Monday, December 13, 2010

இங்கே நானும் நீ கொடுத்த தனிமையும் சுகம்!


நான் புறப்படும் போது
உனக்கு பதிலாய் - எனக்கு
துணையாய் நீ அனுப்பி
வைத்த தனிமை
உன்னை போல் - என்னிடத்தில்
அக்கறை காட்டுவது
இல்லையடி !

ரகசியமாய் இது பற்றி
புகார்களை ஒப்புவிக்க
அழகு மாவிலை தொங்கல்
மின்னும் உன் தங்க
காதுகள் அருகில் இல்லையடி!

என் உயிர் வளர - என்
ஆழத்து வேர்களில் - உன்
உயிர் ஊற்றி வந்தாய் !
வாட நினைத்த போதெல்லாம்
வாடாத மலர் முகம்
காட்டி மலர்ச்சி கொடுத்தாய் !
இந்த தனிமை...
ஆழ குழி பறித்து - என்
மொத்த நீரையும் உறிஞ்சி
அங்கே பாய்ச்சி கொள்கிறது !
மலர்ந்து இதழ்கள்
விரியும் போதெல்லாம் - எங்கோ
போய்க் கொண்டிருந்த
பெருங்காற்றை என் பக்கம்
திருப்பி விடுகிறது !

இரவு போர்வை போர்த்தி
அமைதி கொள்ளும் - வண்ண
பூமியாய் தூங்கி வந்தேன் - நீ
"இனிய இரவு" குறுஞ்செய்திகள்
அனுப்பிய அந்த நாட்களில் !
இன்று .......
நடு நிசி கடந்த பின்னும் - மூட
நினைத்திடும் விழிகளை
திறந்து பார்த்து விளையாடுகிறது
நீ அனுப்பி வைத்த தனிமை !

உன் நேரத்தை எனக்காய்
செலவிட்டவள் நீ - எனக்கான
என் நேரத்தை கொஞ்சமாவது
இந்த தனிமை மிச்சம்
வைத்தால் போதுமடி !

காதலில் முன் அனுபவம்
கொண்டவன் இவன் என்றும்
உன்னை கூட நாளை இவன்
ஏமாற்ற கூடும் என்றும்
உண்மையான அக்கறை
மொழிகள் கேட்ட பின்னும்
ஏனோ நீ உதற மறுத்தாய் !
வேரோடு பிடுங்க பட்ட
இடத்தின் வேதனைதான்
உணர்ந்தாயோ ?!- இங்கு பாரடி
கூடவே இருந்தும் - இந்த
தனிமை ஒவ்வொரு
நொடியும் தனியனாக - எனை
உதறி கொண்டிருக்கிறது !

மெரீனா கடற்கரையில்
தனிமையோடு - தனியாக
நான் அமர்திருந்தும்
காதலர்களாக எங்களை
சந்தேகித்து இருக்காது
இந்த உலகம் ! - நானும்
நீயும் ஓர் நாள் கூட
அந்த காதல் கடல் காற்று
வாங்கியதில்லையே ! - நம்மை
காதலர்களாக ஏற்று கொள்ளுமா
இந்த உலகம் !

என்னை யார் வேடிக்கை
பேசினாலும் பொறுக்க மாட்டாய் !
நான் உன்னை வேடிக்கை
பேசினாலும் விரும்ப மாட்டாய் !
எந்த நேரமும் ஓயாது - எனை
வேடிக்கை பேசும் - இந்த
தனிமையினை கொஞ்சம்
வாய் மூடி இருக்க சொல்லடி !

கணவன் மனைவியாய்
வாழ்ந்து பார்த்து
அவசர படவில்லையடி நாம் !
குடும்ப வரவு செலவுகள்
நிர்வாகம் என - அதீத
அவசர பட்டவள் நீயடி !
ஓடும் இந்த வாழ்க்கைக்கு-என்
கால்களில் சக்கரம்
கட்டிவிட்டவள் - வழித்துணையாய்
அனுப்பி வைத்த தனிமை
என் பாதைகளில் கற்கள்
கொட்டி போவதை என்னவென்று
சொல்வதடி !

இப்போதும் பாரடி - நேரம்
போவது தெரியாமல் உனை
பற்றி எழுதி கொண்டே இருக்கிறேன் !
எல்லோரும் பொய் விட்ட
கணிணி ஆய்வு கூடத்தில்
நான் தனியாக இருப்பதாக
இந்த தனிமை உரக்க கத்துகிறது!
இன்னும் கொஞ்ச நேரம் போனால்
பசியை துணைக்கு அழைத்து
பத்து காதை நடை பயணத்தில்
பாதியிலே எனை வீழ்த்தி விடும் !

உன் செல்ல கோபங்களின்
அம்சமோ இந்த தனிமை !
இவ்வளவு நேரம் விடாது
திட்டியும் - என்னோடு
என் அறைக்கான பயணத்திற்கு
தயாராய் நிற்கிறது !

   - இந்த கடும் உறைபனியிலும்
     உனக்காக உருகி கொண்டிருக்கும்
     உன்னவன் !

1 comment:

Anonymous said...

migavum alagana varigal...
aalamana valigaludan