Monday, July 25, 2011

பனங்காடு சிரமேல்குடி ஆனது யாராலே?

    - முதல் நிலை தேடல் ...


ஐந்து ஆண்டுகளுக்கு முன் நான் தீட்டிய பென்சில் ஓவியம் 
பிசாசா மென்பொருள் மூலம் அடிப்படை டச் அப் செய்துள்ளேன் 

எங்க ஊருக்கு எப்படி சிரமேல்குடி என்று பெயர் வந்தது என்று ஒரு கேள்வி எழுந்தது என்னுள். மறவக்காடு, காரப்பன்காடு, கோவில்காடு, இளங்காடு என்ற ஊர்கள் சூழ பனங்காடு என்ற பெயரோடு விளங்கிவந்த என்னூர் எப்போது சிரமேல்குடி ஆனது. பெருந்தலைவர் காமராஜர் எங்க ஊருக்கு பள்ளிக் கூடம் கட்டித் தருவதற்கு முன்னால் அந்த இடம் ஒரே பனை மரக் காடாகத் தான் இருந்தது என்று என் பள்ளி ஆசிரியை கூறியதாய் கூட ஞாபகம்.

சிரமேல்குடியை இன்னும் எளிமையான தமிழில் 'தலை+மேல்+குடி' என்று சொல்லலாம். யார் தலை மேலே ?

ஊரிலே இப்படி ஒரு நம்பிக்கை உண்டு, ஊர் பெரியவர்கள் சொல்லி கேள்விப் பட்டது. எந்த ஊருக்குள் வெள்ளம் புகுந்தாலும் , நம்ம ஊருக்குள்ள ஒரு சொட்டு தண்ணி வராது. வடக்கே திருவாசல் குளத்தில் காவல் இருக்கும் பிடாரி அம்மன் கோவிலைத் தாண்டி , கிழக்கே வயல் வெளி பகுதியான கோட்டகம் எல்லை சாமி கோவிலைத் தாண்டி இதுவரையில் வெள்ளம் வந்ததும் இல்லை. சேதம் விளைவிக்கும் காவிரியின் கிளை ஆறு பாமினி ஊருக்கு கிழக்கே ஓடுகிறது. பெரும் வெள்ளங்களில் விளை நிலங்கள் சேதமாகும் ஆனால் ஊருக்குள் வெள்ளம் வராது. மாறாக அதன் கிழக்குக் கரை கிராமங்கள் தண்ணீரில் தத்தளிக்கும்.

எங்க ஊர் முழுக வேண்டும் என்றால் , திருவுசாத்தானம் எனும் பழம்பெருமை மிக்க கோவிலூர் மந்திரபுரீஸ்வரர் கோவிலின் கோபுரம் முழுக வேண்டும் என்பார்கள். எங்க ஊரிலிருந்து பாமினி ஆற்றை கடந்தால் ஆறு கிலோ மீட்டர் தூரம்தான் அந்த கோவில்.

ஆக இந்த சிரமேல்குடி அவ்வளவு பெரிய மேட்டு நிலம். நாங்கள் அந்த சிவனின் தலைக்கு மேல் உயரமான இடத்தில் குடி இருக்கிறோம். அதனால் இந்த பெயர் பொருத்தமாகத் தெரிகிறது. மேலும் அந்த காலத்தில் ஊர்களின் பெயர்கள் கோவில்களையும் , புராணங்களையும் , வாழ்ந்த நல்ல மனிதர்களையும் சார்ந்தே இருந்து இருக்கிறது. அந்த கோவிலூர் கோவிலுக்கு பதிகம் பாடியவர்
திருஞானசம்பந்தர்

நீருடைத் துயின்றவன் தம்பிநீள் சாம்புவான் 
போருடைச் சுக்கிரீவன் அநுமன் தொழக்
காருடை நஞ்சுண்டு காத்தருள் செய்தவெம்
சீருடைச் சேடர்வாழ் திருவுசாத் தானமே

சீதையை மீட்க பாலம் கட்டுவதற்கு ராமன் (நீருடைத் துயின்றவன்), இலக்குவன்(தம்பி) , சாம்புவான்,சுக்ரீவன், அனுமன் ஆகியோர் தேடி வந்து தொழுது மந்திர ஆலோசனை பெற்ற கோவில் இது.

இந்த சாம்புவான் தான் இன்று நாம் வழக்கமாக சில பெரிய மனிதர்களை பார்த்து சொல்வோமே , அவர் பெரிய ஜாம்பவான் என்று,அந்த அடைமொழிக்கு சொந்தக்காரர்.

அந்த கோவிலூருக்கு மிக அருகில் ஜாம்பவான் ஓடை என்ற ஊர் கூட இருக்கிறது !

அடுத்தமுறை ஊருக்கு போகும் போது என் ஊருக்கான என் கணிப்பு சரியா என்று தேட வேண்டும். எங்க ஊரு அய்யனார் அந்த மந்திரபுரீஸ்வரரை விட உயரமான இடத்தில் இருக்கிறார் போல.

பாமர மக்களின் சாமி உயரமான இடத்தில் இருப்பது மிகப் பெரிய கௌரவம்தான்.

                                                                      சிவன் தலைக்கு மேல் வசிக்கும்,
                                                                      பெரமநாதன். 

No comments: