Wednesday, July 27, 2011

திடீர் மொழி



தேங்கி கிடக்கும் மழைநீரை
அள்ளி அடித்துப் போகும்
காரைப் போல - சந்தோசத்தை
அள்ளி அடித்துப் போனது
தாயின் கையை பிடித்து
நடந்து வந்த ஒரு குழந்தை !

ஈரம் குத்தி உடைந்த
நீர் பலூனாய் - என்
மண்டையின் உச்சியில்
ஆனந்த நீர் வீழ்ச்சி !

கடந்து வந்து - கால்கள்
நாலு எட்டு வைத்திருக்கும்
முன்னே பார்த்து
கொண்டிருந்த விழிகள்
மெல்ல திருப்பியது
முகத்தை - கூவிக்
கூப்பிட்டது போல் 
கச்சிதமாய் அந்த 
குழந்தையும்  திரும்பி
பூத்தது புன்னகையை !

வழிப்போக்கில் - இதுபோல்
சப்தம் இல்லாமல்
நொடிகளில் கற்றுக் கொள்ளும்
மொழியும்தான் யாதோ ?
அதனுள்ளே
பட்டனை தட்டியது போல்
சட்டென திரும்ப வைக்கும்
மந்திரத்தை திணித்ததும் யாரோ ?

காதுக்குள் நுழையும்
ஒலி அலைகளா ?
கண்ணில் தெறிக்கும்
ஒளி அலைகளா ?
எதில் ஏறி வந்து
பேசுகின்றது
எப்போதாவது வாய்க்கும்
இந்த அதிசய மொழி  !

No comments: