Saturday, June 18, 2011

வள்ளுவனோடு ஒரு குறள் விளையாட்டு



எல்லாமும் இருக்கிறதாமே  
வள்ளுவா உன் முப்பாலில்
எங்கே பார்ப்போம் என்
புலம்பல்களுக்கு ஆறுதலாய்
ஏதாவது சொல்லி வைத்து
இருக்கிறாயா  என்று  !
இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு.            மெய் உணர்தல் : 352


சராசரி உயரம் வளர்ந்த 
மனிதர்கள் - தலை 
இடித்துக் கொள்ளும் 
வாசல் நிலை படியை 
கை நீட்டி மட்டும் 
இடிக்க முடிந்த - அயிந்தேகால்
அடி "வளர்ந்தவன்" யான் !
உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்(கு)
அச்சாணி அன்னார் உடைத்து.  வினைத் திட்பம்:667

போட்டா  போட்டி கொண்டு 
நூற்று கணக்கில் குறள்களை 
மனனம் செய்த பள்ளி பருவத்து 
ஞாபகங்கள் - கோனார்
விளக்க உரைகளை கரைத்து
குடித்த தேர்வு காலத்து
நினைவலைகள் - மீசை
அரும்பும்  இடம்
துடிக்க ஆரம்பித்ததும்
விரும்பி படித்த மூன்றாம் பால் !
எனினும் பத்து பதினைந்து 
இன்றதில் தட்டு தடுமாறி 
சொல்லி விட்டேனாயின்
பெரும் சாதனை  !

சூனியம் சூழ்ந்து
தொடர்புகள் அறுந்து
செறிவான சிந்தைகள்
சிதறி - பொதி சுமக்கும்
கழுதையாய் கொஞ்ச காலம்
நடத்திய  வாழ்வில்
கிட்ட தட்ட எல்லாமும்
போனதுபோல் ஒரு மாயை !
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.   கல்வி:391


பஞ்ச மா பாதகங்கள் ஏதும்
யான் செய்கிலை யாயினும்
என்னை நான் வளர்த்துக்
கொண்ட விதத்தில் - இன்னும்
திருப்தி இல்லையடா !
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்.        தெரிந்து செயல்வகை:466

வெறும் அனுபவம் கற்று
ஆயிரம் கவிகள் பாடி
நீதி, நியதி என எல்லாமும்
புட்டு வைத்தாய் !
கூடுதலாய் , ஓங்கி
வளர்ந்த அறிவியல்
கைவயப் பட்டும் - என்னை
தைரியமாய் முன் நகர்த்த
இன்னும் தயங்குகிறேன்  !
துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை.    வினைத் திட்பம் :669


காதல் இன்பம் கண்டு ,
ஊதிய பொருள் வழி தேடி,
அதன் பின் தானே - நல்
அறம் செய்யும் பக்குவம்
யாருக்கும் வாய்க்கும்
பொதுவாய்  ! - நீ
அறம் , பொருள் , இன்பம் 
என்று வரிசை கட்டியதன்
ரகசியம்தனை வந்துரை
மெதுவாய் !
உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
ஒள்ளமர்க் கண்ணாள் குணம்.    காதற் சிறப்புரைத்தல்: 1125

[ தெரியும் தத்தானே - நீ மட்டும் 
   மூன்றாம் பாலை முதலில் 
   தொடங்கி இருந்தால் - ஊரில் 
   இருந்த ஒட்டு மொத்த 
   பனை மரங்களையும் மொட்டை
   அடித்து ஓலை பற்றாக்குறை 
   செய்திருப்பாய் !]


ஏமாளியாக - கோமாளியாக
எனக்கு வேடம் கட்டிவிட்டு
ரசித்தவர்களுக்கு ஏது சொல்வேன்?
முக துதி பாடி , முதுகுக்கு பின்
பழி பாடினியர்களை - ஏது செய்வேன்?
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயர்க்கு.  புறங்கூறாமை:190


நுட்பமாய் என்னையும் 
தாக்குகிறாயோ? அவர்கள் 
பற்றி உன்னிடத்தில் பழித்து 
விட்டேன் என்று ! - சரி !
பொருந்தாது பேசிய 
வாய்களில் இருந்து 
இரண்டு ஒரு பற்களை 
வெளியில் எடுத்துவிட 
துடிக்கும் - கோபம் 
குடித்து விட்டேனே !
நீ என்னை விரல் சூப்ப
சொல்கிறாயா ?
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து.     பொறையுடைமை:155


ஓகோ ! பழி வாங்க 
துடிக்கும் அகந்தையை 
கிள்ளித்தான் போட
வேண்டும் போலும் !
பெருங்கிழவா ! இயன்றவரை 
முயற்சிக்கிறேன் !
முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.     ஆள்வினை உடைமை:616


போதும் பெரும் புலவரே !
இத்துடன் நிறுத்திக் கொள்வோம்
விளையாட்டை ! - நினைத்தேன் !
புதிதாய் எனக்காய்
எழுத தேவை இருக்காது
என்றெண்ணி எழுத்தாணி
எடுக்காமல் வந்த போதே
நினைத்தேன் ! என்னை பொடியன்
என்று கருதி விட்டாய் !
இரு ! இரு ! இந்த வாழ்வென்னை
பெரு நடை அழைத்து சென்றால்
உன்னை துளைத்தெடுக்கும்
புத்தி கூர்மை செய்து விடுகிறேன் !

                                                   வள்ளுவப் பேரன் ,
                                                    - பெரமு 
             <====== XX======>

குறள் விளக்கத்திற்கு சுட்டெலியை [Mouse]
குறள் மீது நகர்த்தவும் 

1 comment:

Peram said...

மின் தமிழ் குழாமில் எமது தோழர் பால முருகன்
இவ்வாறு ஒரு கேள்வி கேட்டார்:


குறளின் முப்பாலையும் கரைத்து குடித்த உங்களிடம் தான் கேட்க வேண்டும்….

“நமக்கு சொந்த உறவில் இல்லாதவர்கள், ஆனால் உறவைபோல் பழகுபவர்களிடம்
எவ்வாறு பழகுவது?
அவர்கள் நம்மைவிட்டு பிரியும் காலம் அதில் எவ்வாறு நடந்து கொள்வது?

இந்த சொந்தமில்லா சொந்தங்களிடம் பழகும் விதம் அறிய வேண்டுகிறேன்”