Sunday, July 10, 2011

^-^ காவிரி கடற்கரையின் காதல் அலைகள் ^-^

              - மோதல் போரும் காதல் போரும் ...


சோழ தேசத்து வீரன் ஒருவன் தன் புலிப் படை வாகை சூடி கொண்டாடும் போர்க்களத்தில் மெல்ல மௌனித்து விலகி , வெற்றியை தாண்டிய ஏதோவொரு மகிழ்ச்சியை உள்ளத்தில் தேக்கி விரட்டத் தொடங்கினான் குதிரையை. நீண்ட காவிரி கரையில் அவன் எழுதிய காட்சிகளும் , போய்ச் சேர்ந்து களித்த பொழுதுகளும்...

காட்சி ஒன்று:

"செக்கச் சிவந்த - இதழ்
நிறம் எடுத்து
வெட்கிச் சிவந்த - அவள்
கன்னத்து குழிகளில்
குழைத்திட்டது போல்
செம்மண் ராஜபாட்டை !"
உருகத் தொடங்கியது வீர மனம் !


அவள் திசையில் மனசு ஓட
ஓடிய மனதை துரத்தி
இந்த குதிரை ஓட - கிளம்பிய
புழுதி போர்வையில்
தோற்றுப்போன தேசத்தின்
பக்கம் எரிந்த சூரியன்
மறைந்தது ..!

காட்சி இரண்டு:

நெற்கதிர்கள் கொஞ்சி
கொஞ்சி சகதியாடும்
நெடு வயல்கள்
பச்சை நிறம் பூசின
கருப்பு விழிகளில் ..!


மாட்டிக் கொண்ட மணிகளை
ஆட்டிக் கொண்டே நடைபோட்ட
காளை கூட்டத்தின் ஒத்திசை
புன்னை வனத்து சோடிக்
குயில்களின் பாட்டிசை - தென்னை
மரத்தின் கூந்தல் திருத்தி குழாவிடும்
பூந்தென்றல் சேர்த்திட்ட மெல்லிசை
யாழும் குழலும் தந்திடாத மந்திர இசை..!
"இயற்கை எழில் என்னும் - இந்த
மாயமெல்லாம் அவளும்தான்
காட்டிடுவாள் அத்தைனையும் ஓரிடத்தில் !"


சோழ தேசத்தில் - சுதந்திரமாய்
திரியும் நாரைகள் ஆண்கள் !
ஒற்றை குளத்தில் நிம்மதியாய்
நீந்திடும் அன்னங்கள் பெண்கள் !
கண்களால் தீராத இன்பம் கொடுத்து
"திரிந்து வா " என்பாள் !
என்னதான் வித்தை இதுவோ ?
திரும்பும் நாள் வரை பொல்லாத
தாகமும் எடுப்பதில்லை !

காட்சி மூன்று :

பொன்மகள் நீராடும்
பொன்னி நதிக்கரையில்
நின்று கனைத்தது குதிரை!
அந்த அந்தி நேரத்தின்
ஆரம்ப வேளையில்
நீருக்குள் இருந்து மெல்ல
உதித்தாள் அழகு சந்திரை !


"என் அத்தான் " என
சொல்லத்தான் - போரில்
பெரும் வெற்றித்தான் எனும்
அவன் மார்பைத்தான் - ஆரத்
தழுவத்தான் - துள்ளி
ஓடித்தான் வந்தாள் !
ஈரம் ஊறிய ஆடை
அவள் கால்களை தடுக்க
தமிழ் மானம் ஏறிய நெஞ்சம்
அவள் வெட்கத்தை பிடுங்க
விலகி ஓடி மறைந்தனள்
ஒளிவு மறைவாய் - மாற்று
துணிகள் இளைப்பாறும்
நிழல் "தரு"வின் பின் புறத்தே ..!


"புண்ணிய நதியில் - பகைவர்
குருதி தோய்ந்த உடலை
நனைப்பதோ ? - என்
பூமகள் நீராடி மணக்கும்
காவிரியை கெடுப்பதோ ?
வயல் சேற்றுக்கு
வாய்க்கால் நீர் பாய்ச்சும்
அந்த தாமரை குளம்
போதுமன்றோ ! - அந்த
குளத்தில் முழுகி நீராடி
குவளை மலர் இரண்டை - நாணி
கவிழும் அவள் விழிகளோடு
ஒப்பிடவே பறித்தெடுத்து
விரைவேன் அவளிடம் ! "
ஓடினான் அங்கு !


காட்சி நான்கு :

காய்கின்ற ஈரச் சீலை
கட்டிவைத்த வீட்டுக்குள்ளே
கனியெனவே அமர்ந்திருந்தாள் !
அருகில் போய் அமர்ந்தான்
அந்த தொட்டால் சிணுங்கி
தொடுமுன்னே சிணுங்கிணாள் !


அடுத்த போர் மூண்டது - ஊடல்
திரட்டி சிவந்த வேல் விழிகளில் !
"நம் திருமண கெட்டிமேளம்
நிற்குமுன்னே - போர் முரசு
கொட்ட வைத்த பொல்லாத
பகைவர் கதை முடித்து
வந்தேன் பெண்ணே - உன்
கோபம் இனி என்ன ?
சொல்லிவிடு கண்ணே !"


[கேட்டக் கேள்விக்கு பதிலாய்]
.... மௌனம் .....


"கொஞ்ச வந்தவனை
கெஞ்ச வைக்கும் - உன்
நெஞ்சத்து மௌனம்
மஞ்சள் மகிழும் மணிக் கழுத்து 'சங்க'த்தில்
எஞ்சித் தவமிருக்கும் - இனிய
தஞ்சைத் தேசத்து தமிழோடு - நாவில்
மஞ்சனம் ஆடுமோ ?
அஞ்சனம் தீட்டிய கண்ணும்தான் பேசுமோ?
கஞ்சத்தனம் காட்டும் - உன்னிடத்தில்
தஞ்சம் நான் அடைகின்றேன்
மிஞ்சாதே ! தா ! உன் மௌனம் !
விஞ்சும் நம் காதல் இன்னும் நீளும் ! "


கோபம் குடித்தவள் போல்
வெடுக்கென்று முகத்தை
மறுபுறம் வைத்து - செவிகள் தீட்டி
இதுவரையில் அவன் காதல் மொழி
கேட்டு விட்டு - இன்னும் என்பதுபோல்
கரையாமல் இருந்தால் கல்லெனவே !


கெஞ்சல் நிறுத்தி - சோகம்
தோய்ந்தவனின் சிந்தை திடீரென
கிசு கிசுத்தது உள்ளுக்குள்:
"ஊடலிலே இவளை எதிர்த்து
வெல்ல முடியாது - மண்டியிட்டு
சரணடைந்தும் - அவள் உள்ளம்
இருக்கிறது இன்னும் கரையாது !
இனி சூழ்ச்சி அன்றி வேறு வழியேது ! "


அம்மோ ! எனக் கூவி - அவன்
நெஞ்சைப் பிடிக்க - பதறிப் போய்
அவள் துடிக்க - கூடியிருந்த
குருவிக் கூட்டங்கள் கலைந்தன
அவள் ஊடலை உடன் தூக்கி கொண்டு !


கொஞ்ச நேர கவனிப்பில் - இந்த
கள்வனின் கள்ளத் தனம்
தெளிந்தாள் கள்ளி !
மெல்ல கசிந்தது
உதட்டோர புன்னகை - அதை
சொல்லாமல் சொல்லி !
முறைத்திருந்த விழி இரண்டும்
முண்டியடித்து பொழிந்தன
வெட்கத்தையும், காதலையும் ..!


"உயிர் என வைத்தாய் எனை
ஓரவிழி எடுத்து தொடுத்தாய் கணை
யாராடி உனக்கிங்கு இணை..."
இப்படி சொல் மேல் சொல்லடுக்கி
கட்டினான் சொல்லால் ஓர் அணை !
அடங்காத காவிரியை அடக்குவதில்
தோற்றது அந்த கரிகாலன் கல்லணை !


காதலில் வளர்ந்த - அந்த
காவிரி வெற்றிலை - சிவந்தே
மடங்கிற்று கைக்குள் !
ஊடல் போரிலும் வென்றான் தலைவன் ..!


ஒன்றுமில்லாததை - அறிய
துடிக்கும் ஆணாய் அவன் !
ஒன்றை அனுபவிக்க
தவிக்கும் பெண்ணாய் அவள் !
இரைத்து போட்ட
வார்த்தைகளை கூட பொருக்க
முடியாத சிந்தை மயக்கம் !
இனி ஐம் புலன்களுக்கும்
புது புது வேலைகள் !
இதழ்களுக்கு முத்த வேலை !
கண்களுக்கு மயக்கும் வேலை !
மூக்கிற்கு முத்த இடைவெளியில்
முகத்தை தாங்கும் வேலை !
செவிகளுக்கு சப்தங்களை
மறக்கும் வேலை !
மேனிக்கு- பரவும் தீயில்
பரவசம் கொள்ளும் வேலை !


பசித்திருந்த அவன் குதிரையும்
அந்தப் பக்கம் - செழித்து
வளர்ந்திருந்த புல்லை
மேயத் தொடங்கிட
திரிந்து களைத்த கிளிக் கூட்டம்
கிளைகளில் இளைப்பாறி
ஓசைக் கூடுகள் கட்டின !
உள்ளங்கை கதகதப்பில் -அந்திச்
சூரிய கிரணங்கள் மயங்கின !

காட்சி ஐந்து:

இன்பம் கொடுத்த அந்த
அந்தியும் சாய்கின்ற பொன் நேரம்
தித்திப்பில் திளைத்தவன் - தன்
மௌனத்தை கலைக்காமல்
ஏறினான் குதிரை ! ஏற்றினான்
அவளையும் ! - சீறிப் பாயும்
குதிரை ஏதோ புரிந்தது போல்
மெல்ல நடை போட்டது
காதலர்களையும் காதலையும் சுமந்து ..!
அந்த இனிய பயணத்தின் - வழி
நெடுகும் கேட்டது ஓர் வாழ்த்து !
"பிரேம் ! ஜெயம்! ஜெயம் ! " - அந்தி
பாடிய அந்த விசித்திர வாழ்த்து !


[சுந்தர தமிழ் எடுத்தால் - காதுகள்
பூட்டிக் கொண்ட காதல் கலையும் என்று
மந்திர மொழி எடுத்து வாழ்த்திற்று அந்தி !]

                                           சோழ தேசத்து மாலை மயக்கங்களோடு,
                                           பிரேம் சத்யா

No comments: