெருக்கமாக 
வாழ்ந்த ஒரு முட்டாளின் கதை.
எழுத நினைத்து தினமும் அவன் 
தன் டைரியை திறப்பதும் - வெற்று 
ஏடுகளை புரட்டுவதுமாய் இருந்தான்.
அவன் உள்ளத்தில் ஏதோ உணர்ச்சி 
பொங்கி கொண்டிருப்பதை 
விழிகளும் - புன்னகை இறந்து போன
முகமும் சொல்லி கொண்டிருந்தன.
பயமும் , கோழைத்தனமும் 
எப்போதும் அவனோடு இருந்து 
கொண்டே இருக்கும். நெருக்கமான 
தோழன் என்னிடத்தில் கூட 
பிரச்சினைகளை சொல்ல தயங்குவான். 
முன்னறிவிப்பு ஏதும் இல்லமால் 
திடீரென போய் விட்டான் 
பரலோகத்திற்கு ..................................
அவன் இறந்து போன கலக்கத்தோடு 
திறந்து கிடந்த டைரியை எடுத்து 
வாசிக்க தொடங்கினேன். முதலில் ஒன்றுமே 
புரியவில்லை. யார்யாரையோ  தாக்கி
எழுதியது போல் இருந்தது.யார் தன்னை, 
தன் உணர்சிகளை ,அழகாய் கட்டி வைத்திருந்த
கூட்டை கலைத்தார்களோ - அவர்களை 
பார்த்து கேள்விகள் கேட்பது போலவும் 
இருந்தது. அதன் உயிர் சிதையாமல் எழுத 
முயற்சிக்கிறேன் என் வழியில் ! 

"எனை நிர்வாண படுத்தி முச்சந்தியில் 
நிறுத்தாத குறையாக - என் ஒட்டு 
மொத்தங்களையும் ஏன் உருவிவிட 
துடிக்கிறீர்கள் - நன்றியை காட்ட 
தெரியாமல்தான் உங்கள் இம்சைகளை
பொறுத்து இருந்தேனா ? - சலசலப்பும் 
சத்தங்களும் கொண்டு 
வேண்டும் இடமெல்லாம் ஓடி அந்த
மகா சமுத்திரம் போய் கலக்கும் 
பேராறு போல வாழ்ந்து கொண்டு - ஒரு 
சிறு பள்ளத்தில் தேங்கி கிடக்கும் நீரென 
அமைத்த என் வாழ்வதனை - பாறை வைத்து
மூடி விட நினைபதேனோ ? - இந்த 
பிச்சைகாரனின் நிம்மதி, ஆனந்தம்  கண்டு 
பொறாமை தீ வளர்த்து - அசந்து போன 
சமயம் கண்டு கொளுத்தி விட்டீர்களே
மாண்புமிகு அரண்மனைவாசிகளே நியாமா?
காலத்தின் துணை கொண்டு 
எல்லாவற்றிலும் இருந்து என்னால்
மீண்டு விட முடியும் - ஏன் உங்கள் 
அரண்மனையை விட இருமடங்கு 
உயரமாய் என்னாலும் மாளிகை 
எழுப்ப முடியும் - இருந்தும்  என் 
தன் மானத்தை துண்டு துண்டாய்
நீங்கள் கூறு போட கண்டும் 
தடுக்க முடியாதவனாய் கை கட்டி 
நின்று விட்டேனே - அப்படி என்ன கிடைத்துவிட 
போகிறது இந்த அற்ப உயிரை சுமந்து இனி.
நான் மகான் அல்ல உங்களை மன்னிப்பதற்கு.
கொடியவனும் அல்ல - என் கோபத்திற்கு 
உங்ககளை இரையாக்குவதற்கு.
மரணிக்கும் முன் என்
கடைசி வேண்டுகோள் :
என் மரணம் பற்றியாவது அவதூறு 
பேசாதீர்கள். என் இனிய இந்த புனித 
மரணத்தில் கலங்கம் பூசாதீர்கள்.
கண்ணீர் வடிக்க வேண்டாம். இந்த 
மரணத்தை சுற்றி கதை வடிக்காமல் இருங்கள்.
வழக்கமாக நீ எல்லோரையும்
தேடி வருவாய் இறுதியில் 
இதோ பார் நானே உன்னை 
தேடி வருகிறேன் பாதியில்.
மரணமே உன் பாதங்களை காட்டு
முத்தம் இட வேண்டும். "

கடைசி பக்கத்தில் இப்படி - சிதறி கிடந்தது  
அவன் உயிர் - காய்ந்து  கிடந்தது 
எழுதுகோல் மையும் , அவன் உணர்சிகளும் !


இறுக்கத்தோடு முதல் பக்கம் புரட்டி படிக்க
தொடங்கினேன் , கனத்து கிடந்து கடைசியாய் 
இறக்கி வைத்த அவன் சுமைகளை.

அவன் உணர்சிகள் இதோ :

"நான் அறிவு மயங்கி 
கிடந்ததாய் - நீங்கள் 
இப்போது குறிக்கும் 
என் கடந்த காலத்தின் 
சில இடைவெளிகளில் 
அப்போது மும்முரமாய் 
தங்கள் வேலைகளில்
மூழ்கி கிடந்தீர்கள் ! 

பின்னாளில் - என்
பழங்கதை கேள்விப்பட்டு 
அக்கறை கூரைக்கு 
அடியில் அமர்ந்து 
கூடி கூடி கதைத்தீர்கள் !
அதற்குள் சில 
நட்சந்திரங்களின் 
தூரம் அளந்து - பாதை 
அமைத்து கொண்டிருந்தேன் !

காதுகள் திறந்து இருப்பதாய்
நம்ப வைத்து விட்டு - எனை 
ஏதேதோ பேச விட்டு வேடிக்கை 
பார்த்தீர்கள் - உங்கள் சந்தோசம் 
முக்கியம் அல்லவா !
பேசினேன் நீங்கள் 
எதிர்பார்த்ததெல்லாம் !

என் நாக்கு சொல்ல நேர்ந்த 
சில அவசியமான பொய்களை
காரணம் காட்டி - என் இதயம் 
கொண்ட உண்மையான 
உறவினை சந்தேகித்தீர்கள் !
என் இதயம் நோகாமல் 
இருக்க - உண்மையை மறைத்து 
தாங்கள் கூறிய எத்தனையோ 
தற்காலிக பொய்கள் - என் 
நினைவில் இருப்பதை கொள்க !

அடுத்து என்ன நடக்கும் என 
விளங்காத மர்மங்கள் நிறைந்த 
பாதைகளில் - நீண்ட நாள் 
வாழ்ந்தவன் ! - சக வயது 
சகாக்கள் அனுபவிக்கும்
எத்தனையோ வசதிகளை 
என் வசதி அறிந்து துறந்தவன் !
தூக்கங்களை ஏக்கங்களுக்கு 
இரை போட்டு விட்டு 
என் வீட்டு கூரை கிழிசல் வழி 
வெண்ணிலா ரசித்தவன் !
அன்னையின் முந்தானைக்குள் 
அரை நாளும் , தகப்பனின் 
பாதுகாப்பில் அரை நாளும்
கழிக்கும் நீங்கள் - வந்து விட்டீர் 
வரிந்து கட்டி கொண்டு - எனை  
வசை பாடுதற்கு ..!

எலும்புகளோடு 
பிறந்திருந்தும் 
புழுவாக எனை
நெளிய வைத்தீர்கள் !

(தணிக்கை செய்ய படவேண்டிய 
 சில வரிகள் இங்கு இருந்தன 
கத்தரித்து விட்டேன் ...)

