Monday, October 8, 2012

விழுப்புண்







பச்சிலைகளின் சாறும் -  வேலி 
ஆமணக்கு காம்புகளின் பாலும் தடவி
அரச மரத்து இலைகளால் - தன்
"விழுப்புண்களை"   மூடி வைத்து 
இருந்தாள் பெரியாத்தாள் ..!

இருக்கிற பற்களால் - இடுக்கியில்
நைத்த பாக்குத் துணுக்குகள் 
போதை இலைத் துருவல்கள்
திணித்து - சுண்ணம் பூசப் பட்ட
வெற்றிலை மடக்குகளை 
குதைத்துக் கொண்டு இருந்தாள் ..!

வயிறார உண்டு வாயார தாம்பூலம்
மென்று பழகியவள் - வயதின்
குடைச்சலால் - வரும் 
போகும் எல்லோரிடத்தும் 
எதையாவது கேட்கக் துடிக்கும் 
வாயின் நமச்சலை ஆற்றுதற்கு
இன்று இப்படி அடிக்கடி 
மெல்ல 'மெல்ல' பழகுகிறாளோ ?

பெரியப்பா தலைமையிலான
குடும்பத்தின் விசாரிப்புகள்
விசாரணைக்களுக்குள் ஊடாடி
நுழைந்தது ஆத்தாளின் 
வேண்டுகோள்:

" பச்சரிசி வெந்தய கஞ்சி -கூடவே 
பசலி கீரை வதக்கி வெச்சு
சாப்புடு பேராண்டி - உஷ்ணமான ஊரு
உரைப்பில் சிவந்த சோறு
பழக்கம் விட்டு போயி 
ஃபாரின்ல போயி வந்த ஆளு 
இல்லாட்டி உன் வவுறு கேட்டுப் 
போகும் பாரு - டீ , காஃபிய
விட்டுபுட்டு நிறைய குடி நீர்மோரு " 

அதற்குள் ...
தண்ணீர் கலவா கரந்த பாலும்
பனை வெல்லத்தின் காய்ச்சிய பாகும்
முனுக்கிய தேயிலைத் தூளும் 
கொதிபட  பொங்கவிட்டு ,சுவை கூட்டி 
சாயம் ஏற்றி ,வடித்த தேநீர் தயாரென
அடுப்பமனையில் இருந்தே செய்தி 
அனுப்பியது இஞ்சி ஏலத்தின் 
மணம் சுமந்த 'தேநீராவி' பறக்கும்
பெரியம்மாவின் கைக் குவளை !

இளஞ்சூட்டில் தேநீரின் 
இரெண்டொரு துளிகள்
நாவில் பட்டதும் - சிவ்வென்று
சிலாகித்தது மூளை :
"போடணுமம்மா தங்கத்தில்
உங்கள் கைக்கு வளை ! "

விடை பெற்று இயந்திரக் குதிரையில் 
புறப்படும் நேரம் - சில்லறையை
சுண்டி விட்டது போல் அடி வயிற்றில்
சின்னதாய் ஒரு வலி - வயிற்றில் 
விழுந்த புண்ணை தொட்டுச்
சீண்டுதோ தேநீர் ?- ஆத்தாள்
நினைவில் வந்துவிட்டு போனாள் ! 

                             - சிரவை பெரமு

பின் குறிப்பு: விழுப் புண் - விழுவதால் ஏற்படும் புண்
                          மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும்
                          உடன்தொக்கத் தொகை

புகைப்படம் : விக்கி மீடியா 

Tuesday, October 2, 2012




சட்டென்று வலைகளில்
சிக்கிக் கொண்ட மீன்கள்
சந்தையில் நாறுதற்கு
தொட்டிகளில் கொத்தடிமைகளாய் !

வலைகளில் நழுவி - சேற்றில்
பதுங்கிவிட்ட மீன்கள் - சுதந்திர
தாகத்தால் போராடுகின்றன
கடைசி சொட்டு குளத்து
நீரும் உறிஞ்சப்படும் வரை !

கடைசியில் பிடிபட்ட
அந்த  மீன்களும் உடனே
கொல்லப் படுகின்றன
சிறை பிடித்தவர்களுக்கு
இரையாக - அவர்கள்
உழைப்பின் கடைசி நாள்
விருந்தாக ..!

உப்பு , கார , புளி கலவைக்குள்
புரண்டு - கண்ட துண்டங்களாய்
எண்ணெயில் வறுபடும்
போராளி மீன்களின்  வாசம்
மூக்கை துளைத்தது - ம'ரணம்'
நிச்சயிக்கப்பட்டு  - சந்தைக்கு
வண்டிகளில் ஏற்றப்பட்ட
மீன்களுக்கு ..!

இந்த மீன்களை போலத்தான்
மனித வாழ்க்கையும் ..!

    - சிரவை பெரமு

# குத்தகை மீன் பிடிப்பு,திருவாசக்குளம்,சிரமேல்குடி

Tuesday, May 29, 2012

Vapor Sari - நீராவி சீலை



படங்கள்: அத்தான் திரு.வெங்கட்ராமன்

பரம்பிக்குளம் வனவிலங்கு சரணாலயத்தில் என் அத்தான் எடுத்த அழகான புகைப்படங்கள். பட்டென இதயம் திறந்து கொண்டது . பனி மூட்டம் என்றால் எனக்கு மிகப் பிடிக்கும்.

அதிகாலையின் இதத்தில்
மெல்ல நடக்கும் காற்றில்
பறந்து மெல்ல உலர்கிறது
நீராவிச் சீலை ..!

இந்த பனியின்
வலைக்குள்
சிக்கிக் கொண்ட
உடல் சிலிர்க்கும் !
புல்வெளி வியர்க்கும் !

காற்று ஏவி விடும்
நீர் ஊசிகள்
மார்பைத் துளைத்து
முதுகில் வெளியேறும்
தடயமே இல்லாமல் !

தேய்ந்து போன ஒற்றையடி
பாதையில் நகர நகர - பனியால்
வெள்ளையடிக்கப்பட்ட
'*வெளி'ச்சுவரில் வரையப்படும்
காட்சிகளை இயற்கை
மாற்றிக் கொண்டே இருக்கும் !


{*வெளி - காற்று வெளி}

மனதின் இரைச்சல் அடங்கி
சருகுகளின் சலசலப்பு
காதைக் கிழிக்கும் !

பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த
உயிர்களின் வாடை
ஒன்று திரண்டு வந்து
மூக்கை உரசிக்
கொண்டே இருக்கும் !

செவிகளுக்கு
விளங்காத ஒலி ஒன்று
மரங்களின் உச்சியில்
இருந்து அருவிபோல்
னதுக்குள் இறங்கும் !

காட்சிகளை கண்கள்
தன் கண்களில்
அள்ளி அள்ளி எடுத்து
ஒற்றிக் கொள்ளும் !

ஞானத் துளிகள்
நாக்கின் நுனியில்
விழுந்ததும் கால்கள்
காணாமல் போகும்
எங்கிருந்தோ வந்த
சிறகுகள் உடலை மேலே
இழுத்துக் கொண்டு பறக்கும் !


உடலுக்கு உள்ளும்
வெளியுமாய்
உயிர் ஊசலாடும் !

இப்படி அரை
நிமிடங்களுக்குள்
ஆயிரம் யுகங்கள்
நீளும் கொடுப்பினையை
தட்டிக் கெடுக்கும்
உடன் வந்த தோழர்களின்
அழைப்பு :"அடேய் நில்லுடா "

இயற்கை உசுப்பிவிட்ட
அந்த பரவசம் - அரட்டைகளின்
இடையிலும் ரகசியமாய்
கசியும் மந்திரப் புன்னகையாய்
கவனிப்பார் யாருமற்று !

                             - பெரமு, சிரவை

Monday, May 28, 2012

Haiku - ஹைக்கூ கவிதைகள் !





காலத்திற்கும்
கருவை சுமக்கும்
கர்ப்பிணி ..
கவிதை !

மறைந்து இருந்து
பார்க்கும் மர்மம்
என்னவோ ..
பிறை !

காதலும் கானலும்
தோன்ற ஒரே 
காரணம் ...
'முழு அக' எதிரொளிப்பு !


இனிப்பான
எச்சில் ..
தேன் !

வா
போ
இரு
காதலே !

{அருகில் வா ! நெஞ்சுக்குள் போ ! அங்கேயே இரு ! என் காதலே !}


Monday, May 7, 2012

என் ஓவியங்களின் பயணம் !




காற்றில் கைகளால்
ஆதி மனிதன்
முதலில் வரைந்தான்
சைகை ஓவியம் !

கற்குகைகளில் செதுக்கி
விட்டுப்போனான் - தன்
வரலாற்று காவியம் !

என் தூரிகையை நீவி விட்டதும், ஊக்குவித்ததும் என் அத்தான் திரு.வெங்கட்ராமன் அவர்கள். அப்போது நான் இரண்டாம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன். அத்தான் ஆறாம் வகுப்பு படித்து கொண்டிருந்தார். அது ஒரு விடுமுறை நாள். யாரோ கற்றுக் கொடுத்த மிக்கி மௌஸ் படத்தை வரைந்து காண்பித்தார். நான் அதன் அருகே அதே போல் மிக இலகுவாக வரைவதை கண்டு ஆச்சரியபட்டார். அதோடு நில்லாமல், ஒரு பெரிய நோட்டு புத்தகம் ஒன்று வாங்கி கொடுத்து , அடுத்த விடுமுறைக்கு திரும்ப வருவதற்குள் என்னை நிறைய வரைய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அன்று பழக ஆரம்பித்ததுதான் இந்த சித்திரப் பழக்கம். இடையில் பல காரணங்களால் நிறுத்திக் கொண்டேன். பிறகு பனிரெண்டாம் வகுப்பு விடுமுறையில் ஆனந்த விகடன் தனது பவள விழா சிறப்பிதழில் 75 முத்திரை ஓவியங்களை வெளியிட்டது. எத்தனையோ ஆயில் பெயிண்டிங், வண்ணப் படங்களுக்கு நடுவே, என் கண்களை கவ்விக் கொண்டது, திரு.பத்மாவாசன் அவர்களின் "அன்னை ஓர் ஆலயம்" என்ற கோட்டு ஓவியம். 
அன்னை தெரசாவையும், நம் தஞ்சை பெரிய கோவிலையும் இணைத்து பென்சிலின் நுணுக்கமான கொடுகளை கொண்டே வரையப்பட்ட ஓவியம்.ஏதோ ஒரு துணிச்சலில் A4 அளவு காகிதத்திற்குள் தஞ்சை பெரிய கோவிலை இரண்டு நாட்களில் கட்டி முடித்தேன். பழைய ஆனந்த விகடனின் காகித அளவு சிறியதாக இருக்கும். ஓவியங்கள் அழகாய் இருந்த அதே வேளை, அதன் நுணுக்கமான விவரங்களை ஊடுருவி பார்க்க முடியவில்லை. எனினும் வரைந்தே ஆக வேண்டும் என்ற ஆசை எனக்குள் புதிய புதிய வழிகளை , நுணுக்கங்களை கண்டு எடுத்தது. பிறகு ஆண்டுக்கு ஒரு படம் வரைந்தேன். இறுதியில் அத்தனை ஓவியங்களையும் மூட்டை கட்டி வைத்திருந்த பையினை ,சுவீடனுக்கு புறப்படும் அவசரகதியில் என்னை வழி அனுப்ப வந்த என் அன்பு சகோதரன் , கும்பகோணம் பேருந்து நிலையத்தில் தொலைத்துவிட்டான். 
என்னிடம் மிஞ்சி இருப்பது அதை அரைகுறையாய் நான் மொபைலில் எடுத்து வைத்து இருந்த புகைப்படங்கள் மட்டுமே. கவலை இல்லை. இதை விட பெரிதாய் , நுணுக்கமாய் வரைவேன். ஒரு குருவின் வழிகாட்டலும், ஓவியதிற்கான சாதங்களை கையாளும் திறமையும் வாய்த்தால் அடுத்த கட்டத்திற்கு நகர்தல் என்பது எளிதாகும். 
அந்த ஓவியங்களில் சிலவற்றை மென்பொருள் உதவியால் வண்ணம் பூசி எப்படி இருக்கும் என்று பார்த்தேன். மிக சிலிர்பாய் இருந்தது. இவற்றின் உண்மையான பென்சில் ஓவியங்களை கீழே இணைத்துள்ளேன்.
ஓவியம் உள்ளதை உள்ளபடி எழுத முடிந்த ஒரு அற்புதமான கலை. 


















