Tuesday, June 7, 2011

கலியுக சித்தன்




உலகம் எங்கோ வந்துவிட்டது. சொல்லப்படாத விசயங்கள் இல்லை. நீதி நூல்களுக்கும் பஞ்சமே இல்லை. இருந்தும் போர்களும் , சமாதானங்களும் இன்னும் தொடர்கதைதான். என்னை நேர்த்தி செய்து கொள்வதே பெரும்பாடாய் இருக்கும் போது உலகை திருத்துகிறேன் என்று நரம்பை புடைக்க விட்டு எதையோ கிறுக்குவதெல்லாம் வேலைக்கே ஆகாது !
இன்னைக்கு நம்ம அவதாரம் "கலியுக சித்தன்" பித்தனாக எதையோ சொல்லனுமுன்னு ஆசை படுறாரு.சித்தர் பாட்டெல்லாம் படிச்சது கிடையாது.
மேலோட்டமா ஒன்னு ரெண்டு வாசித்ததுண்டு.திடீர்னு மூளைக்குள்ள சின்ன 
விசயம் தோணுச்சு. அவங்க பாடெல்லாம் அடுத்தவங்களுக்காக மட்டும் இல்லாமல் தனக்கான தேடலின் புலம்பலாகவும் இருக்குது. நிறைய கேள்வி கேட்டு பகுத்தறிவின் தொடக்கமாக இருந்தவர்கள் அவர்கள். இந்த சித்தனின்  சிறு குழப்ப முயற்சியும் எந்த கேள்விகளுக்கும் விடை சொல்வதற்கல்ல - தேடலுக்கான சிறு பொறியை பற்ற வைப்பதுதான் !

யாரோ நான் - அழுது
கொண்டே பிறந்த போது
எழாத சந்தேகம் - இப்போது
வந்தென்னை  திருகுவதேனோ ?
ஏதோ ஒரு நாள் எல்லோரையும்
அழவைத்து போமுன்னே 
விடையும்தான் காண்பேனோ ?

மெத்த படித்தவனாய் 
வேடம் கட்டும் போது 
புத்தி தீட்டி கூறு போடுகிறேன் !
சிறு வயதில் வாய் பிளந்து 
கண்கள் விரித்த சங்கதிகள் 
எல்லாம் - வெறும் இணையத்து
தேடு பொறி சொடுக்கில் 
சக்கை சக்கையாய் 
மிஞ்சுவதை காண்கின்றேன்  !

பல நூற்றாண்டுகளாய் 
அவன் சொன்னது  
இவன் கண்டது  
அயிரோப்பிய இறக்கு"மதி"
ஆசிய ஏற்று"மதி" என 
அறிவு கருவூலம் - உலகின் 
யாவருக்கும் பொதுவாய்
நிறைந்து கொண்டு இருக்கிறது !
அதில் கிட்டிய கையளவு கொண்டு 
சமைத்துண்ணும் நான் - எப்படித்தான் 
திமிர் கொள்வது அறிவாளி என்று !

தலைகணத்த மடையர்களுக்கு 
எப்படித்தான் தைரியம் வருகிறதோ 
மொத்த கருவூலத்தையும் 
தூக்கி சுமப்பேன்  என்று கங்கணம் 
கட்டி கொள்ள ! 

மோட்சம் , பரா சக்தி என்றதும் 
மோட்டு வளையை பார்ப்பது 
நம் பழம் பழக்கம் - அப்படி 
அண்ணாந்து பார்த்து நானும் 
கேட்டுப் பார்த்தேன் 
சுய புத்தி , என் அறிவு என்னவென்று !

சன்னல் , கதவு 
இண்டு, இடுக்கு என 
அனைத்தையும் திறந்து 
வைத்தேன் - விடை 
வரும் என்று எண்ணி 
விழி பூத்து போனதுதான் 
மிச்சம் !  

யோசித்து சிந்தை களைத்த 
பொழுதொன்றில் - அறிவு 
சுமை இறக்கி வைத்து விட்ட 
வெள்ளந்தியாய்  நான் மாற 
உள்ளத்து இரைச்சலில் 
இதுநாள் வரை என் காதுகளில் 
விழாத அந்த இரகசியத்தை 
மெல்ல கிசு கிசுத்தது 
இதயம்  - கலை ! கலை ! என்று !

நெற்றி பொட்டின் நாடி முடிச்சு 
சுண்டி தெறித்தது - கலையும் 
அதை செய்யும் நயமும் தான் 
என் சொந்த புத்தி , அறிவென்று !

---------------------------------------------------------------------------------------------------------


சலங்கை , தூரிகை - ராகம் , தாளம் 
பாட்டு , மெட்டு - இவைதான் 
கலைகள் என்று யார் சொன்னது ?
உண்மையில் - வாணிபம் 
விரிக்கப்பட்ட உலகச் சந்தையில் 
இன்று இந்த கலைகள் 
யாருக்கு சொந்தம் ?
திருமகளுக்கா ? கலைமகளுக்கா ?
விருப்பு , வெறுப்பு கடந்து 
லாபம் எண்ணும் கணக்குகள் மறந்து 
ஒட்டு மொத்தத்தையும் ஒரு சிறு
புள்ளியில் அடக்கிவிடும் 
எதுவும் கலை ! படைப்பு ! தனித்துவம் !

பிழைப்பை தாண்டிய வாழ்வு 
அருளப்பட்ட யாவரும் 
எங்கேனும் , எப்போதேனும் 
கலைக்  குமிழ்கள் - உங்கள் 
இதயத்துள் முளைக்குமாயின் 
வெட்டியாய் கழிக்கும் 
பொழுதுகளில்  சிறு பொழுது
அரட்டையில் அரை நாழி 
இருக்காதோ சொல்லுங்கள் ?  
அதற்காய் அர்ப்பணியுங்கள் !
உலகம் உய்க்கும் !

"யாரடா நீ புத்தி சொல்ல 
வந்து விட்டாய் ?" என்பீரோ !
முன்னரே சொல்லி விட்டேன் 
என்னிடத்தில் இப்போதைக்கு 
விடை இல்லை என்றும்  !
அதுவே என் தேடல் என்றும் !

"பித்தன் இவன் பிதற்றுகிறான்"
என்பீரோ ! - நல்லது என் 
நிலை கண்டு இரங்கியமைக்கு !

விசயங்கள் உடன் ஒழுகிவிடும் 
ஓட்டை காதுகளும் - யானை 
பலம் கொண்டு மோதியும் 
திறவாத இதயங்களும் சற்று 
தள்ளியே இருங்கள் ! - நான் 
உங்களை சொல்லால் அடிக்க
நீங்கள் என்னை கல்லால் அடிப்பீர்கள் !

                                           - கலியுக சித்தன் 

No comments: