Tuesday, May 29, 2012

Vapor Sari - நீராவி சீலை



படங்கள்: அத்தான் திரு.வெங்கட்ராமன்

பரம்பிக்குளம் வனவிலங்கு சரணாலயத்தில் என் அத்தான் எடுத்த அழகான புகைப்படங்கள். பட்டென இதயம் திறந்து கொண்டது . பனி மூட்டம் என்றால் எனக்கு மிகப் பிடிக்கும்.

அதிகாலையின் இதத்தில்
மெல்ல நடக்கும் காற்றில்
பறந்து மெல்ல உலர்கிறது
நீராவிச் சீலை ..!

இந்த பனியின்
வலைக்குள்
சிக்கிக் கொண்ட
உடல் சிலிர்க்கும் !
புல்வெளி வியர்க்கும் !

காற்று ஏவி விடும்
நீர் ஊசிகள்
மார்பைத் துளைத்து
முதுகில் வெளியேறும்
தடயமே இல்லாமல் !

தேய்ந்து போன ஒற்றையடி
பாதையில் நகர நகர - பனியால்
வெள்ளையடிக்கப்பட்ட
'*வெளி'ச்சுவரில் வரையப்படும்
காட்சிகளை இயற்கை
மாற்றிக் கொண்டே இருக்கும் !


{*வெளி - காற்று வெளி}

மனதின் இரைச்சல் அடங்கி
சருகுகளின் சலசலப்பு
காதைக் கிழிக்கும் !

பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த
உயிர்களின் வாடை
ஒன்று திரண்டு வந்து
மூக்கை உரசிக்
கொண்டே இருக்கும் !

செவிகளுக்கு
விளங்காத ஒலி ஒன்று
மரங்களின் உச்சியில்
இருந்து அருவிபோல்
னதுக்குள் இறங்கும் !

காட்சிகளை கண்கள்
தன் கண்களில்
அள்ளி அள்ளி எடுத்து
ஒற்றிக் கொள்ளும் !

ஞானத் துளிகள்
நாக்கின் நுனியில்
விழுந்ததும் கால்கள்
காணாமல் போகும்
எங்கிருந்தோ வந்த
சிறகுகள் உடலை மேலே
இழுத்துக் கொண்டு பறக்கும் !


உடலுக்கு உள்ளும்
வெளியுமாய்
உயிர் ஊசலாடும் !

இப்படி அரை
நிமிடங்களுக்குள்
ஆயிரம் யுகங்கள்
நீளும் கொடுப்பினையை
தட்டிக் கெடுக்கும்
உடன் வந்த தோழர்களின்
அழைப்பு :"அடேய் நில்லுடா "

இயற்கை உசுப்பிவிட்ட
அந்த பரவசம் - அரட்டைகளின்
இடையிலும் ரகசியமாய்
கசியும் மந்திரப் புன்னகையாய்
கவனிப்பார் யாருமற்று !

                             - பெரமு, சிரவை

2 comments:

வெங்கட்ராமன் said...

விடிவதற்கு முன் தயாராகி
கொஞ்சம் கொஞ்சமாய்
இருளும் பனியும் விலகும் தருனம்
மிகவும் இனிமையானது

அதை உன் கவிதை அப்படியே பிரதிபலிக்கிறது

வெங்கட்ராமன் said...

விடிவதற்கு முன் தயாராகி
கொஞ்சம் கொஞ்சமாய்
இருளும் பனியும் விலகும் தருனம்
மிகவும் இனிமையானது

அதை உன் கவிதை அப்படியே பிரதிபலிக்கிறது