Thursday, May 3, 2012

She is a riddle - அவள் ஒரு விடுகதை !




அவள் பெயரோடு
அவன் பெயர் சேரும்போது
அவர்களுக்கு திருமண நாள் !
அவன் பெயரோடு
அவள் பெயர் சேரும்போது
அவனுக்கு பிறந்தநாள் !


'ஜெயம்' பாடும் - அவன்
வெற்றியின் களைப்பை
இளைப்பாற்றும் அவள் ஓர்
இளவெயில் 'ந்தி' !


அவன் அந்த அந்தியை
சந்தித்தான் !
அன்றொரு அந்தியில்
சந்தித்தான் !
அவளோ "அத்தான் !
வெல்க - உன்
பிரேம்தான் "என
நறுமுகை
சிந்திப் போனாள் !

Friday, April 20, 2012

Lovable Magic - மாயம்


மாயாவிகள்


கூடி கூடி
நாம் பேசும்
கொஞ்ச கொஞ்ச
நேரங்களிலும்
குட்டி குட்டி
இடைவெளிகள் !


அதையும்
நிரப்பி விடுகின்றன
விட்டு விட்டு
பேசித் துடிக்கும்- நம்
சின்ன சின்ன
இதயங்கள் ...!


- பெரமு

Saturday, April 14, 2012

You are a killer - கொலைகாரி நீ !





நீ பார்க்கும் போதெல்லாம்
நான் கொலை
செய்யப்படுகிறேன் !
பார்க்காத போதெல்லாம்
தற்கொலை
செய்து கொள்கிறேன் !

இப்படி செத்து செத்து
பிழைக்கும்
மறுபிறவிகளை
அருளி விட்டாய் நீ !

Tuesday, April 3, 2012

தூண்டில் - fishing hook






தன் பலவீனத்தை
தூண்டில் முள்ளில்
தொங்கவிடுவாள்
அவள் ..!

கொக்கி முனையில்
தொண்டைக் குழி
சிக்கும் வரை - அவள்
தன் வசம் சிக்கிவிட்டதாய்
துள்ளுவான் அவனும் ..!

சுண்டி இழுத்து
தரையில் போட்ட
பிறகுதான் - எல்லாம்
விளங்கும் ...
ஒரு மீனாய் யார்
யாரிடம் சிக்கிக்
கொண்டது என்று !

காதல் ஒரு வரம் - அது
வலை விரித்து
பிடிக்கப்படாத வரை !

உச்சியில் இருந்து
கொட்டும் அருவியாய்
உயர வானில்
பறக்கும் குருவியாய்
வாய்க்கும் காதலில்
தடை ஏது ?!
சுதந்திரத்திற்கு
குறை ஏது ?!

                             - பெரமு