Tuesday, November 15, 2011

எங்கே போனாய் ?

     - என்னுள் மரணிக்கும் கவிதைகள் !!!



எங்கே போனாய் ?
நீயும் நானும்
கல்லூரி காலங்களில்
கைகளை குலுக்கிக்
கொண்டோம் !

முதலாண்டு மாணவர்கள்
எல்லோரும் - உங்களில்
ஒருவரை இழுத்து
வந்து தமிழ் ஆசிரியரிடம்
கொடுத்தே ஆக வேண்டும்
அதிரை கல்லூரியின்
வழக்கம் அது !

உன்னை விட்டு
தப்பிவிடத்தான்
பார்த்தேன் - ஆசானின்
மீசை கொஞ்சம் கோபமாக
முறுங்க - என் கைக்குள்
அகப்பட்டாய் நீயும் !

அந்தோ பரிதாபம் - உன்னை
வீட்டிலே விட்டுவிட்டு
வந்து தொலைத்தேன் !
தொலைந்தேன் என
நொந்து நான் புலம்புகையில்
காடு மேடுகளின்
குறுக்கில் பாய்ந்து
கந்தலாய் வந்து நின்றாய் !
ஆசானின் பைக்குள்
எனக்காக சரணடைந்தாய் !

மொத்த கல்லூரி மாணவர்கள்
பிடித்து வந்த அத்தனை
பேருக்கும் ஒரே பெயர்தான் !
உண்மையில் ஆசான்
சொன்னதும் ஒரே பெயர்தான் !
அன்றுதான் தெரிந்தது
ஒரே பெயரில் இத்தனை பேர்
இருப்பதும் !

திடீரென ஒருநாள்
தமிழ் ஆசான்களின்
பாராட்டு மழை
வகுப்புக்குள் வந்தே
என் தலைக்கு மேல்
கொட்டியது :
"நீ இழுத்து வந்தவன்
பெயருக்கு பொருத்தமாய்
இன்னும் பிற லட்சணங்களோடு
முதலாவதாய் தேறிவிட்டான்"

ஏனோதானோ என்று
இழுத்துவந்த உன்னுள்
ஏகபோகமாய் இருப்பதை
நானறிந்தேன் - உன்
வலிமையையும் சக்தியும்
தானறிந்தேன் - உயிர்
தோழன் ஆனாய் !
போதாக்குறைக்கு என்
காதல் தீயில் நீ
ஆத்ம வேள்வி நடத்திக்
கொண்டாய் !

நீ அழைக்கும் போதெல்லாம்
நான் உடனே தயாராக வேண்டும்
போட்டது போட்டபடி !
நான் அழைத்தால் மட்டும்
உன் விருப்பம் - வந்தால்
வருவாய் !

வறுமையை , நோயை
காணும்போது கண்களின்
சிவப்பாய் கொப்பளிப்பாய் !
அழகில் நான் மயங்கும் போது
காதுகளில் வந்து கிசு கிசுப்பாய் !
அடுத்தநாள் தேர்வுக்கு
படிக்கும் நேரம் ஜன்னலை வந்து
தட்டுவாய் ! - தேர்வின் போது கூட
அறையின் வாசலை இங்கும்
அங்கும் கடந்து போவாய் !
என் ஒவ்வொரு உணர்ச்சிக்கும்
ஏதோவொரு பெயரில்
உன்னை உருமாற்றிக் கொள்வாய் !

பிழைபென்னும் பாதையில்
பயணிக்க நான் தொடங்கியதும்
எப்போதாவது உனக்காக
கதவுகளை திறப்பேன் !
பிற்பாடு நீ கதவை இடிக்கும்
சத்தத்தை கூட
கேட்டுக் கொள்வதில்லை !
நீயோ விடாமல் என்னோடு இருக்கவே
ஆயிரம் முயற்சிகள் எடுத்தாய் !

மழையின் சாரலில்
தொங்கிக் கொண்டு வந்தாய்
குடையை விரித்துக் கொண்டேன் !
காலையிலும் மாலையிலும்
சூரியனின் மேற்புறத்தில்
நடனமாடி பார்த்தாய் !
நானோ காலையில் மேற்கிலும்
மாலையில் கிழக்கிலும்
அமர்பவனாய் ஆகிப் போனேன் !
உப்பிக் கரையும் நிலவில்
குட்டிகரணம் போட்டாய் !
நானோ அமாவாசைகளில்
இரவை அண்ணார்ந்து பார்பவனாய் !
என் மீது மோதும் தென்றலின்
கை பிடித்து வந்து
முத்தமிட்டு போனாய் !
எறும்புக் கடியோ என்று
கன்னத்தை தடவிக் கொண்டேன் !

மெல்ல திறந்திருந்த
ஜன்னலை இன்று நான்
படார் என சாத்தும் நேரம்
பாவி நீ இடுக்கின் வழி
நுழைந்து கொண்டுருப்பதை
அறியாமல் போனேனே !
நீண்ட நாளாய் மறந்துபோன உன்னை
என் மனச் சட்டையில்
தெறித்த உன் இரத்தம்தான்
நினைவூட்ட வேண்டுமா?

இதோ பார் உனக்காக
நான் மீண்டும்
இதயம் திறக்கிறேன் !
எழுதுகோல் எடுக்கிறேன் !
உன் ஆவியை நீயும்
மீண்டும் புகுத்திக் கொள் !

உன் முதல் பெயர்
இன்னும் என் நினைவில்
இருக்கிறது :
"காலனுக்கு கண்ணில்லை"

சந்தித்த திங்கள் :
"குடந்தையில் குழந்தைகளை
கருக்கிப் போட்ட கருப்பு
மாதம்" [ஜூலை 2004]

நீயாக வருகிறாய்
உன்னை நான் வெறுமனே
எழுதிப் படிக்கிறேன் !
உன்னை சிறந்த கவிதை
என்றால் பெருமைதான் !
கூடுதலாய் என்னை கவிஞன் என்றால்
எனக்கே சற்று நகைப்புத்தான் !

                              - நன்றிகளுடன்
                                பெரமு