Friday, May 20, 2011

பாட்டி சுட்ட பாட்டுக்கள் - 1 !

(ஔவையார் வேடத்தில் கே.பி . சுந்தராம்பாள் )


தொந்தி கணபதியை தொழுதேத்தி இல்லறம் வெறுத்து வேண்டியழுது , பூச்சூட வேண்டிய தலையில் நரை எழுதி , மூவேந்தர் நிலத்தை சுற்றி திரிந்து அறம் பொதிந்த தேமதுர தமிழ் பாடல்களை இசைத்தவர் இந்த பாட்டி என்று உங்களுக்கே தெரியும் !

மனசு கொஞ்சம் சுணக்கமான பொழுதுகளில் இந்த பாட்டியின் மடியில் தலை சாய்த்து கொள்வதென் வழக்கம். தாலாட்டு பாடி உறங்க வைப்பதற்கு பதிலாக , உணர்ச்சியின் மையத்தில் பாயும் கூர் ஈட்டியாய்   பாட்டுக்கள் பாடி என்னை உசுப்பி விட்டு விடுவார் !

ஏன் வேலைகள் சரிவர முடிவதில்லை. விரும்பி தேர்வு செய்த பாதைதான் எனினும் ஏனோ கற்களும் முட்களும் பாதங்களை பதம் பார்கின்றன ? புலம்பலாய் முறையிட்டேன்.

பிதுங்கி வழியும் தேன் போல, பாட்டியின் இதழ் ஓரத்தில் அனுபவம் பிதுக்கிய 
மெல்லிய புன்னகை துளிர்த்தது , பின் பதிலும் வந்தது !

    அடுத்து முயன்றாலும் ஆகும்நாள் அன்றி 
    எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த 
    உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம் 
    பருவத்தால் அன்றி பழா -- (மூதுரை :5)

பாட்டியிடம் எனக்கு பிடித்தது இந்த உவமைகள் தான். "ராசா நீ என்னதான் முயற்சி பண்ணாலும் என்னைக்கு காரியம் நடக்கணுமோ அன்னைக்குதான் நடக்கும். ஏன்னா,என்னதான் ஒசரமான மரங்களாக இருந்தாலும் பருவம் வந்தாதான் கண்ணு அதன் பழங்கள் பழுக்கும் " என்று என் அப்பத்தாவின் குரலில் எளிமையா விளக்கமும் குடுத்துச்சு அந்த தமிழ் பாட்டி !

"தன்நம்பிக்கையும் 
மண் மீதான பிடிமானமும் 
முன் பாயும் துணிச்சலும் 
நெஞ்சில் பச்சை ஏறியவர்களுக்கு
புயல் என்பது வேர்களை
பிடுங்கி போடுவதற்கல்ல !
உதிர்த்து போட்ட சருகுகளை 
அள்ளி எடுத்து போகவே ! 
பெரு மழையும் வெள்ளமும் 
மூழ்கடிக்கவோ ? 
இல்லவே  இல்லை - கட்டமைத்த 
பாய்மரங்களை ஓட்டிப்  பழகவே !" 

என்று நானும் என்னை உசுப்பி கொண்டு பாட்டியை வணங்கினேன். பாட்டியும் என்னை ஆசிர்வதித்தாள். பிறகு என்ன தாமதம் ?அடுச்சு நொறுக்குங்க ! எல்லாம் நல்லா நடக்க வேண்டிய நேரத்துல நல்லா நடக்கும் !

(இன்னைக்கு தென் மேற்கு பருவக் காற்று படத்திற்காக தேசிய விருது வாங்குன , நடிகை சரண்யா அவர்கள் களவாணி படத்துல சொல்ற வசனம் கூடவே நினைவுக்கும் வந்தது:  "ஆனி போயி ,ஆடி போயி ஆவணி வந்தா அவன் டாப் பா வருவான் "
ஆவணி வரட்டும் !  பொறுமையா உங்க வேலைய பாத்துகிட்டே இருங்க !)



No comments: