Tuesday, May 3, 2011

அவனும் அவளும் 3



அவள் : நீ ஏன் இப்படி 
எழுதுகிறாய் ? நிறைய 
விசயங்கள் எல்லோருக்கும் 
பலநேரத்தில் 
புரிவதே இல்லை !
எளிமையாக புரிகிற 
வார்த்தைகளில் 
எழுதலாமே !

அவன்: நீ அழகாய் மடித்து
அடுக்கி நிரப்பிய - துணிமணி
பெட்டிக்குள் - உன் விரலுக்கு
அழகு சேர்த்த மோதிரம்
ஒன்று நழுவி விழுந்துவிட்டால்
என்ன செய்வாயோ
அதைத்தான் 
செய்கிறேன் நானும் !


யோசிக்க கூட மாட்டாய்
துணிகளை களைத்து
எறிந்துவிட்டு - மோதிரத்தை
மீட்டு எடுப்பாய் !


நானும் மந்திர பொழுதுகளில்
தவறி விழுந்த விட்ட "என்னை"
தேடி எடுக்கப்போய் - களைத்து
போட்டவைகள் தான் என்
எழுத்துக்களும் !


பொறுமை கொஞ்சம்
தேங்கினால் - நீ
களைத்து போட்டு
துணிமணிகள் கொண்டு  
தீட்டிய ஓவியத்தை
ரசிப்பேன் ! - அவசரம் 
சுழன்றடித்தால் சீக்கிரம் 
அவற்றை திருப்பி எடுத்து 
 மடித்து வைக்க சொல்வேன் !

என் எழுத்துக்கும் 
இதே கதிதான் ! 
நன்கறிவேன் நானும் !

அவள்: சில நேரத்தில் 
அழகான கவிதைகளும் 
எழுதுகிறாயே ! அது மட்டும் 
எப்படி ?

அவன் : அதுவோ !?
தூக்கத்தில் நீ உளறுவது போல 
என்னை மறந்து  
உளறியவைகள் அவை !
ராகம் திருடி - இனிய 
இசைக்குள் சேர்ந்து கொள்ளும் 
சூட்சுமம் தெரிந்த 
இயல்பான மொழி(பு)கள் அவை !
வினோத வெள்ளை 
வான் வெளியில் - வண்ணமாய் 
தெறிக்கும் விண்மீன்கள் அவை !
சிந்தை களவாடி - இதயத்தின் 
கன்னங்களை செல்லமாய் 
கிள்ளும் மென்மையான 
விரல்கள் அவை !

அவள் : நல்லா சமாளிக்கிற !
.............
("மாலை" சூழ 
சூரிய பொழுது 
நிலா பொழுதின் 
மடியில் சாய்ந்தது !
மௌனம் சூழ
அவனும் , அவள் 
மடியில் சாய்ந்தான் !

இங்கீதத்தை சங்கீதமாய் 
படித்தவன் என்கிற முறையில் 
நான் அங்கிருந்து நகர வேண்டி 
இருந்ததது !)


No comments: