Wednesday, October 6, 2010

சுவீடன் தேசத்து வாழ்வியல்

என் அருமை அன்னையை விட்டு
ஈராயிரம் மைல் கடந்து வந்தேன் !
பருவம் தாண்டி வந்து
காதல் தூண்டி விட்ட - கள்ளியை விட்டு
(வட) துருவம் தேடி வந்தேன் !
என்னவென்று தெரியாத உயிர் என்று
தோழர்காள் ! உங்களை சொல்லி வந்தேன் !
நீங்கள் எனக்காக பட்ட பாடெல்லாம்
பார்த்த பின்னர் - உங்களுக்கு நிகர்
ஆகுமோ என்னுயிர் ?
ஐயத்தோடு எண்ணுகின்றேன் !

தாய் நாடு விட்டு - தாய் மொழி
விழுங்கி , ஆங்கிலம் ஒழுக
நாட்கள் நகர்த்துகின்றேன் - இந்த
"சுவீட் (+) அன்"ன நாட்டினிலே ...!

புதிதாய் வந்த எவருக்கும்
சவால்களே வரவேற்பு செண்டுகள் !
தனித்து விடப்பட்டாலும்
தைரியமாய் திரியலாம் - பசுமை
கொழிக்கும் வீதி எங்கும் !
முகம் சுழிக்காத உதவிகள் !
முழு மூச்சான புன்னகைகள் !
எவருக்கும் இதயம் லேசாகி போகும் !

இவனுக்கென ஏற்பாடுகள்
செய்து வைக்க - வறுமையில் உழன்ற
இப்படி ஓர் இந்தியன் - இங்கு
வருவான் என்று யாருக்கு தெரியும் ?!
தாவர எரிவாயுவில் ஓடும்
பேருந்துகள் - தொடர்ந்து பயணித்தால்
எரிபொருளினும் வேகமாய்
எரிந்துவிடும் - என்
பெட்டகத்து பணம், பொருள் !

வெகு சீக்கிரம் தொடங்கி விடுகிற
வகுப்புகளால் தவறி போகும்
விரதம் முறிக்கும் (Break fast)
காலை சிற்றுண்டி ...! - கவலை இல்லை !
பசி மோசமாய் கிள்ளினால் - பாதை
ஓரத்து ஆப்பிள் மரங்களிடம்
மன்னிப்பு கேட்டு கொண்டு - முற்றிய
கனிகளை கிள்ளிக் கொள்வேன் !

கல்லூரி வரை போகும் "கால்நடைக்கான"
குறுக்குப் பாதை "காட்டு வழி" ! - வந்த
நாளே அதற்கு வரைபடம்
வழங்கிட்ட இந்நாட்டரசு வாழிய நீடுழி !
நீண்ட நாள் புதைந்து கிடந்த
ஆனந்த பொக்கிசத்தை - அகழ்ந்து
வெளியில் எடுத்தன - அழகை
அப்பிக்கொண்ட கானகத்து
வனப்புகள் !

கார்பன் திணறடிக்கும் ரோட்டை விட்டு
பிராணன் நிரம்பி கிடக்கும்
காட்டு வழியில் - தொலை பேசியின்
பாடல் குவியல்கள் - செவி
உணவூட்ட - தினமும்
நோகாமல் பத்து காதை பயணம் !
"இந்த தேசத்தில் வீணாய்
எதற்காக பூக்கிறாய் ? - என்னோடு வா
என் தேசம் போகலாம் " என்றேன்
வழி நெடுகும் குலுங்கும் பூங்கூட்டத்திடம் !
"எதற்காக ?" என்றன பூக்கள்.
" வெறும் சாகும் சாபம் வாங்கி வந்து
இங்கு முளைத்தீர்கள் ! - நளினம்
தோய்ந்த தெய்வ மகளிர்
கையில் சாகும் வரம் வேண்டாமா ?" என்றேன் !!!


(இன்னும் .. பிறவும்
மௌன வெளியில் வார்த்தைகள் தேடி
போயின - திரும்பி வரட்டும் !)

** ஏக போக வாழ்க்கை ஈதில்லை
எனினும் இயற்கையோடு
இயைந்த வாழ்விது!
போக "போக" புளித்திடும் பால்
வேண்டாம் எனக்கு !
ஒரு மிடறு தான் எனினும்
ஊற ஊற இனித்திடும் தேன்
வேண்டும் எந்நாளும்!

2 comments:

Peram said...

enna feeling...!

parthas said...

`en kannil neer kacigiradhu ....
unnai ninaithu
aanandhamai ...

so so nice anna
parthasarathy.g