எரிச்சலும் துண்டம் 
துண்டமாய் கூறு போடும் 
கோபம் பூசி மழுப்பப்  பட்ட 
பார்வைகளும் - என் மீதான 
சந்தேகமில்லாத 
அவநம்பிக்கைகளும் - எனை 
ஒவ்வொரு நொடியும் 
ஒரு கோடி  முறை 
மரணிக்க செய்தன !

தகுதி உள்ளவை தப்பி பிழைக்கும் 
பிழைப்பேனா? மாட்டேனா ?
எனக்காக காலம் மறைத்து 
கொண்ட அழகான மர்மம் அது !
அந்த மர்மத்தை திறந்து 
பார்க்க சொல்லி எனை 
அவசர படுத்தாதீர்கள் ! 
என்ன செய்ய - தங்களுக்கு 
பெரு மூளை கொடுத்தவன் 
எனக்கு சிறு மூளை 
கொடுத்து விட்டான் !

நீங்கள் வைத்து விளையாடிய 
என் வாழ்வை - தட்டி பறித்து 
கிடைத்த சிறு புத்தி கொண்டு 
பொறுப்புகள் உணர்ந்து 
நாட்கள் நகர்த்தும் 
இந்நாளில் கூட
...............
ஆறிப் போன விசயங்களை 
அடுப்பில் ஏற்றி - அதில் 
கடுப்பு எண்ணெய் ஊற்றி 
தாளிப்பதாய் 
புகை வந்து என்னிடம் 
கதை படித்தது ! 

உங்ககளை போல் எத்தனை பேர் 
எங்களை போன்றோரை உருவாக்கி 
கொண்டு இருக்கின்றீர் - போராடி 
நாங்கள் ஜெயிக்கும் வரை 
பொறுக்க மாட்டீர். தினம் தேடி வந்து 
தருவீர் பெரும் இடைஞ்சல்.
திமிரான உங்கள் புத்திக்கு என் 
வருடல் உதவாது. உடம்பில் எங்கேனும்  
இதயம் துடித்து கொண்டிருந்தால்
நிச்சயம் பாடம் புகட்டும் - நான் எடுக்க போகும்
இந்த முடிவு ..........................."

என்று கடைசிக்கு முன் பக்கம் வரை
எழுதி இருந்தான்.இதைதான் இத்தனை நாள்
எழுத நினைத்து நினைத்து 
எழுதாமலே இருந்திருக்கின்றான் அவன்.

ஒன்று மட்டும் புரிந்தது, சிலருக்கு சாதாரண 
விசயம் கூட மனதை இந்த அளவு பாதிக்கும் என்பது.
யார் வம்பு தும்புக்கும் போகாமல் தானுண்டு 
தன் வேலை உண்டு இருந்தவன் திடீரென இப்படி 
அவசர பட்டு போய் விட்டான். 
மிகுந்த அதிர்ச்சி என்றாலும்
ஒரு சின்ன பொறியையும்
எனக்குள் பற்ற வைத்திருக்கிறது!

இல்லாத புகழ்ச்சி வேண்டாம் !
இருக்கின்ற இகழ்ச்சி வேண்டாம் !
குழந்தைக்கு நடை பழக்கும்
அன்னை போல் உள்ளம் கொண்டு 
அவர்களை அவர்களாக
வாழ விடுவோம் !
தடுமாறும் போது
ஓடி போய் தோள் கொடுப்போம் !
எங்கு சுற்றினாலும் எவ்வளவு 
செல்வம் திரட்டினும் இறுதியில் 
எல்லோருக்கும் மரணம்
முடித்து வைக்கும்  வாழ்விது !
மனிதர்கள் - அதிலும் அன்பான 
தோழர்கள், உறவுகள் இவர்களை விட 
பெருஞ்செல்வம் இல்லவே இல்லை!
நம்பி கை கொடுப்போம் !
நம்பிக்கை கொடுப்போம் !