Tuesday, November 9, 2010

வாழ்வின் முதல் பனி மழை



குழந்தையாய் - தூறலில்
நனைத்த சந்தோசங்கள்
காலத்ததின் படிவுகளால் 
தோண்டி எடுக்க வேண்டிய 
ஊற்று நீராய் - நேற்று வரை 

இன்றென்ன நிகழ்ந்து விட்டது 
அதிசயமாய் - கிடைத்தது 
பனி மழை அபிஷேகம்
எல்லா நிறங்களும் 
தங்கள் வேறுபாடுகளை 
விட்டு விடவோ - இப்படி 
வெள்ளை போர்வை போர்த்தி 
கொண்டாடுகின்றன ..!

மேக கூட்டங்களை 
மேலிருந்து ஊதித்  தள்ளியது 
யாரோ? - ஆடை 
போர்த்தப்பட்ட உடல் 
ஆசிர்வதிக்க படவில்லை 
என்றாலும் - காட்சியுற்ற 
கண்களும் , மென் பனி 
தீண்ட பட்ட முகத்தின் 
பாகங்களும் மோட்சத்திற்கு 
போவதற்கு முன் அனுமதி 
பெற்று விட்டன ..!

இயல்பு வாழ்க்கை 
பாதிக்கப் பட்டதாய்
அறிவிக்கப் பட்டது..!
என் இயல்பே வேரோடு 
பாதிக்கப் பட்டதை 
 யாரிடம் அறிவிப்பது ..! 

தோழர்கள் நாங்கள் 
மீண்டும் எங்களை 
குழந்தையாய் 
பிரசவித்து கொண்டோம்..!
கையில் திரண்ட 
பனி உருண்டைகள் 
அள்ளி ஒருவர் மீது 
ஒருவர் வீசி கொண்டோம்..!

ஆதி முதல் இந்த 
உலகம் வண்ணமாய் 
இருந்தாலும் - நாம் 
படித்த வரலாறுகள் 
கருப்பு வெள்ளை தானே..!
வரலாற்று ஓவியமாய் 
இந்த இருண்ட வானமும் 
வெண் பனி மூடிய வழிகளும்..!

உறைந்து விழுகின்ற 
மழையோ ? - அது 
என்னை உருக வைத்தது 
பிழையோ ? - ஏதோ அறுபட்டு  
விழுந்ததே - எனை 
பொம்மையென கட்டியிருந்த 
இழையோ ?

இந்த சின்ன சின்ன 
பனிக் கட்டிகள் 
மோதி - இப்படி 
சின்னா பின்னமாய் 
சிதறினேனே..!
யாரேனும் அள்ளி 
எடுத்துத்  தாருங்கள் 
அடுத்த மழையில் 
நான் சிதற வேண்டும் ..!

No comments: