Thursday, December 15, 2011

முக்கூடல்






அறம், பொருள் , இன்பம் !


காட்சி, நெருக்கம், வருடல் !
மௌனம் , சொல் , காவியம் !
ஊடல், கூடல், திருமணம் !
பிரிவு, தனிமை, ஏக்கம் !


வீரம், கோபம், யுத்தம் !
ரத்தம் , வலி , கண்ணீர் !
வெற்றி, வாகை, நடனம் !
தோல்வி, சிறை, மரணம் !


நீ, நான் , காதல் !

Tuesday, December 13, 2011

பொன் வண்டு !


என் சிறுவயதில்
குச்சிப் பெட்டிக்குள்
குவிந்திருக்கும்
கோவை இலைகளுக்குள்
விளையாடும்
பொன் வண்டுகள் !

நான் தாலி கட்டிய
அத்தனை
பொன் வண்டுகளும்
அறுத்துக் கொண்டு
ஓடின - கடைசியாய்
தாலி அறுத்தவளின்
கழுத்து இடுக்கு கத்தி
சிக்கிய என் விரலில் குத்தி
உறைத்தது புத்தி !
அதன் பின் சிக்கிய
எல்லா வண்டுகளுக்கும்
'கால் கட்டுகள்' தான் !

அடுத்தவன் பிடித்து
வைத்திருக்கும்
பொன் வண்டுகளை
சுதந்திர வானில்
பறக்க விட்டு ரசிப்பதும்
எனது பொன் வண்டுகளை
பத்திரமாய்
ரசகியப் படுத்துவதும்
ஆரம்ப பள்ளியில்
ஆரம்பத்திலே கற்றுக் கொண்ட
(ஆண்) மனோபாவம் !

கட்டிய நூலினை
இழுத்துக் கொண்டு
நூலிழையில் தப்பிப் போனது
ஒரு பொன் வண்டு !
சுதந்திரத்திற்காக - அது
விட்டுப்போனது
ஒரு கால் துண்டு !

.........

எதிலும் கொஞ்சம்
வித்தியாசமானவள் நீ !
அதிசயங்களை
அலட்சியப் படுத்துபவள் !
அலட்சியங்களை
ஆச்சரிய மூட்டுபவள் !

பூவே  உன்னிடம்
பூவை நீட்டி
பூத்தது காதல் என்றேன் !
நீ "எனக்கும் தான்"
என்றதும் எனக்கு நீ
பொன் வண்டானாய் !

அந்த பொன் வண்டுகள்
போல் என் இம்சைகளுக்கு
பயந்து ஓடி விடாமல்
பதிலுக்கு பதில்
கடித்துக் கொண்டே என்னோடு
பயணிக்கிறாய் !
மயில் கழுத்து நீட்டி
வேண்டும் உன் தாலி என்கிறாய் !
ஊரைக் கூட்டி எப்போது
போடுவாய் 'கால் கட்டு' என்கிறாய் !

இதற்கெல்லாம் நன்றியாய்
நானும் செய்வேன் அந்த
பொன் வண்டுகளுக்கு
செய்யாத ஒன்றை : நிறுத்துவேன்
உன் சுதந்திரத்திற்கு
குறுக்காக கோடுகள் கிழிப்பதை !

உன் பாதையும் என் பாதையும்
நம் பாதை என்றான பின்
உனக்கு முன்னால் ஓடி
உன் வழி மறைப்பது
வேலையத்த வேலையடி
வேறொன்றும் சொல்வதற்கில்லை !

           - இவண்
              பெரமு