Thursday, April 28, 2011

எண்ணும் எழுத்தும் - கணக்கதிகாரம்

 
(பதிவிறக்கம் செய்ய படத்தை சொடுக்கவும்)


ஓன்று :முப்பத்திரண்டு முழ
பனைமரத்தில் - ஒரு
சாண் ஏறி - நாலு
விரல் சறுக்கி தினம்
விளையாடும் ஓணான்
எந்தநாள் தொடும் உச்சி ?

இரண்டு :இரண்டில் ஒரு
பங்கெடுத்தால்
அரை என்பீர் !
நாலில் ஒரு
பங்கெடுத்தால்
கால் என்பீர் !
முந்நூற்று இருபதில் ஒரு
பங்கெடுக்கும் பின்னதை
என்னவென்று சொல்வீர் ?

மூன்று :அறுத்தெடுக்காமல்
உள்ளிருக்கும்
பலாவின் சுளைகள்
எத்தனை என்று
சொல்வீரோ ?

(சந்தேகம் வேண்டாம் !
நிதானத்தோடுதான்
இருக்கிறேன் !
சோம பானம் - சுறா
பானங்களின்
தேவை எனக்கில்லை
தமிழ் போதை
என் சிந்தையில்
இருக்கும் வரை !
விடைகள் பதிவின்
இறுதியில் ..!)

என்ன "எழுதுவது" என்று
"எண்ணி" கொண்டிருந்தேன் !
தமிழ் என்பது
நெஞ்சம் ! உயிர் !
அன்பு ! இயல்பு !
கணிதம் என்பது
சிந்தை ! உடல் !
புத்தி ! பிழைப்பு !
இயைந்து இவ்விரு
முரண்பாடுகளும்
இயங்குமாயின் - அதன்
பொருள் வாழ்வு !
உடல் இருக்க உயிர்
போயினும் - உயிர்
இருக்க உடல் போயினும்
மரணம் வீழ்த்தும்
வாழ்வதனை !

நிற்க !

பலருக்கு கணக்கு என்றால்
சூத்திரங்கள் ! குறியீடுகள் !
சமன்பாடுகள் ! அளவீடுகள் !
தொல்லை கொடுத்து
மூளையின் - மூலை
முடுக்குகள் எல்லாம்
துருவி எடுக்கும்
சுண்டெலி !

நம் சமூகம் கடைபிடித்த
கணக்கியல் மிக இயல்பானது !
வாழ்வோடு மிக நெருக்கமானது !
அதை தாண்டி சென்றதில்லை !
வாழ்வை விட்டு தூரம் போகிற
எதையும் நாம் தொட்டது இல்லை !
உயர் தமிழால் அருளப்பட்ட
நம் முன்னோர்கள் - நன்றி
மிகுதியோ இல்லை
இனம் புரியாத அன்பு மிகுதியோ
கற்பனை வளம் முழுவதையும்
தமிழுக்கும் கலைகளுக்கும்
அர்ப்பணித்தார்கள் !


வாழ்வியல் கணக்கியல் என்றாலும்
அதையும் செந்தமிழ் பாட்டின் வழி
பாடித்திரிந்த கொறுக்கையூர் 
காரி நாயனாரின் திறத்தை
என்னவென்று சொல்வது மக்களே !
*****************************************************************
அவரது கணக்கதிகாரத்தில் இருந்து
சில பாடல்கள் :
******************************************************************

முப்பத் திரண்டு முழமுளமுட் பனையைத்
தப்பாமலோந்தி தவழ்ந்தேறிச் - செப்பமுடன்
சாணேறிநாலு விரற்கிழியு மென்பரே 
நாணாதொரு நாணகர்ந்து
பனையதனை இரட்டித்துப் பன்னிரண்டால் மாறி 
இருநாலுகீந்து கொள் ( விடை ஒன்று )

ஒரு முழம் = இரண்டு சாண்
ஒரு சாண் = 12 விரற்கடைகள்

32 X 2 = 64; 64 X 12 = 768 ; 768/8 = 96 நாட்கள்

*****************************************************
முந்திரி அரைக்காணி முன்னிரண்டு பின்னிரண்டாய்
வந்ததோர் காணிநான் மாவாக்கி ஒன்றொரு
நாலாக்கிக் காலாக்கி நன்னுதலாய் காலதனை
நாலாக்கி ஒன்றாக நாட்டு (விடை இரண்டு )

முந்திரி = 1 / 320
அரைக்காணி = 2*(1/320) = 1/160
காணி = 2*(1/160) = 1/80
மா = 4* (1/80) = 1/20
கால் = 5*(1/20) = 1/4
ஒன்று = 4*(1/4) = 1
***********************************************************************
பலவின் சுளையறிய வேண்டிதிரேலாங்கு
சிறுமுள்ளுக்காம்பருக்கெண்ணி - யறுகாக
ஆறிற்பெருக்கியே யைந்தினுகீந்திடவே 
வேறென்ன வேண்டாஞ்ச்சுளை (விடை மூன்று)

பலாவின் காம்பை சுற்றி 50 முட்கள்
இருப்பதாக கொள்க.

50 X 6 = 300 ; 300 / 5 = 60 சுளைகள்
************************************************************
இவண்,
பெரமு 

1 comment:

வெங்கட்ராமன் said...

தமிழ் என்பது
நெஞ்சம் ! உயிர் !
அன்பு ! இயல்பு !
கணிதம் என்பது
சிந்தை ! உடல் !
புத்தி ! பிழைப்பு !
இயைந்து இவ்விரு
முரண்பாடுகளும்
இயங்குமாயின் - அதன்
பொருள் வாழ்வு !

Nice